ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம்.....திராவிடன் -9 ஏப்ரல் 1927 சுன்னாகம்


ராதா மனோகர் 
  திராவிடன் -9 ஏப்ரல் 1927 சுன்னாகம் யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் சுன்னாகம்
கீழ்கண்டிருக்கும் கனவான்கள் தாங்கள் இச்சங்கத்தின் போஷகர்களாக இருப்பதற்கு சம்மதப்பட்டு இருக்கிறார்கள்.
1. ஸ்ரீ மான் சேர் அம்பலவாணர் கனகசபை அவர்கள்
2. கௌரவ ஸ்ரீமான் துரைசாமி அவர்கள்.
3. கௌரவ ஸ்ரீ மான் எஸ் ராஜரத்தினம் அவர்கள்
4. கௌரவ ஸ்ரீ மான் தா மு. சபாரத்தினம் அவர்கள்
இப்பொழுது நாங்கள் சங்கம் தொடங்கி ஏறக்குறைய 3 மாதங்கள் ஆகிறது.

பள்ளிக்கூடம் கட்டுவதற்கான அலுவல்கள் நடந்து வருகிறது.. சங்கத்திற்கு புதிய அங்கத்தினர்கள் தொகையாக சேர்க்கிறார்கள்.
சென்ற மாதத்தில் மயிகம்பட்டி, மயிலணி என்னும் இடங்களில் கிளைச்சங்கங்கள் ஏற்படுத்த பட்டன.
அங்கத்தினர்கள் தயவு செய்து தங்கள் மாதாந்த கட்டணங்களை கொடுத்து ரசீது பெற்றுகொள்ளவும்.
சித்திரை மாதம் பள்ளிக்கூடத்திற்கு அத்திவாரம் போடுவதற்கு தீர்மானிக்க பட்டிருக்கிறது.
இதை குறித்த விஷயங்களாய் துண்டு பத்திரிகைகளில் காணலாம்.

விஷேச அறிக்கை!
இந்த யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்படும் தாழ்த்தப்படுமிருக்கும் சாதியர்களாகிய  நாங்கள்  சீர்திருத்தம் கல்வி இன்றி இருக்கும் நிலையை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
உங்களுக்கு உங்களை சீர்திருத்தி கொள்வதற்கும் மற்றைய சாதிகளை போலவே முன்னேற்றம் அடைய விருப்பம் இருந்தால் இச்சங்கத்தின் சேருங்கள்.
ஒரு சங்கத்தில் சேர்ந்து தாங்கள் ஐக்கியமாக இருந்து ஒத்துழைத்தால் எப்படி முன்னேற்றம் அடையாலாம் என்று சேர்ந்த பிறகுதான் விளங்கும்.
எங்களுடைய மக்களை படிப்பிப்பதற்காக ஆங்கிலமும் தமிழும் படிப்பிக்க கூடிய ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்துவது எங்களுடைய கோரிக்கை.

எங்களில் தட்டுக்கெட்டவர்களும் சேர்வதற்கு வசதியாக பிரவேச கட்டணமும் மாதாந்த கட்டணமும் சதம் 25 ஆக ஏற்பட்டிருக்கிறது.
போலி நியாயங்கள் பேசித்திரியும் வீணர்களின் வார்த்தையை நம்பி மோசம்போகாதீர்கள்.
எங்களுடைய கஷ்டங்களையும் நிர்பாக்கிய நிலைமையையும் யாவரும் அறியும்படியாகவும் எங்கள் முன்னேற்றத்திற்காக வேண்டிய வழியாகவும் சங்கத்தால் வெளிவரும் "திராவிடனை" ஆதரியுங்கள் .
திராவிடன் யாவராலும் வாங்கி வாசிக்கும் பொருட்டு செலவை கருதாது மிகவும் குறைந்த சந்தாவாக வருஷம் ஒன்றுக்கு தபாற் கூலி உட்பட  1-25 ஆகவும் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
சங்க கொம்மிற்றியார்

இந்த பதிவின் மூலம் திராவிடன் பத்திரிகை 1927 ஜனவரி மாதம் முதலாக வெளிவர தொடங்கி உள்ளது என்று தெரிகிறது .



கருத்துகள் இல்லை: