செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

ஓடும் ரயிலில் மோடியின் பக்தையோடு ஒரு நேருக்கு நேர் !

marina2தமிழகமே போலீசின் அட்டூழியத்தை கண்டது....  மோடியைத் திட்டுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் இங்கே முழு தமிழகமே சமூக விரோதியாக இருக்கிறதே? அதை என்ன செய்ய?
மிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு அடங்க மறுத்த தமிழகம் எழுச்சியுடன் போராடியதை பார்த்தோம். அந்த எழுச்சியை அடக்குவதற்கு போலீசை ஏவி வன்முறை வெறியாட்டம் போட்டது அரசு. தமிழகமே போலீசின் அட்டூழியத்தை கண்டது. போலீசு மீதிருந்த மிச்சசொச்ச நம்பிக்கைகளும் தகர்ந்தன. தட்டிக்கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்ட போலீசின் ரவுடித்தனத்தை கண்டித்து ’போலீசு ராஜ்ஜியம்.. எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில்’ என்கிற தலைப்பில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைத்திருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக சென்னை முழுவதும் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நாங்கள் சில பெண் தோழர்கள் ரயில் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தோம்.  சென்னையின் புறநகர் ரயில் வழித்தடங்களில் மாதந்தோறும் நாங்கள் பிரச்சாரம் செய்வது வழக்கம். தமிழக உரிமையை மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் அடியாளாக செயல்படும் தமிழக போலீசைக் கண்டித்தும் பேசும் போது மக்கள் கூர்ந்து கேட்டதோடு பெரும் ஆதரவளித்தனர். நிதியுதவி செய்தனர்.

காலை முதல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தோம். மதியம் ஒரு மணி  அளவில் பிரச்சாரம் முடிக்க நினைத்தோம். அப்போது ரயிலின் கடைசி பெட்டியில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரே அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கைபேசியில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். மூணு லேடிஸ் இருக்காங்க, லாஸ்ட் கம்பார்ட்மெண்ட்டுக்கு சீக்கீரம் வாங்க என்றார். காவல் துறையை சேர்ந்தவர் மஃப்டியில் வந்திருக்கிறார் என்று நினைத்தோம். ரயில்வே போலிசால் பிரச்சாரத்திற்கு அவ்வப்போது இடையூறு நடப்பதுண்டு. அவ்வப்போது அதை பேசி சரி செய்வோம்.
அச்சமயம் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இரண்டு நிறுத்தங்கள் தாண்டி வரவிருந்த கோடம்பாக்கம் ரயில்நிலையத்தில் இறங்கத் தயாராக நின்றோம்.
திடீரென அந்த பெண் இருக்கையை விட்டு எழுந்து எங்களுக்கருகில் வந்து நின்று கொண்டார். சைதாப்பேட்டையில் வண்டி நின்றது. வாசற்படியில் நின்றுகொண்டு பிளாட்பாரத்தை நோக்கி கையை ஆட்டி இங்கே வாங்க இங்கே வங்க என்று யாரையோ அழைத்தார். சில நொடிகளில் வண்டி கிளம்பியது, அப்போது வேகமாக ஓடிவந்த ஒரு ரயில்வே காவலர் கம்பியை தொற்றிக்கொண்டு உள்ளே வந்தார். காவலர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்.
அவரிடம் அந்த பெண் எங்களைக்  காட்டி இந்த லேடிஸ் தான் அரஸ்ட் பண்ணுங்க என்றார். அத்துடன் ஒரு தோழர் வைத்திருந்த உண்டியலை பாய்ந்து பிடிங்கி அதை மேலே தூக்கிக்காட்டி பாருங்க, எல்லோரும் பாருங்க இவங்க எல்லோர்கிட்டயும் கட்டாயமா காசு வாங்குறாங்க, பேசஞ்சர்ஸ் நீங்களே கேளுங்க என்றார். பிறகு போலீஸ்காரரிடம் திரும்பி இந்தியில் ஏதோ கூறினார்.
chennai
மாணவர்கள்னு சொல்லி காசு கேக்குறாங்க, அதுமட்டுமில்லாம இவங்க பேசுறது தொந்தரவா இருக்கு – மாதிரிப் படம்
அந்த பெண் உண்டியலை பிடுங்கிய அதே வேகத்தில் தோழர் மீண்டும் அதை பிடுங்கினார். இது போராட்டத்திற்காக மக்கள் கொடுத்த நிதி. உண்டியல் மேல் கை வைத்தால் மரியாதை கெட்டுவிடும். உனக்கு என்ன வேண்டுமோ அதை எங்களிடம் கேள் என்று குரலை உயர்த்தியதும், அருகில் நின்றுகொண்டிருந்த காவலர் லத்தியை ஒங்கிக் கொண்டு அடிப்பது போல தோழருக்கு அருகில் வந்து இந்தியில் மிரட்டினார். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு தோழர் எதுக்கு அடிக்கிற மாதிரி பாய்றீங்க? நாங்க என்ன பிரச்சாரம் பண்றோம்னு தெரியுமா உங்களுக்கு? என்றார்.
அதற்கு அவர் “தமிழ் நஹி” என்றார்.
”எங்களுக்கும் இந்தி நஹி. இது தமிழ்நாடு, தமிழ்ல தான் பேசுவோம். தமிழ் போலீஸ்காரங்களை வரச்சொல்லு” என்றதும் என்ன சொல்வதென்று தெரியாமல் அவர் திகைத்தார்.
நாங்கள் உடனடியாக மக்களிடம் திரும்பி துண்டறிக்கையை காட்டி “நாங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மெரினா போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய வன்முறைத் தாக்குதலை கண்டித்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். எங்கள் அமைப்பு தேர்தலில் பங்கேற்காத அமைப்பு. தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைக்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தி வருகிறோம். மக்கள் தரும் நிதியிலிருந்து தான் அனைத்து போராட்டங்களையும் நடத்துகிறோம். நாங்கள் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் நீங்கள் கூறுங்கள்” என்று கூறிய மறுகணமே பெட்டியிலிருந்த மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சாதாரண அடித்தட்டு மக்கள் என்று அனைவரும் திபுதிபுவென எங்களை நோக்கித் திரண்டனர்.
வந்த வேகத்தில் சிலர் அந்த பெண்ணை நோக்கி ”எதுக்குமா நீ இந்த கத்து கத்துற? உனக்கு என்ன பிரச்சனை, எதுக்காக போலீசை கூட்டிட்டு வந்திருக்க? இவங்களை பத்தி உனக்கு தெரியுமா, எங்களுக்குத் தெரியும் பேசாம எறங்கி போம்மா” என்றனர்.
உடனே அந்த பெண் ”கட்டாயப்படுத்தி காசு கேக்குறாங்க, பேசஞ்சர்ஸ் நீங்க கேக்க மாட்டீங்களா” என்றார். “அவங்க யாரையும் கட்டாயப்படுத்தி கேக்கமாட்டாங்க. எங்களுக்கு எல்லாம் தெரியும். உனக்கு கொடுக்க விருப்பம்னா கொடு இல்லைன்னா அமைதியா இரு” என்றார் ஒருவர்.
images
அவங்க அப்படித்தான் பேசுவாங்க பிரச்சாரம் பண்ணுவாங்க, நாங்களும் காசு போடுவோம். உனக்கென்ன இப்ப? ஒன் வேலையை பாத்துக்கிட்டு போ.
அந்தப் பெண்ணோ சளைக்காமல் ”மாணவர்கள்னு சொல்லி காசு கேக்குறாங்க, அதுமட்டுமில்லாம இவங்க பேசுறது தொந்தரவா இருக்கு” என்றார். அவர் பேசி முடிப்பதற்குள் முன்னால் வந்த ஒருவர் ” நிறுத்துமா சும்மா கத்தாத… நீ பேசுறதுதான் எங்களுக்கு தொந்தரவா இருக்கு ஒன் வேலை என்னவோ அதை பார்த்துட்டு போம்மா” என்றார்.
அடுத்து சில இளைஞர்கள் “அவங்க எப்ப மாணவர்கள்னு சொன்னாங்க? மக்கள் அதிகாரம்னு தான் சொன்னாங்க. அவங்க அப்படித்தான் பேசுவாங்க. பிரச்சாரம் பண்ணுவாங்க, நாங்களும் காசு போடுவோம். உனக்கென்ன இப்ப? ஒன் வேலையை பாத்துக்கிட்டு போ. அவங்க போகமாட்டாங்க நீ கெளம்பு முதல்ல. அக்கா நீங்க பேசுங்கக்கா” என்று சொல்லி நிதி போட்டனர்.
சில நிமிடங்களில் பெட்டியில் இருந்த மொத்த மக்களும் அவருக்கு எதிராக திரும்பியது, எனினும் அவர் சளைக்கவில்லை.
மோடியை பத்தி எதுக்கு தப்பு தப்பா பேசுறீங்க என்றார்.
”நீ BJP தானே ? மோடி அரசு தொடர்ச்சியா தமிழ்நாட்டுக்கு எதிரா செயல்படுதே அதை ஆதரிக்கிறியா ? போலீசு அடிச்சதையும், குடிசையை கொளுத்தினதையும் சரின்னு சொல்லுறியா” என்று ஒரு தோழர் கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்க வாய் திறப்பதற்குள் உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து அந்தப் பெண்ணை நோக்கி ஒருமையில் பேசத் துவங்கிவிட்டார்.
”ஏய்.. மரியாதையா இறங்கிப் போய்டு. நீ யாருன்னு எங்களுக்குத் தெரியும். அரசியலே சாக்கடையா கெடக்கு இதுல அவனைப் பேசாத இவனைப் பேசாதன்னு வந்துட்ட. எல்லாத்தை பத்தியும் தான் பேசுவாங்க. மரியாதையா இறங்கிப் போய்டு” என்றார்.
அவருக்கு எதிராக பேசிய அனைவரும் எங்களுக்கு அருகில் வந்து நின்று கொண்டனர். மொழி புரியாவிட்டாலும் நடந்துகொண்டிருந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த ரயில்வே காவலருக்கு, மக்கள் தோழர்களுக்கு ஆதரவாகவும் அந்த பெண்ணுக்கு எதிராகவும் பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டதால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தமிழக காவலர்கள் இருவர் ஏறினர். லத்தியை சுழட்டியவாறே என்ன பிரச்சனை இங்கே என்றனர்.
அந்த பெண்ணோ நீங்களாவது கேளுங்க சார் என்று எங்களை நோக்கி கையை காட்டி பொங்கினார். நாங்கள் பதில் கூற வாயெடுப்பதற்குள் சுற்றி நின்றவர்கள் நீங்க அமைதியா இருங்கம்மா நாங்க பேசிக்கிறோம் என்று கூறிவிட்டு காவலர்களிடம் பேசினர். முதல்ல அந்தம்மாவை எறக்கி விடுங்க சார். இவங்களால எங்களுக்கெல்லாம் ரொம்ப தொந்தரவா இருக்கு. இவங்க மேல எந்த தப்பும் இல்ல என்றனர். அதற்கு பிறகும் கூட அந்தப் பெண்  கத்தி கூச்சல் போடுவதை நிறுத்தவில்லை.
”என்னை கட்டாயப்படுத்தி காசு கேக்குறாங்க சார். மாணவர்கள்னு பொய் சொல்றாங்க” என்று மறுபடியும் பழைய பொய்யையே கூறினார். ஆனால் மொத்த கூட்டமும் அவருக்கு எதிராக பேசுவதைப் பார்த்த காவலர்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இறங்கிக் கொண்டனர். பல திசைகளிலிருந்தும் மக்கள் அவரை தாளித்துக்கொண்டிருந்தனர்.
எங்களிடம் வந்த சில இளைஞர்கள் “அக்கா நீங்க எங்க போகனும்? ” என்றனர். “கோடம்பாக்கம்பா” என்றோம்.
பாத்துப் போங்கக்கா எதுக்கும் பயப்படாதீங்க என்றனர். பலரும் பலவிதமாக ஆறுதல் கூறி உற்சாகமூட்டினர். வண்டி கோடம்பாக்கத்திற்குள் நுழைந்தது. மொத்த பெட்டியும் எங்களுக்கு ஆதரவாக பேசி வழியனுப்பிக்கொண்டிருந்ததை பார்த்ததும் அந்த பெண்ணின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. நாங்கள் இறங்கிய அதே இடத்தில் அவரும் இறங்கினார்.வேறு எங்கோ இறங்க வேண்டியவர் குழம்பி போய் எங்களுடனே இறங்கிவிட்டார் என்று தவறாக நினைத்துவிட்டோம்.
railway-station
இல்ல சார் இவங்க எல்லாத்தையும் மிரட்டி காசு கேக்குறாங்க – மாதிரிப் படம்
வண்டியை விட்டு இறங்கிய உடனே பிளாட்பாரத்தில் உட்காந்திருந்தவர்களை நோக்கி சத்தமாக கத்தி இவங்க எல்லாம் கிறிஸ்டியன் ஆளுங்க டிரைன்ல வந்து பிச்சை எடுக்குறாங்க. எல்லோரும் வந்து கேளுங்க என்றார்.
பிளாட்பாரத்திலாவது தனக்கு ஆதரவாக வருவார்கள் என்று நினைத்தார். ஆனால் உட்கார்ந்திருந்த அனைவரும் அவரை வித்தியாசமாக பார்த்தனரே தவிர எழக்கூடவில்லை. ரயில் கிளம்பத் தயாராக இருந்தது. நாங்கள் வந்த பெட்டியின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் அந்த பெண் கீழேயும் இறங்கி பிரச்சினை செய்துகொண்டிருப்பதை பார்த்துவிட்டு கையை நீட்டி எச்சரித்தனர். ரயில் கிளம்பியது.
” ஏய்…  நீ கீழே இறங்கியும் கத்திக்கிட்டு இருக்கியா… அடிவாங்காம போகமாட்டியா மரியாதையா ஓடிடு” என்று வண்டி பிளாட்பாரத்தைவிட்டு கடக்கும் வரை பல்வேறு வார்த்தைகளில் திட்டிக்கொண்டே சென்றனர்.
நாங்கள் உடனே துண்டறிக்கையை உயர்த்திக்காட்டி பிளாட்பார்மில் அமர்ந்திருந்த மக்களிடம் எங்களை அறிமுகம் செய்துகொண்டு என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறோம், என்ன பிரச்சாரம் செய்கிறோம் என்பதை விளக்கினோம். நாங்கள் விளக்கிக்கொண்டிருக்கும் போதே ”இல்ல இல்ல.. இவங்க பொய் சொல்றாங்க இவங்க கிறிஸ்டின்ல ஆளுங்க” என்கிற பொய்யை மீண்டும் கூறினார். அவர் சத்தம் போட்டு முடித்ததும் அமர்ந்திருந்த இருவர் எழுந்து அவர் அருகே சென்று “நீங்க தப்பா புரிஞ்சிட்ருக்கீங்கம்மா. இவங்க கிறிஸ்டின் பிரச்சாரம் செய்யலை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவங்க. இவங்க டிரெய்ன்ல பிரச்சாரம் பண்ணுவாங்க எங்களுக்குத் தெரியும்” என்றனர் பொறுமையாக.
தொடர்ச்சியாக அவமானத்திற்கு மேல் அவமானத்தை சந்தித்து வந்தவர் பிளாட்பாரத்திலும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தனது முயற்சியில் சோர்ந்துவிடாமல் கத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக எங்களைச் சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது.
”இல்ல சார் இவங்க எல்லாத்தையும் மிரட்டி காசு கேக்குறாங்க” என்றார்.
அதற்கு கூட்டத்திலிருந்த மற்றொருவர் கோபமாக பதிலளித்தார். “அவங்க அப்படியெல்லாம் கேக்க மாட்டாங்கம்மா உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு இப்படி கத்துற?” என்றார்.
அங்கேயும் தன்னுடைய வேலை எடுபடவில்லை என்பதை உணர்ந்திருந்தாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதேதோ பேசினார். மக்களும் அவருக்கு சளைக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தனர். அனைவருமே தனக்கு எதிராக பேசிக்கொண்டிருந்ததால் சற்று தள்ளி நின்று நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு (தோற்றத்தில் பார்ப்பனர் போன்ற) பையனை நோக்கி சென்றவர் நீயாவது வந்து கேளுப்பா என்றார். அந்த பையனோ அந்தப் பெண் தன்னை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்ததுமே ஓடிவிட்டான்.
இறுதியாக அந்தப் பெண்ணிடம் எச்சரித்தோம். நீங்க யார், எதுக்காக இப்படி துள்றீங்கன்னு எங்களுக்குத் தெரியும். இது தமிழ்நாடு, புதிய தமிழ்நாடு. இனிமேலும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி கும்பலுக்கு இங்கே இடமில்லை. குஜராத் வேற தமிழ்நாடு வேற. ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சமாதியே தமிழ்நாட்ல தான். இது பெரியார் பிறந்த மண்.  என்று கூறியதும் அவர் கர்ண கொடூரமாக முகத்தை வைத்துக் கொண்டு வெளியேறி விட்டார்.
அவர் யார்? அமெரிக்காவோ, இல்லை மயிலாப்பூரோ தெரியவில்லை. ஆனால் ரயில்களில் தோழர்கள் செய்யும் பிரச்சாரத்தை இப்போதுதான் முதல் முதலாக பார்க்கிறார். மெரினா எழுச்சியில் மாணவர் – இளைஞர்களிடம் மோடி வறுபடுவதை நேரிலோ இல்லை தொலைக்காட்சியிலோ அவர் பார்த்திருக்க மாட்டார். அல்லது அந்நேரம் எஸ்.வி.சேகர் நாடகத்திற்கு சென்று சிரித்து விட்டு வந்திருப்பார். இங்கே ரயிலில் பா.ஜ.க அரசை, மோடியை எதிர்த்தும், போலீசைக் கண்டித்தும் பேசுவது அவருக்கு தூக்கி வாறிப் போட்டிருக்கும்.
மோடியை இப்படி பகிரங்கமாக எதிர்ப்பதை எப்படி விட்டு வைப்பது என்ற ‘கடமை’ உணர்வுடன் போலீசை வரவழைத்தார். மக்களிடம் பேசினார். இறுதியால் அனாதையாக புலம்பிக் கொண்டு வெளியேறினார். இப்போது அவர் என்ன நினைப்பார்? தமிழகத்தில் இராணுவ ஆட்சியை அமல்படுத்தி தோழர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்வதற்கு பல்வேறு அரசு துறைகளுக்கு மனு எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனாலும் என்ன?  மோடியைத் திட்டுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் இங்கே முழு தமிழகமே சமூக விரோதியாக இருக்கிறதே? அதை என்ன செய்ய?
– மக்கள் அதிகாரம்
சென்னை.

கருத்துகள் இல்லை: