சனி, 31 அக்டோபர், 2015

கிறிஸ்தவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்...லெபனானில் அவர்கள் சிறுபான்மையாகி விட்டார்கள்.......


வில்லியம் டேல்ரிம்பிள்  :tamil.thehindu.com/opinion/columns :
அரபு கிறிஸ்தவர்களின் கண்ணீர்க் கதை! தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாகப் புகலிடம் தேடிச் செல்லும் அரபு கிறிஸ்தவர்களின் கண்ணீர்க் கதை.
அரபு நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கு இடையே வாழும் சுமார் 12 லட்சம் கிறிஸ்தவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகள் மிகுந்த சோதனையும் வேதனையும் நிறைந்த ஆண்டுகளாகும். எகிப்து நாட்டில் ஏற்பட்ட புரட்சியும் - எதிர்ப் புரட்சியும், கிறிஸ் தவர்களுக்கு எதிரான கொலைகளும், தேவாலய எரிப்புகளுமாக முடிந்தன. காஸாவிலும் மேற்குக் கரையிலும் பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாகத் தங்களுடைய வசிப்பிடங்களை விட்டு, அகதிகளாகப் புகலிடம் தேடிச் செல்கின்றனர். இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு குடியமர்த்தும் இஸ்ரேலியர்களுக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
சிரியா நாட்டில் பெரும்பாலான மோதல்கள் சன்னிகள் - ஆலவைட்டுகளுக்கு இடையில்தான். ஆனால், மக்கள்தொகையில் வெறும் 10% ஆக இருக்கும் கிறிஸ்தவர்கள், பாலியல் வல்லுறவுக்கும் படுகொலை களுக்கும் ஆளாகிறார்கள். தப்பிக்க முடிந்தவர்கள் லெபனான், துருக்கி, ஜோர்டானில் உள்ள அகதி முகாம் களை நோக்கி ஓடுகின்றனர். அலெப்போ நகரைச் சேர்ந்த பழமையான ஆர்மீனியச் சமூகம், ஒட்டுமொத்தமாக எரீவானை நோக்கிச் செல்கிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் சலுகை அறிவிப்பு!
சிரியாவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. கிழக்கு சிரியாவிலும் வடக்கு இராக்கிலும் எண்ணிக்கையில் மிகச் சிலராக இருக்கும் கிறிஸ்தவச் சமூகத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஒரு சலுகையை அறிவித்திருக்கிறது. ‘இஸ்லாமிய மார்க்கத்தில் சேர்ந்து விடுங்கள் அல்லது ஜிஸியா வரியைச் செலுத்தி விடுங்கள். இந்த இரண்டில் ஒன்றைக்கூட ஏற்கத் தயாரில்லை என்றால், வாளுக்கு இரையாகுங்கள்' என்று அறிவித்துள்ளது. இந்த முடிவுக்குக் காலவரம்பும் நிர்ணயித்திருப்பதால், கிறிஸ்தவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். முதல் உலகப் போரில் ஆர்மீனியர் படுகொலைகளை அடுத்து, மத்தியக் கிழக்குப் பகுதியிலிருந்து பெரும் எண்ணிக் கையிலான கிறிஸ்தவர்கள் வெளியேறினார்கள். அதற்குப் பிறகு, அதிக எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் வெளியேறுவது இப்போதுதான். மோசுல் நகரிலிருந்து புறப்பட்ட கிறிஸ்தவர்கள், ஓரளவுக்குத் தங்களைச் சகித்துக்கொள்கிற கிர்குக் நகருக்கும் குர்துகள் வசிக்கும் பகுதிகளில் உள்ள சிற்றூர்களுக்கும் செல்கின்றனர்.
இந்த வெளியேற்றங்களுக்கும் முன்னதாக - சதாம் உசைனின் மரணத்துக்குப் பிறகு - இராக்கின் கிறிஸ்த வர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பாதுகாப்பு கருதி வெளியேறிவிட்டனர். மோசுல், பஸ்ரா, பாக்தாத் ஆகிய நகரங்களில்தான் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்தனர். மத்தியக் கிழக்குப் பகுதியிலேயே இந்த நகரங்களில்தான் இப்போதும் கிறிஸ்தவர்கள் அதிகம். இராக்கில் மொத்தம் 7.5 லட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். அப்போது அது மொத்த மக்கள் தொகையில் 7% ஆகும். பாத் கட்சியின் ஆட்சியின்போது கிறிஸ்தவர்கள்தான் பணக்காரச் சிறுபான்மையினராக வாழ்ந்தனர். தாரிக் அஜீஸ் கிறிஸ்தவராக இருந்தாலும், சதாம் உசைனின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். சதாமைப் பார்க்க எந்த வெளிநாட்டுப் பிரமுகர் வந்தாலும், கிறிஸ்தவ ராணுவ வீரர்களைக் கொண்டு அவர்களை நன்கு சோதனையிட்ட பிறகே சதாமைச் சந்திக்க அனுமதிப்பார். அந்த வீரர்களிடம் அராமெயிக் மொழியில் சரளமாக அவர் பேசுவார். இயேசுநாதரின் தாய்மொழி அராமெயிக் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் நூற்றாண்டில்
முதலாம் நூற்றாண்டின்போது புனித தோமையாரும் (தாமஸ்) அவருடைய உறவினர் அட்டாய் என்பவரும்தான் இராக் பகுதியில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினர் என்பது வரலாறு. கி.பி. 325-ல் நைசியா கவுன்சிலில், மேற்கு ஐரோப்பாவைவிட அதிக எண்ணிக்கையிலான ஆயர்கள் (பிஷப்புகள்) மெசபடோமியாவிலிருந்துதான் வந்திருந்தார்கள். திருமுழுக்கு யோவானின் (ஜான் தி பாப்திஸ்து) போதனைகளைப் பின்பற்றுவோர் அப்பகுதியில் நிறைந்திருந்தனர். கிழக்கு தேவாலயம் என்ற ஒன்றும் இருந்தது. அரிஸ்டாட்டில், பிளாட்டோ ஆகியோரின் சிந்தனைகளும் கிரேக்கர்களின் அறிவியல் கருத்துகளும் மருத்துவமும் அதன் மூலம் இஸ்லாமிய உலகுக்குப் பரவின. வரலாற்றின் இடைக்காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட புதிய பல்கலைக்கழகங்களில் இவற்றுக்கு ஏற்ற களம் அமைந்தது.
இப்போது மத்தியக் கிழக்கின் எல்லா நாடுகளிலிருந்தும் அரபு கிறிஸ்தவர்கள், மதம் காரணமாகவே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு கிறிஸ்தவர் ஒரு ஊரிலிருந்தோ நாட்டிலிருந்தோ வெளியேறினால், அந்த இடத்துக்கு இன்னொரு கிறிஸ்தவர் வந்துவிடு வார். இப்போது அந்த நிலைமை இல்லை. கிறிஸ்த வர்கள் வெளியேற வெளியேற… அந்த இடம் நிரப்பப்படாமல் வெற்றிடமாகவே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அரபு கிறிஸ்தவர்கள் ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் குடிபெயர்ந்துவருகின்றனர். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளச் செல்லும் அவர்கள், வேறு எங்காவது வேலைபார்த்து, அமைதியாக வாழ்ந்தால் போதும் என்றே நினைக்கிறார்கள். பேராசிரியர் கமால் சாலிபி இதுகுறித்து மிகவும் வருத்தம் அடைந்து பேசுகிறார்: அரபு நாடுகளின் தனித்தன்மைக்குக் காரணம், அங்குள்ள கிறிஸ்தவ அரேபியர்கள்தான். ஏனெனில், அவர்கள் அங்கு இருப்பதுதான், அரபு நாடுகளின் பன்மைத்தன்மையையும் மதச் சகிப்புத்தன்மையையும் பறைசாற்றுவதாக இருக்கிறது.
மதச்சார்பற்ற அரசியல்
19-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, அரேபியர்களின் மதச்சார்பற்ற கலாச்சாரத்துக்கு முக்கியக் காரணம், கிறிஸ்தவர்கள்தான். அரபு நாடுகளில் மதச்சார்பற்ற அரசியலின் முன்னோடிகள் பலர் கிறிஸ்தவர்கள்தான் என்பது தற்செயலாக நேர்ந்தது அல்ல. மதச்சார்பற்ற அரபு தேசியத்தைத் தோற்றுவித்தவர் மைக்கேல் அஃப்லாக். டமாஸ்கஸைச் சேர்ந்த அவர், கிரேக்கப் பழமைவாத தேவாலய மரபினர். சோர்போனிலிருந்து வந்த சிரிய மாணவர்கள் துணையுடன், பாத் கட்சியை அவர் 1940-களில் தொடங்கினார். சிரியாவின் பிரதமராகப் பதவி வகித்த ஒரே கிறிஸ்தவர், ஃபாரிஸ் அல் கௌரி. ஜார்ஜ் அன்டோனியஸ் என்ற அறிவுஜீவியும் கிறிஸ்தவரே. ஆட்டோமான் ஆட்சிக்குப் பிறகு, அரபு இலக்கியம் புத்துயிர் பெறப் பாடுபட்ட பல கிறிஸ்தவர்கள் குறித்து 1938-ல் அவர் எழுதியிருக்கிறார்.
கிறிஸ்தவர்களே இல்லாத இஸ்லாமிய நாடு உருவாக வேண்டும் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் விருப்பம் முழுதாக நிறைவேறினால், அது கிறிஸ்தவத்தை மட்டும் அங்கிருந்து அகற்றாது, மதச்சார்பற்ற அரபு தேசியத்தையும் விரட்டிவிடும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். 20-ம் நூற்றாண்டில் மத்தியக் கிழக்கில் வெவ்வேறு அரபு தேசியவாத அரசுகள் ஏற்பட்டன. அந்த நிலை மாறி, இஸ்லாமிய நாடுகள் மட்டும்தான் மத்தியக் கிழக்கில் இருக்க வேண்டும் என்றால், ஆட்டோமான் காலத்துக்கு நாடுகள் திரும்பிவிடும்.
லெபனான், ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் இருந் தாலும், மத்தியக் கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஏற்படுத்த நினைக்கும் மாற்றங்கள் முழு வடிவம் பெற்றால், அரபு கிறிஸ்தவர்களுக்கு அதில் பங்கே இருக்க முடியாது. மிகச் சிறந்த அரபு கிறிஸ்தவ அறிவுஜீவியான எட்வர்ட் சையதுக்கு ஏற்பட்ட கதிதான் இனி அரபு கிறிஸ் தவர்களுக்கும் ஏற்படும். 1935-ல் அரபு தேசியவாதம் உச்சத்தில் இருந்தபோது, ஜெருசலேம் நகரில் பிறந்த எட்வர்ட், மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட அரசியல் கொந் தளிப்புகளால் நாட்டை விட்டு வெளியேறி, நியூயார்க்கில் வாழ்ந்து 2003-ல் மறைந்தார்.
- வில்லியம் டேல்ரிம்பிள், ‘நைன் லைவ்ஸ்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தி கார்டியன், தமிழில்: சாரி  http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE/article6262567.ece

கருத்துகள் இல்லை: