மாலைமலர் : சென்னையில் உள்ள கோயில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது, நீரில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை சுவாமியைப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது சுவாமி பல்லக்கு மூவரசம்பேட்டை பகுதியிலுள்ள கோயில் குளத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் குளத்தில் மீட்புப் பணி
கோயில் குருக்களுடன், 20-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் குளத்தில் இறங்கினர். குளத்தில் இறங்கிய ஒருவர் நீரில் சிக்கிப் போராடுவதைப் பார்த்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற நான்கு பேர் சென்றிருக்கின்றனர். இதில் பரிதாபமாக அந்த ஐவரும் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவமறிந்து விரைந்து வந்த வேளச்சேரி, கிண்டி பகுதி தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி மூழ்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தீவிர தேடுதலில், நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும், ஒருவரின் உடல் மட்டும் நீண்ட தேடுதலுக்குப் பிறகு மீட்கப்படது. விபத்து நடந்த இடத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
சங்கர் ஜிவால் நேரடியாக ஆய்வு
விசாரணையில், உயிரிழந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ராகவன் (18), மணிஷ் (18), பானேஷ்( 20), யோகேஸ்வரன் (23), சூர்யா (24) என்பது தெரியவந்திருக்கிறது.
அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பழவந்தாங்கல் பகுதி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நிவாரணம் அறிவிப்பு
கோயில் குளத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக