திங்கள், 23 பிப்ரவரி, 2015

வைகுண்டராஜனை காப்பாற்றும் தமிழக அரசு – HRPC கண்டனம்

வைகுண்டராஜன் போஸ்டர்19.02.2015 அன்று தமிழக சட்டப் பேரவையில் தாதுமணல் கொள்ளை தொடர்பான ஆய்வுக்குழு அறிக்கை வெளியிடப்படாதது குறித்து தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியபோது தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அவ்வழக்கில் விதிக்கப்பட்ட தடை காரணமாக வருவாய்த் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான ஆய்வை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதனால்தான் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்க இயலாதது போலவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இக்கூற்று முழுப் பூசணிக்காயை சோத்தில் மறைப்பதற்கு ஒப்பானது.
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை கைது செய்யக் கோரும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சுவரொட்டி . (கோப்புப் படம்)
தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழக கடற்கரைப் பகுதியில் அரிய வகைக் கனிமங்களை கடந்த 20 ஆண்டுகளாக வரைமுறையின்றி கொள்ளை அடித்து கடற்கரையையே சிதைத்தவர்களில் பிரதானமானவர் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன்.
கடந்த ஆகஸ்ட், 2013-ல் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஆசிஷ் குமார் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், வைப்பாறு- வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் அருகேயுள்ள கடலோர கிராமங்களில் ஆய்வு செய்து வி.வி.மினரல்ஸ் நிறுவனம் அனுமதியின்றி 3 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை மணலையும் 2,39,712 மெட்ரிக் டன் அளவில் கனிமங்களையும் சட்டவிரோதமாக அள்ளி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இச்செய்தி வெளியான 24 மணி நேரத்தில் அவர் மாற்றப்பட்டார்.
மக்களின் தொடர் போராட்டம் காரணமாக தமிழக அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்தது. அதன்பின் வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு அமைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு நடத்தச் சொல்லியது. அந்த ஆய்வும் கடந்த செப்டம்பர், 2013-ல் முடிக்கப்பட்டு செப்டம்பர் 17, 2013 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை, பெங்களூரு நீதிமன்றத்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்றுவரை அவ்வறிக்கை வெளியிடப்படவில்லை.
அதன்பின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் சிறப்புக்குழு ஆய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு கடந்த நவம்பர், 2013-லிலேயே ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பும் தமிழக அரசு பேடி குழுவை அழைத்து ஆய்வறிக்கையை கோரிப் பெறவில்லை.
 HRPC ஆர்ப்பாட்டம்
வைகுண்டராஜனை கைது செய்ய வலியுறுத்தி மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
தாது மணல் கொள்ளைக்கு சி.பி.ஐ விசாரணை கோரிய வழக்கில் கடந்த 12-12-2013 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச் சந்திரன் மற்றும் வேணுகோபால் அடங்கிய சிறப்பு அமர்வு “15 நாட்களுக்குள் தாதுமணல் கொள்ளை தொடபாக புகார் செய்பவர்கள் அனைவரும் பேடி குழுவிடம் மனுக்கள் அளிக்கலாம், அதன் பின் அவற்றை ஆராய்ந்து மிக விரைவில் அரசிடம் அறிக்கையை பேடி குழு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
அதன்பின் 29-05-2014 அன்று “ஒரு மாதத்தில் பேடி குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கருப்பையா அவர்கள் உத்தரவிட்டார். அதன்பின்பும் அறிக்கை வெளியிடப்படவில்லை.
இவ்வறிக்கையை வெளியிடக் கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 11-04-2014 அன்றே பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தற்போதுவரை நிலுவையில் உள்ள இவ்வழக்கில் தமிழக அரசு இன்று வரை பதில் மனுத் தாக்கல் செய்யாமல் வாய்தா வாங்கியே அலைக்கழித்து வருகிறது. மக்களும், ஏராளமான அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரியும் தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட ஆய்வறிக்கையை வெளியிட மறுத்து விட்டது.
HRPC ஆர்ப்பாட்டம்
வைகுண்டராஜனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
இதற்கிடையில் வைகுண்டராஜன் தாக்கல் செய்த வழக்குகளில் கடந்த 23-07-2014-அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் “ககன்தீப் சிங் பேடி குழு ஆய்வில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். இதைத்தான் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்ற உத்தரவெனக் குறிப்பிடுகிறார். இவ்வுத்தரவு திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை மாவட்ட ஆய்வுக்குத்தான் பொருந்தும். மேற்படி வழக்கு தாக்கல் செய்யும் முன் கடந்த செப்டம்பர், 2013-ல் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்குப் பொருந்தாது. தூத்துக்குடி மாவட்ட ஆய்வறிக்கையை வெளியிட இன்றுவரை நீதிமன்றத்தடை ஏதும் இல்லை. ஒரு வேளை மக்களின் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டதால் அதைக் கோரிப் பெறுவதற்கு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்குத் தடை இருக்கலாம்.
மேலும் கடந்த 12-12-2013-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பேடி குழு அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், அதன்பின் ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு அதற்க்கெதிராகத் தீர்ப்பளிக்க முடியாது என்பதே சட்டநிலை. தமிழக அரசும் இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பின்படி செயல்படுவதே சட்டப்படி சரி.
வாஞ்சிநாதன்
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் (கோப்புப் படம்)
வைகுண்டராஜனின் தாதுமணல் நிறுவனங்கள் தென்மாவட்டங்களில் செயல்படும் நிலையில் மேற்கண்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டத்தை வளைப்பதில் வித்தகரான வைகுண்டராஜன் குறுக்கு வழியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளார். இவ்வுத்தரவு பெறுவதை கடுமையாக எதிர்க்க வேண்டிய தமிழக அரசு வைகுண்டராஜன் உத்தரவு பெற ஆதரவாகவே இருந்துள்ளது. இதே பேடி குழு அறிக்கை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை வேண்டுமென்றே நீதிமன்றத்தில் மறைத்துள்ளது. இவ்வாறு வைகுண்டராஜனின் சட்டவிரோதச் செயல்கள் முழுக்க தமிழக அரசின் ஆசியோடுதான் நடந்து வருகிறது.
வி.வி.மினரல்ஸ் நிறுவன வைகுண்டராஜன், ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து, கடந்த தி.மு.க ஆட்சியில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. ஆகவே அ.தி.மு.க. அரசுக்கும் – வைகுண்டராஜனுக்கும் நெருக்கமான உறவிருப்பது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையை பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்காவும் உறுதி செய்துள்ளார்.
இதற்கு கூடுதல் உதாரணமாக, கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்த பிறகு நடந்தவற்றை குறிப்பிடலாம். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 7 லட்சம் டன் தாது மணல் தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக வைகுண்டராஜன் உள்ளிட்ட தாது மணல் கொள்ளையர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மணல் லாரிகளை தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மக்கள் மடக்கிப் பிடித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. தடை இருந்தாலும் வைகுண்டராஜனின் தாது மணல் நிறுவனங்கள் செயல்பட்டே வருகின்றன. ‘இரண்டு முதல்வர்கள், இரண்டு தலைமைச் செயலர்கள், இரண்டு டி.ஜி.பி.க்கள் உள்ள தமிழக அரசு இதை அறியாதா?’ என்பதே மக்களின் கேள்வி. தமிழக முதல்வர் பதிலளிக்க வேண்டும்.
தாதுமணல் கொள்ளை
தாது மணல் கொள்ளைக்கு எதிராக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மைய கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி (கோப்புப் படம்)
இதோடு மாத்திரமல்லாமல் அணு உலை மற்றும் அணு ஆயுதத் தயாரிப்பிற்கு பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் வைகுண்டராஜன் உள்ளிட்ட தாதுமணல் கொள்ளையர்களால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு தோரியம், யுரேனியத்துக்கு மாற்று என்ற நிலையில் பல லட்சம் கோடியாகும். இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு என்பதோடு வைகுண்டராஜனின் இக்குற்றம் மாபெரும் தேசத்துரோகமாகும். இது குறித்து கேரள காவல்துறை கூட வைகுண்டராஜன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் போராடும் கூடங்குளம் மக்கள் மீது தேசத் துரோக வழக்கு போடும் தமிழக அரசு வைகுண்டராஜன் மீது இன்றுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக தமிழக அரசின் துணை இருக்கின்ற தைரியத்திலேதான் வைகுண்டராஜனின் இயற்கை வளச் சூறையாடல் கேட்பாரின்றி தொடர்கிறது.
கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தாது மணல் கொள்ளையில் அரசியல்வாதிகள், மாநில அரசின் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவுத்துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் முதல் அணு சக்தித் துறை, கனிமங்கள் மற்றும் சுங்கத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து ஆதாயம் அடைந்துள்ளனர். ஆகவே விசாரணை முறையாக நடந்தால் இக்கொள்ளையில் ஆட்சியாளர்களின் பங்கு வெளிவரும் என்பதாலே முழுப்பூசணிக்காயை சோத்தில் மறைத்து வைகுண்டராஜனை காப்பாற்ற முயல்கிறார் தமிழக முதல்வர்.
ஆகவே, பாதிக்கப்பட்ட மக்கள் தாதுமணல் கொள்ளையர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது என்பதை உணர்ந்து தாங்களே போராடி இயற்கை வளங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.
சே.வாஞ்சிநாதன்
வழக்கறிஞர்-உயர்நீதிமன்றம் – மதுரை.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு வினவு.com

கருத்துகள் இல்லை: