திங்கள், 28 செப்டம்பர், 2015

சென்னையில் வைகோ உட்பட 1,000 பேர் கைது!

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் வைகோ. செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் வைகோ. இலங்கை தமிழர் விவகாரத்தில் உள்நாட்டு விசாரணையே போதும் என கூறும் அமெரிக்காவைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த விவகாரத்தில் உள்நாட்டு விசாரணையே போதும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் அறிவித்திருந்தன.
அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட 25-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று திரண்டனர். போராட்டத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
போராட்டத்தின்போது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அமெரிக்காவைக் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, துணை தூதரகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ உட்பட 1000 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
போராட்டம் குறித்து வைகோ கூறும்போது, ‘‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், உள்நாட்டு விசாரணையே போதும் என்று அமெரிக்கா கூறுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தப் போராட்டத்தின் மூலம் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டு சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இலங்கை மீதான இனப்படுகொலை விசாரணைக்கு அனைத்து நாடுகளும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பிறகு விடுவிக்கப்பட்டனர்.  /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: