செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் கூறிய சின்னம்மா கதை

திருச்சி: திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் - லதா தம்பதியர் மகள் ஸ்ரீஜனனிக்கும், விழுப்புரம் மாவட்டம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியர் மகன் டாக்டர் விவேக்கிற்கும் திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நேற்று திருமணம் நடந்தது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில், செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:கடந்த சில தினங்களாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து வாட்ஸ் அப்பில் ஏராளமான கேலியான, கிண்டலான தகவல்கள் உலா வருகின்றன. நான் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேச விரும்பவில்லை.


ஆனால் ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். ஒரு ஊரில் வறண்ட ஆறு ஒன்று இருந்தது. அந்த ஆற்றில் கிடந்த பெரிய மாமரத்தின் மூலம் மக்கள் அக்கரைக்கு சென்று வந்தனர். திடீரென அந்த ஆற்றில் வெள்ளம் வந்து பெரிய மாமரம் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் மற்றொரு சின்ன மாமரம் அந்த ஆற்றில் மிதந்து வந்தது. இதையடுத்து சிலர் அதில் ஏறி ஆற்றைக் கடக்க முயன்றனர். சிறிது தூரம் சென்ற பிறகுதான் அது சின்ன மா மரமல்ல. முதலை என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் கரையில் நின்றவர்களிடம் காப்பாற்றுங்கள் என கூறினர். கரையில் இருந்தவர்கள் நல்ல படகு ஒன்று வரும். அதில் ஏறி உங்களை வந்து காப்பாற்ற வருகிறோம். நீங்கள் அதுவரை உயிருடன் இருந்தால் உங்களை காப்பாற்றுவோம் என்றனர்.

இதேபோல் ஒருவர் பஸ்சில் பயணம் செய்தார். அது பெண்கள் சீட், அந்த சீட்டுக்கு பெண்கள் வந்ததும், அந்த ஆண் எழுந்து வேறு ஒரு சீட்டுக்கு போனார். அங்கும் ஒரு பெண் வந்து விட்டார். அந்த சீட்டையும் விட்டு அப்போது அவர் எழுந்து போய் விட்டார்.ஒரு பெண் தனது கணவரிடம் சொல்கிறார். நான் இறந்து போய் விட்டால் பெண் பணியாளரை வேலையில் வைத்துக் கொள்ளாதீர்கள், வேலையில் இருந்து நீக்கி விடுங்கள் என்கிறார். அதற்கு அந்த கணவர் ஏன் என்று கேட்டதற்கு, நம் பிள்ளைகள் அந்த பணியாளரை நாளடைவில் சின்னம்மா என்று அழைக்கும் நிலை வந்து விடும் என்கிறார். இந்த நிலை தான் இன்று தமிழகத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. இதை அரசியலோடு கலந்து கொள்ளக்கூடாது.

இப்போது தமிழகத்தில் ஒரேயொரு ஓட்டுக்கு 3 சி.எம்மை ( முதல்வரை) பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலை தான் இன்று தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இதை அரசியலோடு கலந்து கொள்ளக்கூடாது. வாழ்க்கையும் ஒரு படகுதான். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை சந்தித்து மணமக்கள் வெற்றிக்காக பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் வாய்ப்பு’

திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே தமிழகம் பாலைவனமாக இருந்தது. தற்போது முதல்வர் பதவிக்காக நடைபெறும் போட்டி கேவலமான, கோமாளி கூத்தாக உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், 4வது முறையாக ஓபிஎஸ் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் தொடர்ந்த தள்ளி வைக்கப்படுவது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  தினகரன்

கருத்துகள் இல்லை: