செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தென்னை நார் துகள் பலகைகள்: முதல்முறையாக கேரளாவில் அறிமுகமாகும் ‘காயர் வுட்’ வீடு

கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள தென்னை நார் பலகைகளால் உருவாக்கப்பட்ட வீடு.
கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள தென்னை நார் பலகைகளால் உருவாக்கப்பட்ட வீடு.

மத்திய கயிறு வாரியத்தின் புதிய முயற்சி
இயற்கைச் சூழலுடன் வாழ மக்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். இயற்கை விவசாயம், மாடித் தோட்டம் என தொடங்கிய விழிப்புணர்வு, அடுத்தகட்டமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழ்விடங்களை அமைத்துக்கொள்வதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. சிறிய வீடாக இருந்தாலும், சுற்றிலும் இயற்கைச் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனால் தென்னை நார் துகள்களை மட்டுமே வைத்து, முதல்முறையாக இயற்கை வீட்டை உருவாக்கியுள்ளது மத்திய கயிறு வாரியம்.

மரங்களை அழித்து மூலப்பொருட்கள் எடுப்பதற்கு மாறாக, மரத்தை வளர்த்து மூலப் பொருள் பெறுவது தென்னையில் மட்டுமே. உலக அளவில் தேங்காய் நார் உற்பத்தியில் இலங்கைக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் கேரளத்தில் ஆலப்புழாவும், தமிழகத்தில் பொள்ளாச்சி, கன்னியாகுமரியும் அதிக தென்னை விளைச்சலைக் கொடுக்கின்றன. இயற்கை மீதான ஈர்ப்பினால் தென்னை மூலப் பொருட்களின் சந்தை வாய்ப்புகள் அதிகமாகி வருவதால், தென்னை நார் மூலம் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது.
விவசாயத்தில் மண்ணுக்கு மாற்றாகவும், வீட்டு உபயோகத்தில் மரத்துக்கு மாற்றாகவும் பயன்படும் தென்னை நார் மூலம், முதல்முறையாக வீடு ஒன்றை மத்திய கயிறு வாரியம் உருவாக்கி உள்ளது. கேரள பாணியிலான இந்த வீட்டில் சுவர், கதவு, ஜன்னல், தரை, தரை விரிப்புகள், அலங்கார விளக்குகள், தூண், உட்புறம் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்துமே தென்னை நார் மற்றும் நார் துகள்களால் உருவாக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் ஆலப்புழாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடு, தென்னை நார்த் தொழில் துறையில், மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என கயிறு வாரியத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
எளிதில் தீ பிடிக்காது
இதை வடிவமைத்துள்ள பெங்களூருவில் உள்ள மத்திய கயிறு தொழில்நுட்ப மையத்தின் இணை இயக்குநர் ஆர்.வாசுதேவ் கூறியதாவது: பயன்பாடுகளைப் பொருத்து 5 வகையான தென்னை நார் பலகைகள் தயாரிக்கப்படுகின்றன. மரத்துக்கு மாற்றாக, வலிமையானதாக, நீர்க் கசிவு இல்லாமல், எளிதில் தீ பிடிக்காத, எளிதில் மர வேலைப்பாடுகள் செய்யும் வகையில் இந்த பலகைகள் தயாராகின்றன. தற்போது உள்ள சூழலில் இயற்கைப் பொருட்களை விரும்புபவர்கள் தென்னை நார் பொருட்களை நாடி வருகின்றனர். மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தென்னை நார் மூலம் ஒட்டுமொத்த வீட்டையும் உருவாக்கி உள்ளோம் என்றார்.
உயரும் வருவாய்
மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: அதிகமாக பயன்படுத்தப்படும் ‘பிளைவுட் மர’ அட்டைகளுக்கு மாற்றாக தென்னை நார் பலகைகள் (காயர் போர்டு) பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பர்னிச்சர் துறையில் தென்னை நார் பயன்படுத்துவது அதிகமாகி உள்ளதையடுத்து, அதைக் கட்டுமானத்திலும் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதன் முதல் முயற்சிதான் இந்த வீடு. வரும் காலத்தில், ரயில்களில் பிளைவுட் மரப் பலகைகளுக்கு பதிலாகவும், சீதோஷ்ண நிலை மாறுபாடு அதிகம் உள்ள பகுதிகளில் வீடுகள் அமைத்துக் கொடுக்கவும் தென்னை நார் பலகைகளைப் பயன்படுத்த உள்ளோம். ரயில்வே துறையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தென்னை நார் அட்டையால் ஆன வீடுகளில் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். எளிதில் பிரித்து எடுத்துச் செல்ல முடியும் என்பதால் குளிர் பிரதேச ராணுவ முகாம்களில் பயன்படுத்த ஆலோசித்து வருகிறோம். குறைந்த முதலீட்டு வீடுகள் என்ற பெயரில், கேரளாவில் இந்த வீடுகள் விரைவில் விற்பனைக்கு வரும்.
யூரியாவுக்கு இணையாக நார்க் கழிவு உரம் தயாரிக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து தென்னை நார் ஜியோ டெக்ஸ் டைல் உற்பத்திக்கான ஆய்வுகள் நடக்கின்றன. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தென்னை நார்த் தொழிலானது ஆண்டுக்கு ரூ.1,650 கோடி வருவாயை ஈட்டியது. இப்போது ரூ.2000 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கு மூலகாரணமாக கோவையில் பொள்ளாச்சியும், கேரளத்தில் ஆலப்புழாவும் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
hindu

கருத்துகள் இல்லை: