மத்திய அரசின் ஆவணங்கள் திருடப்பட்டு பெருநிறுவனங்களுக்கு விற்பனை
செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கும் நிலையில் ஸ்டீல் மற்றும்
எரிசக்தி துறையின் முன்னணி நிறுவனமான எஸ்ஸார் குழுமத்தின் சலுகைகளை
அனுபவித்த அரசியல் தலைவர்கள் பட்டியல் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி
விவரம்:
பொதுநலன் வழக்குகளுக்கான மையம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர
உள்ளது. எஸ்ஸார் குழுமமானது எப்படியெல்லாம் அமைச்சர்கள், அதிகாரிகள்,
பத்திரிகையாளர்களுக்கு சலுகைகள் வழங்கி வளைத்துப் போட்டது என்பதற்கு
ஆதாரங்களாக எஸ்ஸார் குழுமத்தின் இ மெயில்கள், சுற்றறிக்கைகள்
இணைக்கப்பட்டுள்ளன.
இந்த பொதுநலன் வழக்கில் இணைக்கப்பட இருக்கும் சுற்றறிக்கைகளின் படி, நிதின்
கட்காரி அப்போது மத்திய அமைச்சராக இருக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியின்
தலைவர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருந்த நேரம்.. அவர் மனைவி, இரு
மகன்களுடன் 2013ஆம் ஆண்டு ஜூலை 7 முதல் ஜூலை 9-ந் தேதி வரை பிரான்சில் உள்ள
எஸ்ஸார் குழுமத்துக்கு சொந்தமான உல்லாச படகு விடுதியில்
தங்கியிருந்துள்ளனர். நைஸ் விமான நிலையத்தில் இருந்து எஸ்ஸார் குழும உல்லாச
படகு விடுதிக்கு கட்காரியும் குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் சென்றுவிட்டு
திரும்பியிருக்கின்றனர்.
அந்த படகு விடுதியின் கேப்டனுக்கு எஸ்ஸார் குழும தலைமை நிர்வாகி அனுப்பிய
மின் அஞ்சலில், அவர்கள் மிக முக்கியமான நபர்கள்... அவர்களுக்கான வசதிகளை
செய்து கொடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக கட்காரியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டு கேட்ட போது,
நாங்கள் குடும்பத்துடன் நார்வேக்கு சென்றிருந்தோம். அனைத்து விமான
டிக்கெட்டுகள், ஹோட்டல் பில்களுமே என்னாலேயே செலுத்தப்பட்டது. எஸ்ஸார்
குழுமத்துக்கு சொந்தமான படகு விடுதிக்கு சென்றோம். எனக்கு எஸ்ஸார் குழும
உரிமையாளர் ரூயா குடும்பத்தினர் 25 ஆண்டுகாலமாக தெரியும்.
நான் ஐரோப்பிய பயணம் மேற்கொண்ட போது என்னை அவர்கள் அழைத்தார்கள்.. நான்
அப்போது பாரதிய ஜனதா தலைவராகவும் இல்லை... மத்திய அமைச்சராகவோ எம்.பி.யாகவோ
இருந்ததும் இல்லை.. இதனால் என்ன பிரச்சனை? என்னுடைய தனிப்பட்ட பயணம் அது.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பலருடனும் எனக்கு உறவுகள் உண்டு.
மும்பையில் ரூயா குடும்பத்தினரும் நானும் அருகே வசிப்பவர்கள். அதற்காக
அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறேன் என்று அர்த்தமா? நாங்கள் சென்ற போது
அவர்களுக்கு சொந்தமான படகு விடுதியில் யாரும் தங்கவில்லை. அந்த படகு
விடுதிக்கு ஹெலிகாப்டரில் மட்டும்தான் செல்ல முடியும்.. என்னால் மறக்க
முடியாத பயணம் அது என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
இதேபோல நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்,
காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய்சிங், மோதிலால் வோரா, முன்னாள் எம்.பி.
யஸ்வந்த் நாராயணன் சிங் லகுரி, பாரதிய ஜனதாவின் வருண் காந்தி ஆகியோரும்
தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எஸ்ஸார் குழுமத்தில் பணி வழங்கக் கோரி
பரிந்துரை கடிதங்கள் கொடுத்ததும் இ மெயில்களில் தெரியவந்துள்ளது.
இது போன்ற வி.ஐ.பி.க்கள் அனுப்பும் பரிந்துரை கடிதங்களை எஸ்ஸார் குழுமம்
தனியே ஒரு டேட்டா பேங்காக பாதுகாத்தும் வருகிறதாம்.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெய்ஸ்வல், நான் எஸ்ஸார்
குழுமத்துக்கு பணிக்காக சிலருக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். என்னுடைய
தொகுதியில் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பவர்களுக்கு இப்படி பரிந்துரை செய்வது
வழக்கம் என்றார்.
ஆனால் திக்விஜய்சிங்கோ, என்னிடம் உதவி கோரி வருபவர்களிடம் பரிந்துரை
கடிதங்களைக் கொடுப்பது வழக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிடும் சம்பவம்
நினைவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். இதேபோல் வருண்காந்தியும்
மறுத்திருக்கிறார்.
மற்றொரு இ மெயிலில், அதிநவீன 200 செல்போன்களை எஸ்ஸார் குழும அன்பளிப்பாக
உயர் அதிகாரிகள், எம்.பி.க்களுக்கு வழங்குவது குறித்த தகவலும்
இடம்பெற்றுள்ளது.
மேலும் டெல்லி பத்திரிகையாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டிருப்பதும் இந்த மெயில்களில் அம்பலமாகியுள்ளது. ஒரு டெல்லி
பத்திரிகையாளருக்கு 10 நாட்களுக்கு எஸ்ஸார் குழுமம் வாகன ஏற்பாடு செய்து
தந்ததும் இந்த இ மெயிலில் தெரியவந்துள்ளது.
இந்த இ மெயில்கள் அம்பலமானது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எஸ்ஸார்
குழுமம், எங்களது குழும கணிணிகள் இருந்து மெயில்கள் திருடப்பட்டுள்ளன. இதனை
வெளியிடப்போவதாக கூறி பலர் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.
எங்களது இ மெயில்களை திருடியவர்கள் மீது டெல்லி போலீசார் கடும் நடவடிக்கை
எடுத்து வருகின்றனர். திருடப்பட்ட மெயில்களின் அடிப்படையில் செய்திகள்
வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
/tamil.oneindia.com/
/tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக