செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் மருத்துவ நிபுணர் டி.எஸ்.கனகா அம்மையார்!

சியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், இந்த வயதிலும் – 1932 இல் பிறந்தவர் – நோயாளிகளுக்கும் ஆரோக்கிய சேவைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  யார் இவர் என்று நீங்கள் யோசிக்கும் முன் சொல்லிவிடுகிறேன். டாக்டர் டி.எஸ்.கனகா தான் இவர் 1990 ஆம் ஆண்டிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதை நிறுத்திவிட்டாலும் இன்னும் ஒரு முக்கியமான பணியில் மும்முரமாகவே இருக்கிறார். ‘பெருமூளைவாத நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு பயன்படும் Deep Brain Stimulation kit ஒன்றை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். உலகளவில் இது முதலாக இருக்கும். இதனை ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ விஞ்ஞான பல்கலைகழகத்தின் உயிரியப் பொறியாளர்கள் குழு மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றிருக்கிறார்கள். இதன் மூலம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும். போதை மருந்திற்கு அடிமையானவர்களை மீட்கவும் உதவும். குறைந்த செலவில் இதைச் செய்யலாம்’ என்று மிகவும் உற்சாகமாகப் பேசுகிறார்.


ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் தனக்கென ஓரிடம் பிடிக்க இவர் சந்தித்த சவால்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.  கல்வித்துறையில் துணை இயக்குனர் ஆகவும், சென்னை ஆசிரியர் கல்லூரியில் முதல்வர் ஆகவும் இருந்த திரு சந்தானகிருஷ்ணனின் எட்டு குழந்தைகளில் டாக்டர்கனகாவும் ஒருவர். தனது மகள் ஏதாவது ஒரு தொழிற்கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘நான் ஒரு பொறியியலாளர் ஆகவே வருவேன் என்று எப்போதும் நினைத்துக் கொள்வேன். ஆனால் என் அம்மாவிற்கு நான் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று ஆசை. என் அம்மாவின் ஆசையை நிறைவேற்றினேன். எனது அக்காவும் ஒரு மருத்துவர் தான். அக்காவின் கணவருக்கு வலிப்பு நோய் தாக்கியதால் எனக்கு நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் சிறப்பு கவனம் ஏற்பட்டது’, என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார்.

பல பெண் மருத்துவர்கள் பொது அறுவை சிகிச்சைப் படிப்பை தொடர விரும்பியபோதிலும், ஆண் மருத்துவர்களின் கிண்டலும், கேலியும் வேண்டுமென்றே பெண் மருத்துவர்களை தேர்வில் தோல்வி அடையச்செய்தலும் நடைபெற்று வந்ததால் பலர் இந்தப் படிப்பை பாதியில் விட்டுவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். இந்த வேளையில் தான் டாக்டர் கனகா தனது இடைவிடாத முயற்சியால் பலமுறை தேர்வு எழுதி சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஆபரேஷன் தியேட்டரில் நேரடி ஆபரேஷன் செய்ய விடாமல் தடுக்கப்பட்ட நாளிலிருந்து இந்தியாவின் முதன்முதலாக மூளையில் ஒரு மின்முனை கருவியை உட்பதிய வைத்த நரம்பியல் அறுவை சிகிச்சையாளர் என்ற பெருமையை 1975 இல் அடையும் வரை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இவர் மேற்கொண்ட பயணம் சாதாரணமானது இல்லை. எத்தனை யெத்தனையோ இடர்கள் வந்தபோதும் டாக்டர் கனகா தான் நினைத்ததை சாதித்தே முடித்தார்.

பேராசிரியர் திரு பி. ராமமூர்த்திக்கு (பிரபல நரம்பியல் மருத்துவராக பின்னாளில் அறியப்பட்டவர்) இவர் ஒரு கோடை விடுமுறையின் போது உதவியாளராகப் பணிபுரிந்தபோது அவர் அளித்த ஊக்கம் தன்னால் மறக்கமுடியாது என்று கூறுகிறார். அதேபோல இவரது ஆசிரியர்களுள் ஒருவரான திரு ஸ்ரீனிவாசன் ‘பெண் மருத்துவ மாணவர்களை அழ வைப்பவர்’ என்ற பெயர் பெற்றவர். அவரிடம் தான் வாங்கிய பாராட்டுக்களையும் மறக்க முடியாது என்கிறார். இவரது மூன்றாவது ஆண்டு இறுதியில் அவர் சொன்னாராம்: ‘ நீ என்னுடைய அத்தனை திட்டுகளையும் தாங்கிக் கொண்டு உன்னை இந்தத்துறையில் நிலைநிறுத்திக் கொண்டு விட்டாய். உன்னால் இனி எந்த வகையான இடர் வந்தாலும் தாங்கிக்கொள்ள முடியும். மருத்துவம் ஒரு பொறாமை பிடித்த பணியாள். உனக்கும், மருத்துவத்திற்கும் இடையில் எதுவும் வராமல் பார்த்துக்கொள்’ என்றாராம்!

முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தபின் ராணுவத்தில் இந்தோ-சீனா யுத்தத்தின்  போது பொதுஅறுவை சிகிச்சை சிறப்பு நிபுணராகப் பணியாற்றினார். புதுதில்லி இராணுவ மருத்துவமனையில் இரண்டு வருடங்கள் பணியாற்றிவிட்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்த அதே சமயம் அதே கல்லூரியில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் உதவிப் பேராசிரியராகவும் சேர்ந்தார்.

இந்த அமைப்புகளைத்தவிர, டாக்டர் கனகா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைச் சேர்ந்த தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்திலும், ஹிந்து மிஷன் மருத்துவ மனையிலும் பணியாற்றியுள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலும், வசதி குறைவானவர்களுக்கு என்று அமைந்திருக்கும் பல தொண்டு நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

பல வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார் டாக்டர் கனகா. முதன்முதலாக 1973 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டிற்கு சென்று வந்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற முதல் பெண் சீன மருத்துவர்களின் சந்திப்பின் போது வாழ்நாள் சாதனைக்காக உலக நரம்பியல் அமைப்பிடமிருந்து விருது வாங்கினார். அங்கு ஒரு ஆய்வுக் கட்டுரையை வாசித்த போது அவருக்கு வயது 70 ஐ தாண்டி இருந்தது.

மருத்துவராக மட்டுமல்ல ஒரு நல்ல மனுஷியாகவும் இருக்கிறார் டாக்டர் கனகா. தனது ஓய்விற்குப் பிறகு தனது குரோம்பேட்டை வீட்டின் அருகிலேயே சந்தானகிருஷ்ணன் பத்மாவதி ஆரோக்கிய நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். மருத்துவ சம்மந்தமான விரிவுரைகள், முதுமையைப் பற்றிய விழிப்புணர்வு, முதியவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணியாட்களுக்கான மருத்துவ பிரச்னை குறித்தும் அவ்வப்போது பல அறிஞர்களைக் கொண்டு இந்த நிலையத்தில் பேச வைக்கிறார்.

இவர் செய்த இன்னொரு சாதனையும் நம்மை வியக்க வைக்கிறது. இதுவரை அதிக தடவை இரத்த தானம் செய்த தனி நபர் என்கிற சாதனையை செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டுவரை 139 முறை இரத்த தானம் செய்திருக்கிறார்.

திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஒருபோதும் தனது பெற்றோர்கள் தன்னை வற்புறுத்தியது இல்லை என்கிறார் டாக்டர் கனகா. ‘எனக்குத் திருமணம் ஆகியிருந்தால் சொந்த வாழ்க்கை, மருத்துவம் இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும். இளம் வயதில் எங்களை விட்டுப் பிரிந்த எனது தம்பியை நான் அக்கறையுடன் கவனித்துக் கொண்ட விதத்தைப் பார்த்த என் அம்மா கல்யாணம் வேண்டாம் என்ற என் முடிவை ஆதரித்தார். நான் சேவை செய்யப் பிறந்தவள் என்பதை என் அம்மா உணர்ந்திருந்தார் என்று தோன்றுகிறது’  திருமதி மஞ்சுளா ரமேஷ் ‘சினேகிதி’ மார்ச் 2016 இதழில் வெளியான கட்டுரை

கருத்துகள் இல்லை: