திங்கள், 3 ஏப்ரல், 2023

திரு இராம அரங்கண்ணல் - செலவின்றி 2 முறை மயிலாப்பூர் எம்.எல்.ஏ ஆனவர் !

Aram Online - -சாவித்திரி கண்ணன் :  திமுகவின் ஆரம்ப காலத் தூண்களில் முக்கியமானவர் இராம.அரங்கண்ணல். பெரியார், அண்ணாவிடம் குருகுலவாசம் செய்தவர்.
தனி மனித ஒழுக்கம்,  எதிரிகளையும் நண்பனாக்கிடும் சுபாவம், பொதுநலத் தொண்டு, நேர்மை ஆகியவற்றைக் கொண்ட அரங்கண்ணல் அரசியலிலும், சினிமாவிலும் சந்தித்த சவால்கள் சுவையானவை..!
சிறுவயதில் தீவிர காங்கிரஸ் பற்றாளராக இருந்த இராம.அரங்கண்ணல் தன் தமிழ் பற்றாலும், திருவாரூர் பள்ளித் தோழன் கலைஞர்  கருணாநிதியின் நட்பாலும் திராவிட இயக்கத்தின் பக்கம் நகர்கிறார்.


15 வயதிலேயே அண்ணா, பெரியார் ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது.
இடையில் அண்ணாமலை பல்கலை மாணவனாக இருந்த போது அந்தக் கால கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இயக்க முன்னோடிகளுடனும் பழக்கமாகிறது.
இதைத் தொடர்ந்து பெரியார் அண்ணாவிடம் குருகுலவாசம் செய்து திராவிட இயக்கத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆளுமை தான் அரங்கண்ணல்!

தன் வரலாறைச் சொல்லும் நிலையிலும் கூட, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் மற்ற பல ஆளுமைகளை பெருமைபடுத்தி உள்ளார் அரங்கண்ணல்.  அண்ணாவின் குண நலன்கள், இயல்புகள், ஆளுமைத் திறன் ஆகியவற்றை மிகத் தெளிவாக உணர்வதற்கு இந்த நூல் உதவுகிறது.

திராவிட இயக்கத்தின் மீது தீரா வெறுப்பும், பெரியார், அண்ணா மீது வன்மமும் கொண்டவர்கள் கூட, இந்த நூலை படித்துவிட்டால் நிச்சயம் தங்கள் நிலைபாட்டை மறு பரிசீலனைக்கு உட்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை! அந்த அளவுக்கு பெரியாரையும், அண்ணவையும் தன் அனுபவங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் வழியே கிறிஸ்டல் கிளியராக ஸ்கேன் செய்து நம்மிடம் காட்டுகிறார் அரங்கண்ணல்! பல இடங்கள் சிலிர்க்க வைக்கிறது, கண்களில் நீர் உகுக்க வைக்கும் நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லை.
சிவாஜியின் திருமணத்தின் போது அரங்கண்ணல், சிவாஜி, பி.ஏ.பெருமாள், கண்னதாசன், கலைஞர், எம்.ஜி.ஆர், ஏ.எஸ்.ஏ.சாமி

திராவிட இயக்கம், ஏழை,எளிய அடித்தட்டு மக்களிடம் எப்படி ஆழமாக வேரூன்றியது என ஆராய விரும்புவர்கள் இந்த நூலைப் படித்தாலே போதுமானது!

கலைஞர் கருணாநிதி முதன்முதலாக சென்னை வந்த போது சென்னை பத்திரிக்கை ஒன்றில் துணை ஆசிரியராக இருந்த அரங்கண்ணலின் 581 எண் கொண்ட பாரதி சாலை (அன்று பைகிராப்ட்ஸ் ரோடு) ரூமிற்கு தான் வந்து தங்கினார் என்பதும், கலைஞர் கருணாநிதிக்கு சென்னையை சுற்றிக் காட்டி மகிழ்ந்த நினைவுகளையும் சுவைபடச் சொல்லி உள்ளார்! அதே போல சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பிருந்த ஆரம்ப கால எம்.ஜி.ஆரையும் அழகாக பதிவு செய்துள்ளார்.

 கலைஞர் கருணாநிதியையும், கண்ணதாசனையும், சிவாஜியையும் ஊர், ஊராக அழைத்துக் கொண்டு திமுக வளர்ச்சிக்காக நாடகங்கள் போட்ட நிகழ்வுகள் எல்லாம் படிக்கப் படிக்க மிக இனிமையாக உள்ளன!

ஏழை, எளிய மக்களின் பால் பேரன்பு கொண்ட இராம. அரங்கண்ணல் அவர்கள் தான் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்று உருவாகக் காரணமானவர். மிக குறுகிய காலத்திலேயே சுமார் 30,000 தரமான வீடுகளை கட்டியவர். ஐம்பதாண்டுகளுக்கு முன் அவரது தலைமையில் கட்டப்பட்ட வீடுகள் இன்றும் உறுதியோடு நிற்கின்றன! ஆனால், அவருக்கு பிறகு உருவான வீடுகள் பலவும் 25 முதல் 40 ஆண்டுகளில் வலுவிழந்துவிட்டன என்பது ஒன்றே அவரது நிர்வாகத் திறமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாகும்.
அண்ணாவிற்கு பின்புறம் இரண்டாம் வரிசையில் அரங்கண்ணல்,

மயிலாப்பூர் தொகுதிக்கு இரண்டு முறை இவர் வேட்பாளராக நின்ற போது செய்த செலவில்லாத தேர்தல் பிரச்சாரங்களும், தேனீர் செலவைக் கூட எதிர்பாராமல் திமுக தொண்டர்கள் சொந்த செலவில் செய்த பிரச்சாரங்களும் பிரமிக்க வைக்கின்றன! சுமார் ஒன்பது ஆண்டுகள் மயிலாப்பூர் தொகுதியில் இவர் செய்த சேவைகள் ஒரு எம்.எல்.ஏ எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இன்று வரை பேசப்படுகின்றன! அண்ணா தன் அமைச்சரவையில் இவருக்கு பார்லிமெண்ட் செகரட்டரி என ஒரு பதவி உருவாக்கி கவர்னரிடமும் அனுமதி பெற்ற நிலையில் அதை உறுதியாக மறுத்து விட்டார். அப்போது இந்த பதவி மட்டுமல்ல, அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்குமே ரூ500 தான் சம்பளம். அதனால், ‘சொந்த வாழ்க்கையில் பொருளாதார பலம் இல்லாமல் பெரும் பொறுப்பை ஏற்பது சரிபடாது’ எனச் சொல்லி மறுத்துவிட்டார்! எப்படிப்பட்ட உத்தமர்கள் எல்லாம் வாழ்ந்துள்ளார்கள்!
அரங்கண்ணலின் முதல் தயாரிப்பான பச்சை விளக்கு

1944 தொடங்கி அண்ணா இறக்கும் கடைசி தருணம் வரை விரிவாக சொல்லப்பட்டு வரும் கழக வரலாற்றுடன் இணைந்த இந்த தன் வரலாற்று நூல் கலைஞர் கருணாநிதி தலை எடுக்கத் தொடங்கிய காலகட்டத்தையும், எம்.ஜி.ஆர் பிரிந்து தலைவரான காலகட்டத்தையும் விரிவாகப் பேசவில்லை!

ஈ.வி.கே.சம்பத் குறித்து ஒரு தெளிவான பிம்பத்தை நமக்கு தருகிறார் அரங்கண்ணல். அதே சமயம் சம்பத் விவகாரத்தில் கருணாநிதியின் பங்கு பாத்திரத்தை சொல்லாமல் தவிர்த்துவிட்டாரா? அல்லது பதிப்பித்தவர்கள் அரசியல் அழுத்தங்கள் காரணமாக எழுதப்பட்டதை தவிர்த்துவிட்டனரா..? என்று தெரியவில்லை.

அதே போல கலைஞர்  கருணாநிதி தலைமைக்கு வந்த பிறகு நடந்தவைகளை இன்னும் சற்று விரிவாக எழுதி இருக்கலாமே என்ற ஆதங்கம் அதிகம் தோன்றுகிறது. ஒருவேளை அவரால் எழுதப்பட்டு தவிர்க்கப்பட்டுவிட்டதோ என எண்ணாமல் இருக்க முடியவில்லை. பிற்காலத்திய நிகழ்வுகள் தொடர்ச்சியின்றி ஜம்பாகி, ஜெட் வேகத்தில் சொல்லப்பட்டவையாகத் தான் உள்ளன!

அரசியலில் மட்டுமின்றி திரைத் துறையிலும் சில சாதனைகளைச் செய்துள்ளார் அரங்கண்ணல். சிவாஜியை வைத்து பீம்சிங் இயக்கத்தில் பச்சை விளக்கு படம் தயாரித்தவர் அரங்கண்ணல். பீம்சிங்கின் ஆரம்ப காலப் படங்கள் பதிபக்தி, பாவமன்னிப்பு ஆகிய அனைத்துக்கும் கதை இலாகாவின் ஆஸ்தான வித்வான் இவர் தான்! காரணம், இவர் எழுதிய கதை, வசனம் எழுதிய ‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ படம் மூலமாகத் தான் பீம்சிங்கே இயக்குனரானார். இந்தப் படத்தில் தான் விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்ற இசை இரட்டையர்களின் சாம்ராஜ்யம் ஆரம்பமானது. பி.சுசீலா முதல் தமிழ் பாடல் பாடியதும் இந்தப் படத்தில் தான்!

இப்படி ஆரம்பித்த இவரது திரை உலக சாம்ராஜ்யம் அரசியல் ஈடுபாடுகள் காரணமாக அவ்வப்போது தோய்ந்து போனாலும், இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு முழு சுதந்திரம் தந்து இவர் தயாரித்த பல படங்கள் பெரிய ஹிட் தந்தன! அனுபவி ராஜா அனுபவி, தாமரை நெஞ்சம், பூவா தலையா, எதிர் நீச்சல், நவக்கிரகம், அவள் ஒரு தொடர் கதை, மரோ சரித்திரா… என திரையிலும் சரித்திரம் படைத்துள்ளார்.தெலுங்கு, கன்னடம், மலையாளம் என திராவிட மொழிகளிலும் சினிமா தயாரித்துள்ளார்.

ஆனால், அவரது திரை உலக சம்பவங்கள் மிகக் குறைவாகவே இதில் பதிவாகியுள்ளன! வேறு யாராவது அரங்கண்ணலைப் பற்றி மேலும் சொல்லமாட்டார்களா..? என ஏங்க வைக்கின்றன! தன் வரலாற்று நூல்களில் இராம.அரங்கண்ணலின் ‘நினைவுகள்’ நூலுக்கு என்றென்றும் ஒரு முக்கியத்துவம் இருக்கும்.

நூல் விமர்சனம்; சாவித்திரி கண்ணன்
இன்று இராம.அரங்கண்ணலின் 95 வது பிறந்த தினம்.
நூல்; நினைவுகள்
ஆசிரியர்; இராம.அரங்கண்ணல்
வெளியீடு; தளபதி பதிப்பகம்,
விலை; ரூ 500
எண்;1, அன்னை நாகம்மை தெரு
மந்தவெளி, சென்னை -28
பேச; 98410 97078

கருத்துகள் இல்லை: