என் தந்தை ஓர் இந்துப் பார்ப்பனர். நான்
வயதுக்கு வரும் வரை அவரைப் பார்த்ததே இல்லை. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்டு
ஆட்சி நடந்த கேரளாவில் அயமெனம் சிற்றூரில் ஒரு சிரிய கிறித்துவக்
குடும்பத்தில் என் தாயோடு வளர்ந்து வந்தேன். அயமெனம் சிற்றூர்க்கென
அமைந்திருந்த ‘பறையர்’ தேவாலயத்தில் ‘பறையர்’ குருமார்கள் ‘தீண்டத்தகாத"
திருக்கூட்டத்தினரைப் பார்த்து போதனைகள் வழங்குவர். ஊர் மக்களின்
பெயர்களில், அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதில், செய்யும்
தொழிலில், உடுத்தும் உடையில், ஏற்பாடு செய்யும் திருமணங்களில், பேசும்
மொழியில் சாதி ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனாலும் நான் ஒரு பள்ளிப் பாடப்
புத்தகத்தில் கூட சாதி என்னும் கருத்தைக் கண்டதே இல்லை. இந்திய
எழுத்தாளரும் சிந்தனையாளருமாகிய பி. ஆர். அம்பேத்கர் 1936இல் வழங்கிய
உரையாகிய சாதி ஒழிப்பு என்னும் நூலைப் படித்த பிறகுதான் நமது பயிற்றுமுறை
உலகில் உள்ள பெரும் இடைவெளி பற்றி என் மனத்தில் உறைத்தது. இந்த இடைவெளி
இருப்பதேன் என்றும், அது இந்தியச் சமுதாயம் அடிப்படையான மாற்றத்துக்கு உள்ளாகாத வரை தொடரவே செய்யும் என்றுங்கூட அவ்வாசிப்பு
எனக்குத் தெளிவாக உணர்த்தியது.
உங்களுக்கு
இந்த ஆண்டின் நோபல் பரிசைக் கூட்டாகப் பெற்ற மலாலா யுசாஃப்சைப் பற்றித்
தெரியும், ஆனால் சுரேகா போட்மங்கே பற்றித் தெரியாது என்றால் அம்பேத்கரைக்
கட்டாயம் படியுங்கள்.
அப்போது மலாலாவுக்கு 15 அகவைதான். ஆனால் அவள்
ஏற்கெனவே பல குற்றங்கள் புரிந்திருந்தாள். அவள் ஒரு பெண், அவள்
பாகிஸ்தானில் சுவாத் பள்ளத்தாக்கில் வசித்து வந்தாள், அவள் பிபிசி
இணையத்தளத்தில் எழுதி வந்தவள், நியூ யார்க் டைம்ஸ் காணொளியில் காட்சி
தந்தவள், பள்ளி சென்றவள். மலாலா மருத்துவராக விரும்பினாள்; மலாலாவின் தந்தை
அவள் அரசியல்வாதியாக வேண்டுமென நினைத்தார். அவள் வீரச் சிறுமி. பள்ளிகள்
பெண்களுக்கானவை அல்ல என்ற தலிபன்கள் அறிவிப்புக்கு, அவள் தங்களுக்கு
எதிராகப் பேசுவதை நிறுத்தா விட்டால் அவளைக் கொன்றுவிடுவோம் என்ற அவர்களின்
அச்சுறுத்தலுக்கு அவள் (அவள் தந்தை கூட) காது கொடுக்கவில்லை. 2012 அக்டோபர்
9 அன்று துவக்கேந்திய தலிபன் படையாள் ஒருவர் அவளைப் பள்ளிப்
பேருந்திலிருந்து இறக்கி அவள் தலையில் குண்டு பாய்ச்சினார். மலாலா
இங்கிலாந்துக்கு வானூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கூடுமான
சிறந்த மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு பிழைத்துக் கொண்டாள். அது அதிசய
நிகழ்வே.
அமெரிக்க அதிபரும் அரசுச் செயலரும் தங்கள்
ஆதரவையும் உறுதிப்பாட்டையும் தெரிவித்தனர். மடோனா அவளுக்காக ஒரு பாடலை
அர்ப்பணித்தார். ஏஞ்சலினா ஜூலி அவளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். மலாலா
டைம் நாளேட்டின் அட்டைப் படத்தில் மிளிர்ந்தாள். அவள் மீதான கொலை முயற்சி
நடைபெற்ற சில நாள்களுக்குள் இன்று உலகக் கல்விக்கான ஐக்கிய நாடுகள்
சிறப்புத் தூதராக இருக்கும் ஜார்டன் ப்ரௌன் ‘நான் மலாலா’ என்னும்
வேண்டுகோளை வெளியிட்டார். அது ஒவ்வொரு சிறுமிக்கும் கல்வியளிக்கும்படி
பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டது. அமெரிக்கா தங்களின் பெண்ணியத் திருப்பணியை
நிறைவேற்றும் பொருட்டே பாகிஸ்தானில் ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடத்தி
பெண் வெறுப்பாளர்களாகிய இசுலாமியப் பயங்கரவாதிகளை ‘வெளியேற்றும்’
காரியத்தில் இறங்கியிருக்கிறதாம்.
அகவை 40 நிரம்பிய சுரேகா போட்மங்கே கூட பல
குற்றங்கள் புரிந்தவரே. அவர் ஒரு பெண், ‘தீண்டத்தகாத’ தலித் பெண்,
இந்தியாவில் வசித்தவர், பரம ஏழை இல்லை. அவர் தன் கணவரைவிட மிகுந்து
படித்தவர். எனவே அவர்தான் குடும்பத் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
அம்பேத்கர் அவரது நாயகராக இருந்தார். அவரது குடும்பத்தினர் இந்து மதம்
துறந்து பவுத்தத்தைத் தழுவினார்கள். சுரேகாவின் குழந்தைகள் கல்வி
கற்றவர்கள். சுதிர், ரோஷன் ஆகிய இரு மகன்கள் கல்லூரியில் பயின்று
வந்தார்கள். அகவை 17 நிரம்பிய மகள் பிரியங்கா உயர்நிலைப் பள்ளியில்
படித்துக் கொண்டிருந்தாள். சுரேகாவும் அவர் கணவரும் மகாராஷ்டிர மாநிலத்தில்
கைர்லாஞ்சி என்னும் சிற்றூரில் சிறு மனை ஒன்று வாங்கினார்கள். இந்த
மனையானது சுரேகாவின் மகர் சாதியைக் காட்டிலும் உயர்ந்தவர்களாகக் கருதிக்
கொண்ட சாதியினரின் பண்ணைகளுக்கு நடுவில் அமைந்திருந்தது. அவர் தலித்
என்பதாலும், எனவே நல்ல வாழ்க்கை வாழ்ந்து பார்க்கும் உரிமை அவருக்கு இல்லை
என்பதாலும் கிராமப் பஞ்சாயத்து அவருக்கு மின்னிணைப்பு பெறவும், அவரது மண்
குடிசையைச் செங்கல் வீடாகக் கட்டிக் கொள்ளவும் அனுமதி வழங்கவில்லை. அந்தக்
கிராமத்தினர் அவரது குடும்பத்தினர் எவரையும் அவர்களின் வயல்களுக்கு
வாய்க்காலிலிருந்து நீர் பாய்ச்சிக் கொள்ளவோ பொதுக் கிணற்றிலிருந்து நீர்
இறைத்துக் கொள்ளவோ அனுமதிக்க மறுத்தார்கள். அவர் நிலத்தின் வழியாகப் பொதுச்
சாலையமைக்க முயன்றனர். சுரேகா எதிர்த்தபோது அவரது வயல்களில் மாட்டு
வண்டிகளை ஓட்டினர். கால்நடைகளை அவிழ்த்து விட்டு அவரது பயிர்களை மேய
விட்டனர்.
ஆயினும் சுரேகா பின்வாங்கவில்லை.
காவல்துறையிடம் முறையீடு செய்தார். காவல்துறையோ அவருக்குக் காது
கொடுக்கவில்லை. சில மாதங்கழித்து கிராமத்தில் பதற்ற வெப்பம் உயர்ந்து
சென்றது. கிராமத்தினர் எச்சரிக்கை தரும் விதத்தில் சுரேகாவின் உறவினர்
ஒருவரைத் தாக்கிக் கொன்றனர். சுரேகா காவல்துறையிடம் மீண்டும் முறையீடு
செய்தார். இம்முறை காவல்துறை சிலரைக் கைது செய்தது. ஆனால்
குற்றம்சாட்டப்பட்டோர் உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
2006
செப்டம் 29 மாலை 6 மணியளவில் வெறியேறிய கிராமத்தினர் ஆண்களும்
பெண்களுமாகச் சுமார் 40 பேர் உழுதுந்துகளில் சுரேகாவின் வீட்டைச் சூழ்ந்து
கொண்டனர். வயல்வெளிகளுக்கு அப்பால் இருந்த அவரது கணவர் பையாலால் ஓலம்
கேட்டதும் வீட்டை நோக்கி ஓடினார். அவர் ஒரு புதருக்குப் பின்னால்
மறைந்திருந்தபடி அந்தக் கும்பல் தமது குடும்பத்தைத் தாக்கக் கண்டார். அவர்
துஸ்லா என்ற பக்கத்து ஊருக்குச் சென்று உறவினர் ஒருவரின் உதவியுடன்
காவல்துறைக்கு எப்படியோ செய்தியைத் தெரிவித்து விட்டார். (காவல்துறையினரைத்
தொலைபேசியை எடுக்கச் செய்வதற்கே கூட அறிமுகங்கள் தேவை.) காவல்துறை
வரவேயில்லை. அந்தக் கும்பல் சுரேகாவையும் பிரியங்காவையும் இரு
பாலகர்களையும் தரதரவென வீட்டை விட்டு இழுத்து வந்தனர். இரு மகன்களில்
ஒருவன் முழு விழித் திறனற்றவன். அவ்விருவரையும் தாயையும் தங்கையையும்
கற்பழிக்கும்படி வெறிக்கும்பல் கட்டளையிட்டது. அவர்கள் மறுத்த போது
அவர்களின் பிறப்புறுப்புகளை நசுக்கினர். இறுதியில் அடித்தே கொன்றனர்.
சுரேகா, பிரியங்கா இருவரையும் கும்பலாகக் கற்பழித்து அடித்துக் கொன்றனர்.
நான்கு உடல்களையும் அருகிலுள்ள கால்வாயில் அமுக்கினர். அடுத்த நாள் உடல்கள்
கண்டெடுக்கப்பட்டன.
முதலில் இந்நிகழ்வை ‘அற’கொலை என்றுதான்
பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. சுரேகாவுக்கு உறவினர் ஒருவருடன் (ஏற்கெனவே
தாக்கப்பட்டிருந்த அந்த உறவினருடன்) கள்ளத் தொடர்பு இருந்ததால்
கிராமத்தினர் கவலையுற்றதாகப் பத்திரிகைகள் கூறின. தலித் இயக்கங்கள் நடத்திய
பெருந்திரள் போராட்டங்கள் தந்த அழுத்தத்தில் நடந்த குற்றம் பற்றி நீதி
அமைப்பு கவனம் செலுத்தத் தொடங்கியது. குடிமக்கள் உண்மையறியும் குழுக்கள்
எப்படி எல்லாம் சான்று கெடுக்கப்பட்டது, அழிக்கப்பட்டது என அறிக்கை
வெளியிட்டன. இறுதியாகக் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, முக்கியக்
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தது, ஆனால் அட்டவணைச் சாதியினர் மற்றும்
அட்டவணைப் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த
மறுத்தது. அந்த நீதிபதி கைர்லாஞ்சி படுகொலை "பழிக்குப் பழி வாங்கும்"
நோக்கத்தில் விளைந்த குற்றமே என்றார். கற்பழிப்புக்குச் சான்றேதும் இல்லை
என்றும், கொலைக்குச் சாதி நோக்கேதும் இல்லை என்றும் கூறினார்.
ஒரு தீர்ப்பு சட்டச் சட்டகத்தை
வலுவீனப்படுத்தி அந்தச் சட்டகத்தில் குற்றங்களை முன்வைப்பதும், பின்னர்
அக்குற்றங்களுக்கு மரண தண்டனைகள் வழங்குவதும் இறுதியில் மேலமை
நீதிமன்றங்களுக்கு அத்தண்டனையை மாற்றியமைப்பது, ஏன், குறைப்பதே கூட எளிய
காரியமாகி விடுகிறது. இது ஒன்றும் இந்தியாவில் இயல்புமீறிய நடைமுறையன்று.
ஒரு நீதிமன்றம் குற்றமிழைத்தோர் எவருக்கும் அவர்களின் குற்றம் எவ்வளவுதான்
கொடியதாயினும் மரண தண்டனை விதிப்பது ஒன்றையே சரியான நீதியென எப்படிக் கூற
முடியும்? சாதிப் பாகுபாடுகள் இந்தியாவில் கொடூரமான ஒரு மெய்மையாகத்
தொடர்ந்து இருந்து வருவதாக நீதிமன்றம் ஏற்றிருந்தால் அது நீதி நோக்கிய
நகர்வாக மதிக்கப்பட்டிருக்கும். இதற்கு மாறாக, அந்த நீதிபதி சித்திரத்தை
விட்டுச் சாதியையே பூசி மறைந்து விட்டார்.
சுரேகா போட்மங்கேயும் அவரது குழந்தைகளும்
சந்தைக்குத் தோதான ஒரு சனநாயகத்தில் வாழ்ந்து வந்தார்கள். எனவே ‘நான்
சுரேகா’ வேண்டுகோள்கள் ஏதும் ஐநாவிடமிருந்தோ, இந்தியாவிடமிருந்தோ வரவில்லை.
அல்லது அரசத் தலைமைகளிடமிருந்து வெறிக்கூச்சல் செய்திகள் எதுவுங்கூட
வெளிவரவில்லை. எல்லாம் நன்மைக்கே, நம் மீது உலகின் மாபெருங்குண்டுகள் ஏதும்
விழுவதை விரும்புவோமா என்ன? நாம் சாதியைக் கடைப்பிடிக்கிறோம் என்னும்
காரணம் ஒன்று போதாதோ?
இன்றைய இந்திய அறிவாளிகள் கூட
வெளிப்படுத்தத் தயங்கும் உணர்வு நடையில் அம்பேத்கர் 1945இல் எழுதினார்:
‘தீண்டப்படாதோருக்கு இந்து மதம் கொடூர அரங்காய்த் திகழ்கிறது.’ ஓர்
எழுத்தாளர் சக மனிதர்களை வர்ணிப்பதற்கு ‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச்
சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்’ போன்ற பதங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பது கொடூர அரங்கில்
வாழ்வதை ஒத்ததே. அம்பேத்கர் ‘தீண்டப்படாதோர்’ என்னும் சொல்லைத்
தயக்கமேதுமின்றி ஆழ்ந்த கோபத்துடன் பயன்படுத்திய காரணத்தால், நானும் அதையே
செய்வேன். இன்று ‘தீண்டப்படோதோர்’ என்னும் சொல்லுக்கு மாற்றாக ‘தலித்’
(‘குலைந்துபோன மக்கள்’) என்னும் மராத்தியச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
இந்தச் சொல்லோ ‘அட்டவணைச் சாதியினர்’ என்பதற்கு மாற்றீடாகப்
பயன்படுத்தப்படுகிறது. இது அறிஞர் ரூப விஸ்வனாத் குறிப்பிடுவது போல் சரியான
நடைமுறையன்று. ஏனென்றால் தலித் என்னும் பதத்துக்குள் சாதிக்
கொடுமைகளிலிருந்து தப்பிக்க மற்ற மதங்களுக்கு மாறிய (என் கிராமத்தில்
கிறித்துவத்துக்கு மாறிய பறையர் போன்ற) தீண்டப்படாதோரும் அடங்குவர். ஆனால்
இவர்கள் ‘அட்டவணைச் சாதியினர்’ பதத்தில் அடங்க மாட்டார்கள். இப்படிக் கேடான
ஒன்றுக்குப் பெயர்சூட்டும் சடங்கு ஒரு பக்கம் இருக்க, இந்த முயற்சியுங்கூட
மூட அதிகாரிகளின் கோப்புக் குறிப்புகள் போன்று குழப்பமிக்கதாய் உள்ளது.
இதைத் தவிர்ப்பதற்கு நான் எப்போதும் இல்லா விட்டாலும் பெரும்பாலும்
கடந்தகாலம் தொடர்பாக எழுதுகையில் ‘தீண்டப்படோதோர்’ என்ற சொல்லையும்,
நிகழ்காலம் பற்றி எழுதுகையில் ‘தலித்’ என்ற சொல்லையும் பயன்படுத்துகிறேன்.
நான் மற்ற மதங்களுக்கு மாறிய தலித்துகள் பற்றி எழுதுகையில் தலித்
சீக்கியர்கள், தலித் முஸ்லிம்கள் அல்லது தலித் கிறித்துவர்கள் எனக்
குறிப்பிட்டு எழுதுகிறேன்.
தேசியக் குற்றப் பதிவுத் துறைக்
குறிப்புகளின்படி, ஒவ்வொரு 16 நிமிடத்துக்கும் தலித் ஒருவருக்கு எதிராக
தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது; ஒவ்வொரு நாளும், நான்கு
தீண்டப்படாத பெண்கள் தீண்டப்படுவோரால் கற்பழிக்கப்படுகிறார்கள்; ஒவ்வொரு
வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள், 6 தலித்துகள்
கடத்தப்படுகிறார்கள். 2012இல் மட்டும், தில்லியில் 23 அகவை நிரம்பிய பெண்
கூட்டாகக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட அந்த ஆண்டில் மட்டும்,
1,574 தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் (தலித்துகளுக்கு எதிரான
கற்பழிப்புகளில் அல்லது ஏனைய குற்றங்களில் 10 விழுக்காடு மட்டுமே பதிவு
செய்யப்படுகிறது என்பது பட்டறிவு), 651 தலித்துகள் கொல்லப்பட்டனர். இந்தக்
கணக்கில் அடங்குபவை கற்பழிப்புகளும் சித்திரவதைகளும் மட்டுமே. உடையவிழ்த்து
அம்மண ஊர்வலம் நடத்துதல், மலந்தின்னச் செய்தல், நில அபகரிப்பு, சமூக
ஒதுக்கல், குடிநீர் கிடைக்க விடாது தடுத்தல் ஆகியவை அடங்குவதில்லை. மசாபி
தலித் சீக்கியர் ஒருவர் தன் மகளைக் கூட்டாகக் கற்பழித்தோருக்கு எதிராக
வழக்குப் பதிவு செய்யத் துணிந்ததற்காக 2005இல் அவரது இரு கைகளும் ஒரு
காலும் துண்டிக்கப்பட்ட செய்தி இந்தப் புள்ளி விவரங்களில் அடங்கவில்லை
என்கிறார் பஞ்சாபைச் சேர்ந்த பந்த் சிங். மூவுறுப்பு
துண்டிக்கப்பட்டோருக்கெனத் தனிப் புள்ளி விவரப் பதிவேதும் கிடையாதாம்.
‘சமூகத்தால் அடிப்படை உரிமைகள்
மறுக்கப்படுமானால் எந்தச் சட்டமும், எந்த நாடாளுமன்றமும், எந்த
நீதித்துறையும் அவர்களுக்கு உலகில் அதற்குரிய முழுப் பொருளுடன் உத்தரவாதம்
அளிக்க முடியாது’ என்றார் அம்பேத்கர். மேலும் கூறினார்: ‘அமெரிக்க
நீக்ரோக்களுக்கும் ஜெர்மானிய யூதர்களுக்கும் இந்தியத் தீண்டப்படாதோருக்கும்
அடிப்படை உரிமைகளால் என்ன பயன்? பர்க் கூறியது போல், பெருங்கூட்டத்தினரைத்
தண்டிப்பதற்கு வழியேதும் கண்டறியப்படவில்லை.’
இந்தியாவில் எந்தக் கிராமத்தைச் சேர்ந்த
காவல்துறையினரையும் பார்த்து உங்கள் வேலை என்ன என்று கேட்டுப் பார்த்தால்,
‘அமைதியை நிலைநாட்டுவதே’ எனக் கூறுவார். ஆம், பலநேரம் இப்படித்தான்
நடக்கிறது - சாதி அமைப்பை நிலைநாட்டியபடியே. இங்கு தலித் அவா என்பதே அமைதி
மீறல் ஆகும்.
இனவொதுக்கல், இனவெறி, ஆணாதிக்கம்,
பொருளியல் ஏகாதிபத்தியம், மத அடிப்படைவாதம் போன்ற ஏனைய சமகாலத்
தீச்செயல்களை எதிர்த்துப் பன்னாட்டு மன்றங்களில் அரசியல் வகையிலும், அறிவு
வகையிலும் விவாதிக்கப்பட்டுள்ளன. இதே போன்ற ஆய்வுகளிலிருந்தும்,
குற்றச்சாட்டுகளிலிருந்தும் இந்தியாவின் சாதி நடைமுறை, மனிதச் சமுதாயம்
அறிந்துள்ள மிகக் கொடுமையான படிமுறைச் சமுதாய அமைப்புகளில் ஒன்றாகிய இந்த
நடைமுறை மட்டும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தது எப்படி? ஒருவேளை சாதியம்
இந்து மதத்துடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கும் காரணத்தால், அது
தெய்விகம், ஆன்மிகம், அகிம்சை, சகிப்புத்தன்மை, புலால் உண்ணாமை, காந்தி,
யோகா, வெளிநாட்டு யாத்ரிகர்கள், பீடில்ஸ் இசைக்குழு என அன்பும் இனிமையும்
வாய்ந்த பலவற்றுடன் இணைத்துப் பேசப்படும் காரணத்தால், குறைந்தது
அயலாருக்கேனும் அதனைத் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்வது முடியாத காரியமாக
உள்ளது.
சிக்கல் கடுஞ்சிக்கலாகும் வகையில், சாதி
என்பது இனஒதுக்கல் போன்ற ஏனைய பாகுபாடுகளைப் போலல்லாமல் நிறக்குறியீடு
கொண்டது அல்ல. எனவே அதனைக் காண்பது எளிதன்று. மேலும், இனஒதுக்கல் போலன்றி
உயரிடங்களில் சாதி அமைப்புக்குத் தீவிரப் பற்றாளர்கள் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சாதி என்பது தனித்தனி மக்களையும்
சமுதாயத்தினரையும் கருத்துக்குரிய வகையிலும் நேர்வகையிலும் பிணைக்கும் ஒரு
சமுதாயப் பசை என அவர்கள் வெளிப்படையாகவே வாதிடுவர். சாதி அடிப்படையில்
நடைபெறும் பாகுபாட்டையும் வன்முறையையும் இனவெறியுடனோ இனவொதுக்கலுடனோ
ஒப்பிடும் கருத்தைக் கண்டு இந்திய ஆளும் வர்க்கம் திகைத்து நின்றது.
தலித்துகள் 2001இல் டர்பனில் நடைபெற்ற இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டில்
சாதியை ஒரு பிரச்சினையாக எழுப்ப முயன்ற போது இந்திய ஆளும் வர்க்கம்
அவர்களைக் கடுமையாகச் சாடியது, சாதி ஒரு உள்நாட்டுப் பிரச்சினை எனச்
சொன்னது. இதனை முன்வைத்த நன்கறிந்த சமூகவியலர்கள் பலர் சாதி நடைமுறை இனப்
பாகுபாடு போன்றதன்று எனவும், சாதி இனத்தைப் போன்றதன்று எனவும் வாதிட்டனர்.
அம்பேத்கரால் அவர்களுடன் வாதிட்டிருக்க
முடியும். ஆனால் டர்பன் மாநாட்டின் பொருளுக்கு உட்பட்டு தலித் வினைஞர்கள்
முன்வைத்த கருத்து என்னவென்றால், சாதி என்பது இனத்தைப் போன்றதன்று
என்றாலும், சாதியமும் இனவெறியும் ஒப்பிடத்தக்கவையே. இரு பாகுபாட்டு
வடிவங்களுமே மக்களை அவர்களின் மரபுவழிசார்ந்து குறி வைக்கின்றன. இந்த
உணர்வுக்கு உறுதிப்பாடு அளிக்கும் வகையில், 2014 சனவரி 15 அன்று இளைய
மார்டின் லூதர் கிங்கின் 85ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி வாஷிங்டனில்
நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கையெழுத்திட்ட
‘பரிவுச் சாற்றுரை’ ஆனது ‘இந்தியாவில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கு’
ஒரு முடிவு தேவை என அழைப்பு விடுத்தது.
அடையாளமும் நீதியும், வளர்ச்சியும்
மேம்பாடும் என்பன தொடர்பான நிகழ் வாதுரைகளில் பங்கேற்கும் நன்கறிந்த இந்திய
அறிஞர்கள் பலரையும் பொறுத்த வரை, சாதி என்பது மிஞ்சிப் போனால் ஒரு தலைப்பு
அல்லது ஒரு துணைத் தலைப்பு மட்டுமே, அல்லது வெறும் அடிக்குறிப்புதான்.
இடதுசாரிச் சார்பான இந்திய முற்போக்கு அறிவாளிக் கூட்டம் சாதியை
சுருக்கல்வாத மார்க்சிய வர்க்கப் பகுப்பாய்வுக்கு வலிந்து பொருத்துவதன்
மூலம் அதனை இன்னும் கடினமானதாக்கி விட்டார்கள். இந்தத் துடைத்தழிக்கும்
போக்கு, காணாதிருக்கும் திட்டம் ஆகிய இரண்டும் சிலநேரம் அறிந்தே செய்யும்
அரசியல் நடவடிக்கையாக உள்ளது; இருட்டோ, சாதியோ, நாங்கள் எதிலும் தடுக்கி
விழுந்ததில்லை என்பதால் அது பெரியம்மை போன்றே அழிக்கப்பட்டு விட்டதாகக்
கருதிக் கொள்ளும் மேட்டுக்குடி வர்க்கத்திடமிருந்து இவ்விரு கருத்துகளும்
சிலநேரம் வெளிப்படக் காண்கிறோம்.
சாதியின் தோற்றுவாய் குறித்து
வரவிருக்கும் ஆண்டுகளில் மானிடவியலர்கள் தொடர்ந்து விவாதிப்பர். ஆனாலும்
படிமுறைத்தன்மையும், மேலிருந்து கீழான பொறுப்புகள், கடப்பாடுகள் எனப்படும்
அளவீடுகளையும், புனிதத்தையும் தீட்டையும் அடிப்படையாகக் கொண்டு
ஒழுங்கமைக்கப்பட்ட சாதிக் கொள்கைகளை, அவை அன்றும் இன்றும்
கண்காணிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்ற வழிகளைப் புரிந்து
கொள்வது அப்படி ஒன்றும் கடினமான காரியமல்ல. சாதிப் பிரமிடின் உச்சி
புனிதமானதாகவும், ஏராளமான பொறுப்புகள் உடையதாகவும் கருதப்படுகிறது. அடி
தீட்டானதாகவும், பொறுப்புகளேதுமில்லை என்றாலும் ஏராளமான கடமைகள்
உடையதாகவும் கருதப்படுகிறது. இந்தத் தீட்டுபுனித வார்ப்பு
சாதியடிப்படையிலான குலத் தொழில் என்னும் விரிந்து பரந்த அமைப்பு ஒன்றுடன்
இணைக்கப்படுகிறது.
இன்றும் நாம் அழைக்கும் சாதி அமைப்பு
என்பது இந்து சமய மூல நூல்களில் நால்வர்ண அமைப்பாகிய வர்ணாசிரம தர்மம்
அல்லது சதுர்வர்ணம் என அறியப்படுகிறது. இந்துச் சமுதாயத்தில் சுமார் 4,000
அகமணச் சாதிகளும், உட்சாதிகளும் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றுக்கும் அதற்கேயான
வழிவழிவந்த தொழில்கள் உண்டு. இந்தத் தொழில்கள் பார்ப்பனர்கள்
(புரோகிதர்கள்), சத்ரியர்கள் (படையாட்கள்), வைசியர்கள் (வணிகர்கள்),
சூத்திரர்கள் (பணியாட்கள்) என நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
இந்த வர்ணங்களுக்கு வெளியே இருப்பவர்கள் அவர்ணர்கள், ஆதி சூத்திரர்கள்,
இழிமனிதர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர். தீண்டத்தகாதோர்,
காணத்தகாதோர், அண்டத்தகாதோர் என்ற வகையில் அவர்களுக்கே உரிய படிவரிசைகளில்
அடுக்கப்பட்டுள்ளனர். அதாவது அவர்களின் இருப்பும் தொடுதலும், ஏன், நிழலே
கூட உயர்சிறப்புச் சாதி இந்துக்களைத் தீட்டாக்கி விடுமெனக் கருதப்படுகிறது.
சில சமூகங்களில் உட்குருதிக் கலப்பைத்
தடுக்கும் வகையில் அகமணச் சாதிகள் புறமணக் கோத்திரங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. அகமணமுறை கண்காணிக்கப்படுகிற அதே அதி கொடூரமான
வழிமுறைகளின் வாயிலாக - சமூகத்தில் மூத்தோரின் இசைவுடன் நடத்தப்படும்
தலைத்துண்டிப்புகள், கட்டைப் பஞ்சாயத்துக்கள் போன்ற செயல்பாடுகளின் வாயிலாக
- புறமணமுறையும் கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும்
அதற்கே உரித்தான வகையில் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சாதிவாதக் கொடூர
வடிவங்கள் உள்ளன. எழுதப்படாத இந்த நெறிமுறைகள் அமெரிக்காவின் தெற்குப்
பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பழைய ஜிம் க்ரோ சட்டங்களை விட மோசமானவை.
முன்பு தீண்டப்படாதோர் தனிக் குடியிருப்புகளில் வாழக்
கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு உயர்சிறப்புச்
சாதியினர் பயன்படுத்தும் சாலைகளைப் பயன்படுத்த அனுமதியில்லை, பொதுக்
கிணறுகளில் நீரருந்த அனுமதியில்லை, இந்துக் கோயில்களில் நுழைய
அனுமதியில்லை, உயர்சிறப்புச் சாதிப் பள்ளிக்கூடங்களில் நுழைய அனுமதியில்லை,
மேலுடம்பை மூடி மறைத்துக் கொள்ள அனுமதியில்லை, குறிப்பிட்ட உடைகளை
மட்டுமல்ல, குறிப்பிட்ட நகைகளை அணிந்து கொள்ளவும் அனுமதியில்லை. அம்பேத்கர்
பிறந்த மகர் போன்ற சில சாதியினர் தங்களின் தீட்டான பாதச் சுவடுகளைப்
பெருக்கித் தள்ளுவதற்காக இடுப்பில் விளக்குமாறுகளைக் கட்டிக் கொள்ள
வேண்டியிருந்தது; வேறு சில சாதிகள் தங்களின் தீட்டு எச்சிலைச்
சேகரிப்பதற்கெனக் கழுத்தில் சட்டிகளைத் தொங்க விட்டுக் கொள்ள
வேண்டியிருந்தது. உயர்சிறப்புச் சாதி ஆண்களுக்குத் தீண்டத்தகாத பெண்களின்
உடல் மீது கேள்வி கேட்கவியலாத உரிமைகள் இருந்தன. காதல் தீட்டானது;
கற்பழிப்பு புனிதமானது. இதைப் போன்ற பலவும் இந்தியாவின் பல பகுதிகளிலும்
இன்றும் தொடர்கின்றன.
மனிதனோ தெய்வமோ, இத்தகையதொரு சமுதாய
ஏற்பாட்டை சிந்தனையில் வடித்தெடுத்த கற்பனை பற்றிச் சொல்வதற்கு இனியும்
என்ன இருக்கிறது? வர்ணாசிரம தர்மம் ஒன்று போதாது என்பது போல் கர்மம்
என்னும் சுமை வேறு அழுத்துகிறது. கீழ்ச் சாதியில் பிறந்தோர் அவர்களின்
கடந்தகாலப் பாவச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருப்பதாகக்
கருதப்படுகிறது. செயலளவில், அவர்கள் தங்களுக்குரிய சிறைத் தண்டனையைத்தான்
கழித்து வருகிறார்களாம். அடங்க மறுத்து அத்துமீறுபவர்களுக்குக் கூடுதல்
தண்டனையே கிடைக்கும், அதாவது அவர்கள் தீண்டப்படாதவராகவோ சூத்திரராகவோ
மறுபிறப்பு எடுக்க வேண்டுமாம். எனவே பார்த்து நடந்து கொள்வதே நல்லது.
சாதி
அமைப்பைக் காட்டிலும் தரந்தாழ்ந்த ஒரு சமுதாய அமைப்பு இருக்க முடியாது
என்றார் அம்பேத்கர். ‘உதவும் செயல்களில் ஈடுபட விடாது மக்களை
மந்தப்படுத்தும், முடக்கிப் போடும், ஊனப்படுத்தும் அமைப்பிது.’ இதனை உலகின்
மிகப் புகழ்வாய்ந்த இந்தியரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மறுதலித்தார்.
சாதி இந்தியச் சமுதாயத்தின் மாண்பைக் குறித்திடுவதாக அவர் நம்பினார்.
1921இல் அவரது நவஜீவன் என்னும் குசராத்தி ஏட்டில் எழுதினார்:
‘இந்துச் சமுதாயத்தால் நிமிர்ந்து நிற்க
முடிகிறது என்றால், அது சாதி அமைப்பின் மீது நிறுவப்பட்டிருப்பதே காரணம்...
சாதி அமைப்பை அழித்து மேற்கத்திய ஐரோப்பியச் சமுதாய அமைப்பை ஏற்றுக்
கொள்வதென்றால், சாதி அமைப்பின் ஆன்மாவாகத் திகழும் குலத் தொழில் கொள்கையைக்
கைவிடுவதாகத்தான் பொருள். குலக் கொள்கை ஒரு நிலைபேற்றுக் கொள்கை ஆகும்.
இதை மாற்றுவது சீர்குலைவை உண்டாக்கும். நான் பிராமணரை வாழ்நாள் முழுதும்
பிராமணர் என்றே அழைக்காது இருப்பேனேயானால் அவரால் எனக்கு ஒரு பயனும்
கிடைக்கப் போவதில்லை. ஒவ்வொரு நாளும் பிராமணர் சூத்திரராகவும், சூத்திரர்
பிராமணராகவும் மாறிக் கொண்டே இருந்தால் குழப்பமே மிஞ்சும்.’
காந்தி சாதிய அமைப்பின் அன்பராக இருந்தார்
என்ற போதிலும், சாதிகளுக்கு இடையே படிநிலைகளேதும் இருக்கக் கூடாது என
நம்பினார்; அதாவது எல்லாச் சாதிகளையும் சமமாகக் கருத வேண்டும், ஆதி
சூத்திரர்களாகிய அவர்ணச் சாதியினரை வர்ண அமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்
என்றார். இதற்கு அம்பேத்கர் சொன்ன பதில்: ‘புறச்சாதியினர் சாதி அமைப்பின்
விளைபொருளே ஆவர். சாதிகள் இருக்கும் வரை புறச்சாதியினரும் இருப்பர். சாதி
அமைப்பை நொறுக்குவது ஒன்றைத் தவிர வேறெதுவும் புறச்சாதியினரை விடுவித்து
விடாது.’
ஏகாதிபத்திய பிரித்தானிய அரசுக்கும்
இந்திய அரசுக்கும் இடையில் 1947 ஆகஸ்டில் அதிகாரக் கைமாற்றம் நடைபெற்று 70
ஆண்டுகள் ஓடி விட்டன. சாதி பழங்கதையாகி விட்டதா?
நிறைய மாறி விட்டன. இந்தியாவுக்கு ஒரு
தலித் குடியரசுத் தலைவர் (கே. ஆர். நாராயணன்), ஒரு தலித் தலைமை நீதிபதி
எல்லாம் கிடைத்தாகி விட்டது. தலித்துகளும் இதர கீழ்ச் சாதிகளும் ஆதிக்கம்
செலுத்தும் அரசியல் கட்சிகளின் எழுச்சிக்கும் பஞ்சமில்லை. இது ஒருவகையில்
புரட்சிகர வளர்ச்சியே. சிறிதாயினும் புலப்படத்தக்க அளவில் வளர்ந்துள்ள ஒரு
சிறுபான்மைத் தலைமையே பரந்த பெரும்பான்மையினரின் கனவுகளை வாழ்ந்து
அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு வடிவத்துக்கே அப்புரட்சி வழிவகுத்துள்ளது
என்றாலும், நமது வரலாற்றை வைத்துப் பார்த்தால், அரசியல் அரங்கில் தலித்
பெருமிதம் ஓங்கி ஒலிப்பது நன்மைக்கே. பகுஜன் சமாஜ் கட்சி போன்ற
இயக்கங்களுக்கு எதிராக அவர்கள் ஊழல்வாதிகள் என்றும், இதயமற்றவர்கள் என்றும்
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஏனைய பழைய கட்சிகளுக்கு இன்னும்
நன்றாகவே பொருந்தும். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மட்டும் நாராசமாக உரத்து ஒலிக்கின்றன.
இதற்கு மாயாவதி போன்ற அதன் தலைவர் ஒரு தலித் என்பதும், திருமணமாகாத பெண்
என்பதும், இவ்விரண்டு குறித்தும் வருத்தப்படாத மனிதர் அவர் என்பதுமே
காரணம். பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைச் சரிவுகள் என்னவாயினும், தலித்
கண்ணியத்தைக் கட்டியமைத்ததில் அதற்குரிய பங்களிப்பு என்பது ஓர் ஆழ்ந்த
அரசியல் பணியாகும். இதனை ஒருபோதும் சுருக்கி விடக் கூடாது. ஆனால் இதில்
துயரம் என்னவென்றால், கீழ்நிலைச் சாதிகளும் நாடாளுமன்ற சனநாயகத்தில்
குறிப்பிடத்தக்க ஓர் ஆற்றலாக வளர்ந்து வந்தாலும் சனநாயகமே மெய்யாகவும்
கட்டமைப்பு வகையிலும் சிதைந்து வருகிறது.
ஒரு காலத்தில் கூட்டுசேரா இயக்கத்தின்
முன்னணி உறுப்பினராக இருந்த இந்தியா சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிறகு
தடம்மாறி அமெரிக்காவின், இஸ்ரேலின் ‘இயற்கைப் பங்காளியாக’ தன்னை
நிலைநிறுத்திக் கொண்டு விட்டது. 1990களில் விறுவிறுப்பான பொருளியல்
சீர்திருத்தச் செயல்வழிகளில் இந்தியா ஈடுபடத் தொடங்கியது. ஏற்கெனவே
பாதுகாக்கப்பட்டு வந்த சந்தையை உலக மூலதனத்துக்குத் திறந்து விட்டது. இதன்
பொருட்டு 50 ஆண்டுக்கு மேலாகப் பொதுப் பணத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த
இயற்கை ஆதாரங்களும், இன்றியமையா சேவைகளும், தேசிய அகக்கட்டமைப்பும் இப்போது
பன்னாட்டுக் குழுமங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன. இருபதாண்டு கழித்து
நிகர உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் (இப்போது மெதுவாகி வருகிறது
என்றாலும்) அருமையாக இருப்பது உண்மைதான். ஆனால் புதிய பொருளியல் கொள்கைகள்
செல்வக் குவியல் சிற்சிலரின் கைகளைச் சென்றடைவதற்கே வழிவகுத்துள்ளன. இன்று,
இவர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் இந்த நிகர உள்நாட்டு உற்பத்தியில்
நாலில் ஒரு பங்குக்குச் சமமான சொத்துக்கள் இந்தியாவின் முதல் 100
பணக்காரர்களின் கைகளில் உள்ளன. 120 கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட ஒரு
தேசத்தில் 80 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும்
குறைவான தொகையை வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். சொல்லப் போனால், பேருருக்
குழுமங்களே இந்த நாட்டை அதன் உடைமையாளர்களாகத் திகழ்ந்து வழிநடத்தி
வருகிறார்கள். அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் பெரு வணிகத்தின்
கீழியங்கும் குழுமங்களாகத் தொடங்கி விட்டார்கள்.
இது வழிவழிவந்த சாதி வலைப்பின்னல்களை
எப்படிப் பாதித்துள்ளது? மேற்கத்தியச் சமுதாயம் தொழில் புரட்சிக்குப் பிறகு
பிளவுபட்டுத் தனித் தனி அலகுகளான நிலை இந்தியச் சமுதாயத்துக்கு ஏற்படாமல்
சாதி பாதுகாத்துள்ளதாகச் சிலர் வாதிடுகிறார்கள். வேறு சிலர் இதற்கு
நேர்மாறாக வாதிடுகின்றனர்; முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து வரும்
நகர்மயமும் புதிய வேலைச் சூழலின் உருவாக்கமும் சாதிப் படிநிலைகளைப்
பழங்கதையாக்கி விடவில்லை என்றாலும் பொருளற்றதாக்கி விட்டதாக அவர்கள்
சொல்கிறார்கள். இரு கூற்றுகளும் முக்கியக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட
வேண்டிய செய்திகளே. கீழே அவ்வளவு முழுமையில்லாத செய்திகள் இடைப்படுவதற்கு
வருந்துகிறேன் என்றாலும், பொதுமைப்படுத்தல்கள் புற உண்மைகளுக்கு
மாற்றீடாகது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் ஃபோர்ப்ஸ் ஏடு வெளியிட்டுள்ள
உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 55 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இயல்பாகவே இந்த மதிப்புகள் வெளியில் தெரிவிக்கப்பட்ட செல்வத்தை
அடிப்படையாகக் கொண்டவை. இந்த 55 செல்வந்தர்களின் நடுவில் கூட செல்வப் பரவல்
என்பது குத்துப் பிரமிடாகத்தான் உள்ளது. அதில் முதல் 10 பணக்காரர்களின்
செல்வம் அவர்களுக்குக் கீழுள்ள 45 பேரின் செல்வத்தையும் விஞ்சி நிற்கிறது.
முதல் 10 பேரில் எழுவர் வைசியர்கள், அனைவரும் உலகெங்கும் வணிக நலன்களைக்
கொண்ட பெருங்குழுமங்களின் முதன்மைச் செயற்பாட்டு அலுவலர்கள் ஆவர். அவர்கள்
துறைமுகங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், வளி வயல்கள், கப்பல்
குழுமங்கள், மருந்துக் குழுமங்கள், தொலைபேசி வலைப்பின்னல்கள், பெட்ரோவேதி
ஆலைகள், திரைப்படத் தயாரிப்புக் குழுமங்கள், தண்டு செல் சேமிப்பு
அமைப்புகள், மின் வழங்கல் வலைப்பின்னல்கள், சிறப்புப் பொருளியல் மண்டலங்கள்
ஆகியவற்றைச் சொந்தமாக நடத்தி வருகிறார்கள். மீதமுள்ள 45 பேரில் 19 பேர்
வைசியர்கள். இதில் மிஞ்சிய 26 பேரில் பெரும்பாலானவர்கள் பார்சிகள்,
போரர்கள், கத்ரியர்கள் (அனைவரும் வணிகச் சாதியினர்), பார்ப்பனர்கள் ஆவர்.
இந்தப் பட்டியலில் தலித்துகளுக்கோ ஆதிவாசிகளுக்கோ இடமில்லை.
பனியாக்கள் (வைசியர்கள்) பெருவணிகம்
மட்டுமல்ல, நகரங்களின் சிறு வணிகங்கள் மீதும் உறுதியான பிடியை
வைத்துள்ளனர். தறிகெட்டுயரும் கடன் பொறியில் மாட்டித் தவிக்கும்
கோடிக்கணக்கான ஏழை உழவர்களையும் மத்திய இந்தியாவின் ஆழ் காடுகளில்
வாழ்வோருள்ளிட்ட ஆதிவாசிகளையும் கொண்ட இந்த நாடெங்கிலும் பனியாக்கள்
பாரம்பரியக் கிராமக் கடன்வணிகத்திலும் செழித்து வளர்கின்றனர். அருணாசலப்
பிரதேசம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகிய பழங்குடிகள்
அதிகம் வசிக்கும் இந்திய வடகிழக்கு மாநிலங்கள் ‘விடுதலைக்கு’ பிறகு
போராட்டங்களையும் இராணுவமயமாக்கலையும் இரத்தக்களரிகளையும் சந்தித்து
வருகின்றன. இவை அனைத்துக்கும் நடுவில் மார்வாரிகளும் பனியாக்களும் அங்கு
குடியேறி அடக்கி வாசித்துத் தங்கள் வணிகத்தை நிலைநிறுத்திக் கொண்டு
விட்டனர். அவர்கள் இப்போது இந்தப் பகுதியில் பொருளியல் நடவடிக்கை
அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
சாதியை ஒரு கூறாகக் கொண்டு கடைசியாக
நடத்தப்பட்ட 1931 கணக்கீட்டின்படி, மக்கள்தொகையில் வைசியர்களின் தொகை 2.7
விழுக்காடு, அதேபோது தீண்டப்படாதோரின் தொகை 12.5 விழுக்காடு.
பனியாக்களுக்குக் கிடைக்கும் நலவாழ்வுச் சேவைகளையும், அவர்களின்
குழந்தைகளுக்குள்ள நல்ல உறுதியான எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டால்,
அவர்கள் தொகை மிகுந்திருப்பதைக் காட்டிலும் குறைந்திருப்பதற்கே வாய்ப்புகள்
அதிகம். எப்படிப் பார்த்தாலும், புதிய பொருளியல் சூழலில் அவர்களின்
பொருளியல் செல்வாக்கு அசாதாரணமானது. பெரு வணிகமாகட்டும் சிறு
வணிகமாகட்டும், உழவுத் துறையாகட்டும் தொழில் துறையாகட்டும், அவற்றில்
நமக்குத் தென்படுவது எல்லாம் மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில்
சாதியத்தையும் முதலாளியத்தையும் ஒன்றாய் உருக்கி வார்த்த தனித்துவமான
இந்தியக் கலவை மட்டுமே.
வைசியர்கள் அவர்களுக்குத் தெய்வத்தால்
விதிக்கப்பட்ட கடமையைத்தான் செய்கிறார்கள். கிமு 350 வாக்கில் எழுதப்பட்ட
தொன்மையான இந்திய அரசியல் நூலாகிய அர்த்தசாத்திரம் கடுவட்டி பெறுவது
வைசியர்களின் உரிமை என்கிறது. (கிபி 150 வாக்கில்) தொன்மையான இந்துச் சட்ட
நூலாகிய மனுஸ்மிருதி இன்னும் மேலே போய், உயர்ந்தேறிச் செல்லும் வட்டி
வீதங்களை அறிவிக்கிறது: மாத வட்டி பார்ப்பனர்களுக்கு 2 விழுக்காடு,
சத்ரியர்களுக்கு 3 விழுக்காடு, வைசியர்களுக்கு 4 விழுக்காடு,
சூத்திரர்களுக்கு 5 விழுக்காடு. ஆண்டு அடிப்படையில் பார்ப்பனர்கள் 24
விழுக்காடு வட்டி கொடுக்க வேண்டும், சூத்திரர்களும் தலித்துகளும் 60
விழுக்காடு தர வேண்டும். இன்றுங்கூட, வட்டித் தொழில் செய்வோர் விரக்தியில்
இருக்கும் உழர்களிடமும் நிலமற்ற கூலிகளிடமும் 60 விழுக்காடு (அல்லது
இன்னுங்கூடுதல்) வட்டி வாங்குவது சாதாரண நிகழ்வே. அவர்களால் பணமாக அடைக்க
முடியா விட்டால், ‘உடல்வகை வட்டி’ எனப்படுவதை அவர்கள் செலுத்த வேண்டும்.
அதாவது அவர்கள் அடைக்கவியலாக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகத் தலைமுறை
தலைமுறையாக வட்டிக்காரரிடம் உழைத்து உழல வேண்டும். கீழ்ச் சாதியைச்
சேர்ந்த எவரிடமும் ஊழியம் செய்யும்படி எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாதென
மனுஸ்மிருதி கட்டளையிடுவதாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?
வைசியர்கள் இந்திய வணிகத்தைக்
கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பூதேவர்களாகிய பார்ப்பனர்கள் செய்வதென்ன?
1931 கணக்கெடுப்பின்படி அவர்களின் தொகை 6.4 விழுக்காடு. ஆனால் அவர்களின்
மக்கள்தொகையும் வைசியர்களுக்குக் கூறிய அதே காரணங்களினால் அனேகமாகக்
குறைந்திருக்கும். வளரும் சமுதாயங்களின் ஆராய்ச்சிக்கான மையம் [Centre for
the Study of Developing Societies (CSDS)] என்ற அமைப்பு வெளியிட்ட
கணக்கெடுப்பின்படி, நாடாளுமன்றத்தில் பார்ப்பனர்களுக்கு அவர்களின்
தகவுப்பாட்டுக்கு மீறி இருந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான
பிரதிநிதித்துவம் இன்று மிக வேகமாகக் குறைந்துவரக் காண்கிறோம்.
அப்படியானால் பார்ப்பனர்களின் செல்வாக்கு இன்று குறைந்து விட்டதாய்க்
கொள்ளலாமா?
அம்பேத்கரின் கருத்துப்படி, 1948இல்
சென்னை மாகாண மக்கள் தொகையில் 3 விழுக்காட்டினராக இருந்த பார்ப்பனர்கள்
அரசுப் பணிகளில் அரசிதழ்ப் பதிவுள்ள 37 விழுக்காட்டுப் பதவிகளையும்,
அரசிதழ்ப் பதிவற்ற 43 விழுக்காட்டுப் பதவிகளையும் வகித்து வந்தனர். இந்தப்
போக்குகளைக் கணக்கு வைத்துக் கொள்வதற்கான நம்பத்தகுந்த வழிமுறையேதும்
இப்போது இல்லை. 1931க்குப் பிறகு இந்தத் திட்டப்பணி கவனத்தில் எடுத்துக்
கொள்ளப்படாததே காரணம். நமக்குக் கட்டாயம் கிடைத்தாக வேண்டிய இந்தத்
தகவல்கள் கைவசம் இல்லாத காரணத்தால், நம்மால் கண்டறிய முடிவதை வைத்துக்
கொண்டுதான் எதையும் செய்தாக வேண்டும். 1990இல் பார்ப்பனர் ஆற்றல் [Brahmin
Power] எனத் தலைப்பிட்டு குஷ்வந்த் சிங் எழுதினார்:
‘பார்ப்பனர்களின் மக்கள்தொகை நமது
நாட்டில் 3.5 விழுக்காட்டுக்கு மேல் இல்லை... இன்று அவர்கள் அரசுப்
பணிகளில் 70 விழுக்காடு என்னுமளவுக்கு அமர்ந்துள்ளார்கள். இந்தக் கணக்கு
அரசிதழ்ப் பதிவுபெற்ற பதவிகளை மட்டுமே குறிப்பதாகக் கருதுகிறேன். குடியியல்
பணிகளின் முதுநிலை அடுக்குகளில் துணைச் செயலர் பதவிகள் தொடங்கி மேல்
நோக்கிச் சென்றால், 500 பேரில் 63 விழுக்காட்டினர், அதாவது 310 பேர்
பார்ப்பனர்கள். 26 மாநில முதன்மைச் செயலர்களில் 19 பேர் பார்ப்பனர்கள்; 27
ஆளுனர்கள் மற்றும் துணை ஆளுனர்களில் 13 பேர் பார்ப்பனர்கள்; 19 உச்ச
நீதிமன்ற நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர்கள்; 330 உயர்நீதிமன்ற
நீதிபதிகளில் 166 பேர் பார்ப்பனர்கள்; 140 அரசுத் தூதர்களில் 58 பேர்
பார்ப்பனர்கள்; மொத்த இந்திய நிர்வாகப் பணி அதிகாரிகள் 3,300 பேரில் 2,376
பேர் பார்ப்பனர்கள்; தேர்தல் பதவிகளிலும் மேலோங்கித் திகழ்கின்றனர்; 508
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் பார்ப்பனர்கள்; 244 மாநிலங்களவை
உறுப்பினர்களில் 89 பேர் பார்ப்பனர்கள்; ஆக, இந்திய இருப்பில் இருக்கும்
பசைப் பதவிகள் அனைத்திலும் 36 முதல் 63 விழுக்காடு வரையிலான இடங்களை 3.5
விழுக்காட்டுப் பார்ப்பனச் சமுதாயம் அனுபவித்து வருவதையே இந்தப்
புள்ளிவிவரங்கள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இது எப்படி நடந்தது என்று
எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதற்குப் பார்ப்பனர்களின் உயர் அறிவுத் தகவே
[மினி] காரணமென நம்புவது கடினமே.’
சிங் குறிப்பிடும் இந்தப் புள்ளி
விவரங்கள் வெளிவந்து கால் நூற்றாண்டாகி விட்டது. இவ்வகையில் புதிதாகக்
கணக்கீடு ஏதும் கிடைத்தால் நல்லது என்றாலும், வருங்காலத்தில் அது நடப்பது
போல் தெரியவில்லை. வளரும் சமுதாயங்களின் ஆராய்ச்சிக்கான மையம் அளிக்கும்
விவரங்களின்படி, 1950 முதல் 2000 வரையிலான காலத்தில் அனைத்து உச்ச நீதிமன்ற
நீதிபதிகளில் 47 விழுக்காட்டினர் பார்ப்பனர்கள், உயர் நீதிமன்றங்களிலும்
கீழமை நீதிமன்றங்களிலும் இணை நீதிபதிகளில் 40 விழுக்காட்டினர்
பார்ப்பனர்கள். பிற்பட்ட வகுப்பினர் ஆணையம் வழங்கிய 2007 அறிக்கையின்படி,
இந்திய அதிகார வர்க்கத்தின் 37 விழுக்காட்டை நிரப்புவது பார்ப்பனர்களே.
இவர்களில் பெரும்பாலார் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்.
பார்ப்பனர்கள் காலங்காலமாகவே ஊடகங்களில்
ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 2006இல் வளரும் சமுதாயங்களின்
ஆராய்ச்சிக்கான மையம் புது தில்லி ஊடகங்களில் உயர் பொறுப்பில் இருப்போரின்
சமூக விவரம் குறித்து ஆய்வு செய்தது. அதன்படி, தில்லியை மையமாகக் கொண்டு
செயல்படும் 37 இந்தி, ஆங்கில ஏடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் முக்கிய
முடிவெடுக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் 315 பேரில் ஆங்கில அச்சூடகத்தில்
கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினரும், தொலைக்காட்சியில் 79 விழுக்காட்டினரும்
‘உயர் சாதியினர்’ ஆவர். இவர்களில் 40 விழுக்காட்டினர் பார்ப்பனர்கள். 315
பேரில் ஒருவர் கூட தலித்தோ ஆதிவாசியோ இல்லை. 4 விழுக்காட்டினர் மட்டுமே
சூத்திரப் பதவி வழங்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்; 3 விழுக்காட்டினர்
முஸ்லிம்கள் (மக்கள் தொகையில் இவர்கள் விழுக்காடு 13.4).
இது இதழியலர்கள் பற்றிய ‘ஊடக ஆளுமைகளின்"
கதைதான். இவர்கள் பணியாற்றும் பெரும் ஊடகங்களின் உரிமையாளர்கள் யார்?
நான்கு முக்கிய ஆங்கிலத் தேசிய நாளிதழ்களில் மூன்று வைசியக்
குடும்பங்களுக்கும், ஒன்று பார்ப்பனக் குடும்பத்துக்கும் சொந்தமானவை.
டைம்ஸ் ஆஃப் இந்தியா, 24 மணிநேரச் செய்தித் தொலைக்காட்சி டைம்ஸ் நவ்
ஆகியவற்றை உரிமையாகக் கொண்டு இந்தியாவிலேயே மாபெரும் மக்கள் ஊடகக்
குழுமமாகத் திகழ்கிற டைம்ஸ் ஊடகக்கோவை (டைம்ஸ் க்ரூப்) ஜைன பனியா
குடும்பத்தின் கைகளில் உள்ளது; இந்துஸ்தான் டைம்ஸ் மார்வாரி பனியாக்களாகிய
பார்தியர்களின் கைகளில் உள்ளது; இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டை நடத்தி வரும்
கோயங்காக்களும் மார்வாரி பனியாக்களே; இந்து ஏட்டை நடத்துவது பார்ப்பனக்
குடும்பம்; ஐந்தரை கோடி சுற்றுப்படி விற்பனையுடன் இந்தியாவிலேயே அதிகம்
விற்பனையாகும் இந்தி நாளேடாகிய தைனிக் ஜாக்ரன் கான்பூர் பனியாக்களாகிய
குப்தா குடும்பத்தினரிடம் உள்ளது. ஒன்றரைக் கோடிக்கு மேற்பட்ட சுற்றுப்படி
விற்பனையுடன் இந்தி நாளேடுகளில் மிகுந்த செல்வாக்குடன் திகழும் தைனிக்
பாஸ்கர் அகர்வால்களின் கைகளில் உள்ளது, இவர்களும் பனியாக்களே. (குஜராத்தி
பனியா முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான) ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 27
முக்கியத் தேசிய, வட்டாரத் தொலைக்காட்சிகளின் பங்குகளைத் தன்
கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தேசியத் தொலைக்காட்சிச் செய்திகள் மற்றும்
கேளிக்கை வலைப்பின்னல்களிலேயே மிகப் பெரியதான ஜீ டிவி நெட்வொர்க்கின்
உரிமையாளரான சுபாஷ் சந்திராவும் ஒரு பனியாவே. (தென்னிந்தியாவில், சாதி
சற்றே மாறுபட்ட வடிவம் எடுக்கிறது. எடுத்துக்காட்டாக, செய்தித்தாள்களையும்
உலகின் மிகப் பெரும் திரைப்பட நகரையும் 12 தொலைக்காட்சிகளையும் கைகளில்
வைத்திருக்கும் ஈநாடு ஊடகக்கோவை ஆந்திராவில் கம்மா வேளாண் சாதியைச் சேர்ந்த
ராமோஜி ராவுக்குச் சொந்தமானது. இது பெரும் ஊடகங்கள் மீதான பார்ப்பனபனியா
உடைமைப் போக்கை இன்னும் துரிதப்படுத்துகிறது. மற்றொரு பெரும் ஊடக இல்லமான
சன் டிவி ஊடகக்கோவை மாறன்களுக்குச் சொந்தமானது, இவர்கள் பிற்படுத்தப்பட்ட
சாதியினர் என்றாலும், அரசியல் வகையில் ஆற்றல் மிக்கவர்கள்.)
இந்திய அரசு விடுதலைக்குப் பிறகு
வரலாற்றுப் பிழையைச் சரியாக்கும் முயற்சியில் பல்கலைக்கழகங்களிலும் மாநில
அரசுத் துறை வேலைவாய்ப்புகளிலும் அட்டவணைச் சாதியினருக்கும் அட்டவணைப்
பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கும் கொள்கையை (நேர்வகைப் பாகுபாட்டு
முறையை) நடைமுறைப்படுத்தியது. மைய ஓட்டத்துக்குள் ஊடுடைப்புச் செய்ய
அட்டவணைச் சாதியினருக்கு இடஒதுக்கீடு மட்டுமே ஒரே வாய்ப்புவழியாகும். (ஏனைய
மதங்களுக்கு மாறினாலும் தொடர்ந்து பாகுபாடுகளைச் சந்தித்து வரும்
தலித்துகளுக்கு இக்கொள்கை பொருந்தாதுதான்.) இடஒதுக்கீட்டுக் கொள்கைக்குத்
தகுதியடைவதற்கு தலித் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டியது
அவசியம்.
அரசுத் தரவுகளின்படி, 71.3 விழுக்காட்டு
அட்டவணைச் சாதி மாணவர்கள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்குவதே இல்லை. இதன்
பொருள் கீழ்நிலை அரசுப் பணியிடங்களுக்கேகூட இடஒதுக்கீட்டுக் கொள்கை நான்கு
தலித்துகளில் ஒருவருக்கே பொருந்தும். வெள்ளைச்சட்டைப் பணியிடங்களுக்கான
சிறுமத் தகுதி ஒரு பட்டப் படிப்பு ஆகும். 2001 மக்கள்தொகைக்
கணக்கீட்டின்படி, 2.24 விழுக்காட்டு தலித் மக்களே பட்டதாரிகள்.
இடஒதுக்கீட்டுக் கொள்கை தலித்துகளில் ஒரு சிறு விழுக்காட்டினருக்கு மட்டுமே
பொருந்துகிறது என்றாலும், அது அவர்களுக்குப் பொதுச் சேவைத் தளங்களில்
நுழைந்து மருத்துவர்களாகவும் கல்வி அறிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும்,
நீதிபதிகளாகவும், காவல்துறை அதிகாரிகளாகவும், குடியியல் பணி
அலுவலர்களாகவும் திகழும் வாய்ப்புவழியைத் திறந்துவிட்டுள்ளது. அவர்களின்
எண்ணிக்கை சிறிதே என்றாலும், அதிகார மட்டங்களில் கொஞ்சம் தலித்
பிரதிநிதித்துவம் இருக்கிறது என்ற உண்மை பழைய சமுதாயச் சமன்பாடுகளை
மாற்றியமைக்கிறது. சில பத்தாண்டு முன்பு கற்பனை செய்திராத சூழல்களை,
காட்டாக, இன்று ஒரு தலித் குடியியல் பணியாளரின் கீழ் ஒரு பார்ப்பன எழுத்தர்
பணியாற்றுவது போன்ற நிலைமைகளை உருவாக்கித் தருகிறது. தலித்துகள் தமக்குத்
தாமே வென்று காட்டியுள்ள இச்சிறு வாய்ப்புவழியையுங்கூட உயர்சிறப்புச்
சாதிப் பகைமை என்னும் கோட்டை தடுத்து நிறுத்துகிறது.
எடுத்துக்காட்டாக,
அட்டவணைச் சாதியினர் மற்றும் அட்டவணைப் பழங்குடியினருக்கான தேசிய ஆணைய
அறிக்கையின்படி, கூட்டுரிமை படைத்த பொதுத் துறை நிறுவனங்களில் ‘A நிலை’
அலுவலர்களில் 8.4 விழுக்காட்டினரே அட்டவணைச் சாதியினர், ஆனால் இந்த
எண்ணிக்கை 15 விழுக்காடாக இருக்க வேண்டும். இதே அறிக்கை இந்திய நீதித்
துறைகளில் தலித்துகளுக்கும் ஆதிவாசிகளுக்குமான பிரதிநிதித்துவம் குறித்து
மனங்கலங்கும் புள்ளி விவரங்கள் சிலவற்றை முன்வைக்கிறது: தில்லியில் 20 உயர்
நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் கூட அட்டவணைச் சாதியைச் சேர்ந்தவரல்ல,
மற்றெல்லா நீதித்துறைப் பதவிகளையும் எடுத்துக் கொண்டால், இந்த எண்ணிக்கை
1.2 விழுக்காடு மட்டுமே; இராஜஸ்தான் நிலைமையும் இதேதான்; குஜராத்தில் தலித்
அல்லது ஆதிவாசி நீதிபதிகள் எவரும் கிடையாது; சமூகநீதி இயக்கங்களின்
பெருமித வரலாற்றைக் கொண்ட தமிழ் நாட்டில் 38 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 4
பேர் மட்டுமே தலித்துகள்; மார்க்சியப் பெருமிதம் படைத்த கேரளத்தில் 25 உயர்
நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே தலித். சிறைவாசிகள் தொகை பற்றிய
ஆய்வு இதற்கு எதிர்த் தகவில் இருக்குமென நம்பலாம்.
தலித்தாகிய மேனாள் குடியரசுத் தலைவர் கே.
ஆர். நாராயணன் 2011 கணக்கீட்டின்படி 120 கோடி இந்திய மக்கள்தொகையில் 25
விழுக்காட்டினராகிய அட்டவணைச் சாதியினருக்கும் பழங்குடிகளுக்கும் உச்ச
நீதிமன்ற நீதிபதி இருக்கைகளில் உரிய விகிதாசரப் பிரதிநிதித்துவம் வேண்டும்
என்னும் கருத்தை முன்வைத்த போது நீதித் துறையினர் அவரை ஏளனம் செய்தனர்.
‘இந்த வகைப்பிரிவுக்கேற்ற தகுதியான ஆட்கள் இருக்கிறார்கள்; எனவே அவர்களின்
குறைப் பிரதிநிதித்துவம் அல்லது பிரதிநிதித்துவமின்மையை நியாயப்படுத்த
இயலாது’ என்று 1999இல் கூறினார். ‘நீதித் துறையில் மேற்கொள்ளப்படும் எந்த
இடஒதுக்கீடும் அதன் சுயேச்சைத் தன்மைக்கும் சட்ட ஆட்சிக்குமான
அச்சுறுத்தலாகவே அமையும்’ என எதிர்வினையாற்றினார் உச்ச நீதிமன்றத்தின்
மூத்த வழக்குரைஞர் ஒருவர். மேட்டிமை வாய்ந்த இன்னொரு சட்டப் பெருந்தகை
கூறினார்: "வேலை ஒதுக்கீடுகள் என்பது இப்போது நச்சரிப்பான கருத்தாகி
விட்டது. தகுதி-திறமை மேனிலை பராமரித்துக் காக்கப்பட வேண்டும் என
நம்புகிறேன்."
தெய்வ அத்தாட்சி பெற்று விட்டதாகக் கூறிக்
கொண்டு ஓர் அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள, ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாகத் தங்களுக்குக் கீழ்ப்பட்ட சாதிகளுக்குக் குறிப்பிட்ட வகைப்பட்ட
அறிவை மறுத்து வந்துள்ள இந்திய மேட்டுக்குடிக் கூட்டத்தின் கைகளில்
மாட்டிக் கொண்ட ஒன்றே ‘தகுதி-திறமை’ என்னும் ஆயுதம். இன்று அது கேள்விக்கு
உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசுப் பணியிடங்களிலும்
பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக
உயர்சிறப்புச் சாதியினரின் உணர்வுபொங்கும் போராட்டங்கள் நடைபெற்று
வருகின்றன. தகுதி-திறமை என்பது வரலாறற்ற ஒரு சமூக வெற்றிடத்தில் நிலவுவதாக
நம்புகிற அனுமானமும், உயர்சிறப்புச் சாதிச் சமூகத்தினரின் சொந்தபந்தப்
பிணைப்பால் அடையப் பெறும் சாதகமான கூறுகளும், கீழ்நிலைச் சாதியினருக்கு
எதிராக அரணாய் வந்து நிற்கும் அதிகார வர்க்கத்துப் பகைமையும் கவனத்தில்
எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய காரணிகள் அல்ல. மெய்ந்நடப்பில், தகுதி-திறமை
என்பது குருதிப்பாசத்தை மறைத்துக் கூறுவதற்கான மங்கல வழக்காகி விட்டது.
முற்போக்குச் சமூக அறிவியலர்களின்,
வரலாற்றுச் சிந்தனையர்களின் கோட்டை எனக் கருதப்படும் ஜவகர்லால் நேரு
பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் தலித்துகளின் விழுக்காடு 3.29,
ஆதிவாசிகளின் விழுக்காடு 1.44 விழுக்காடு. ஆனால் அவர்களுக்குக் கிடைக்க
வேண்டிய ஒதுக்கீட்டு விழுக்காடு முறையே 15, 7.5 ஆகும். இத்தனைக்கும் இங்கு
27 ஆண்டுகளாக இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. 2010இல் இந்தப்
பிரச்சினை எழுப்பப்பட்ட போது, ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் சிலர் கூறியது
என்னவென்றால், அரசமைப்பின் கட்டளைப்படியான இடஒதுக்கீட்டுக் கொள்கையை
நடைமுறைப்படுத்தும் முயற்சி ‘இப்பல்கலைக்கழகத்தை உயர்மாண்பு கொண்ட
மையங்களில் ஒன்றாகத் திகழ விடாது தடுத்து விடும்.’ அவர்கள் மேலும்
வாதிட்டனர், பேராசிரியர்ப் பணியிடங்களில் இடஒதுக்கீடு
நடைமுறைப்படுத்தப்பட்டால், ‘மேட்டுக்குடிப் பேராசிரியர்கள் வெளிநாடுகளுக்கோ
தனியார்ப் பல்கலைக்கழகங்களுக்கோ சென்று விடுவார்கள். எனவே வாய்ப்பு
மறுக்கப்பட்டோருக்கு இதுநாள் வரை இப்பல்கலைக்கழகம் மிகப் பெருமையுடன்
வழங்கி வரும் உலகத் தரக் கல்வி இனியும் கிடைக்காது போய் விடும்.’ வாழ்க்கை
அறிவியல் துறைப் பேராசிரியர் பி. என். மல்லிக் இன்னும் வெளிப்படையாகவே
பேசினார்: ‘சில சாதியினர் மரபீனி அடிப்படையிலேயே ஊட்டச்சத்துக்
குறைந்தவர்கள் என்பதால் அவர்களைத் தூக்கி விடும் செயலால் பெரிதாக ஒன்றும்
சாதிக்கவியலாது; அப்படிச் செய்வது மாண்பையும் தகுதி-திறமையையும் கெடுத்து
விடும்.’ ஆண்டு தவறாது உயர்சிறப்புச் சாதி மாணவர்கள் இந்தியாவெங்கும்
இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பெருந்திரள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இது உச்சியிலிருந்து கிடைத்த செய்தி. புது
இந்தியாவின் மறுபக்கத்தில், சச்சார் குழு அறிக்கை சொல்வது என்னவென்றால்,
தலித்துகள் பொருளியல் பிரமிடில் அவர்கள் எப்போதுமே இருந்து வரும் அதே
அடிப்பகுதியில் முஸ்லிம் சமூகத்துக்குக் கீழே உள்ளனர். சுரங்கங்களாலும்
அணைகளாலும் வேறு பெரிய அகக்கட்டமைப்புத் திட்டப் பணிகளாலும் இடமாற்றப்படும்
லட்சக்கணக்கானோரில் பெரும்பான்மையினர் தலித்துகளும் ஆதிவாசிகளுமே
என்பதறிவோம். அவர்கள்தான் பரிதாபத்துக்குரிய வகையில் குறைந்த கூலி
வழங்கப்படும் கூலிகள் ஆவர், நகரக் கட்டமைப்புத் தொழிலில் வேலை செய்யும்
ஒப்பந்தத் தொழிலாளிகளும் அவர்களே. எப்படிப் பார்த்தாலும் 70 விழுக்காட்டு
தலித்துகள் நிலமற்றவர்களே. பஞ்சாப், பீகார், அரியாணா, கேரளா போன்ற
மாநிலங்களில் இந்தத் தொகை 90 விழுக்காடு ஆகும்.
ஆறுக்கு ஒன்று என்ற காரணிக்கு மேற்பட்ட
தலித் பிரதிநிதித்துவம் கொண்ட அரசுத் துறை ஒன்று கூட இல்லை. அதேபோது
சாலைகளைத் தூய்மைப்படுத்தும், புதைச் சாக்கடைகளில் இறங்கி வடிகால்
அமைப்பைச் சீரமைக்கும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதற்கென இந்திய அரசால்
பணியமர்த்தப்படுவோரில் 90 விழுக்காட்டினர் தலித்துகளே. (இந்தத் துறையுங்கூட
இப்போது தனியார்மயமாகி வருவதால், தனியார்க் குழுமங்கள் இந்தப் பணிகளை
தலித்துகளுக்குக் குறைந்த சம்பளத்தில் வேலை உத்திரவாதம் ஏதுமின்றி தற்காலிக
அடிப்படையில் ஒப்பந்தப் பணியாகவே தரும் நிலை இனி ஏற்படும்.)
மனிதத் துப்புரவு எதற்கும் தேவையில்லாத
நேர்த்தியான கழிப்பறைகளைக் கொண்ட பெரு வணிக வளாகங்களிலும் குழும
அலுவலகங்களிலும் துப்புரவுப் பணிகள் தலித் அல்லாதோருக்கு வழங்கப்படுகின்றன.
அதேபோது, (அதிகாரபூர்வமாக) 13 லட்சம் தலித்துகள், பெரும்பாலும் பெண்கள்
தண்ணீர்ப் பயன்பாடற்ற பாரம்பரியக் கழிப்பிடங்களைக் கழுவி, தலைகளில் மனித
மலம் நிரம்பிய கூடைகளைத் தூக்கிச் சென்று கிடைக்கும் ஊதியத்தில்தான்
வயிற்றைக் கழுவி வருகின்றனர். இது சட்டத்துக்குப் புறம்பான செயல்
என்றாலும், இந்தியத் தொடர்வண்டித் துறை மனிதத் துப்புரவாளர்களைப் பெருமளவு
பணிக்கமர்த்தும் நிறுவனங்களில் ஒன்று. 14,300 தொடர்வண்டிகள் 25 லட்சம்
பயணிகளை ஒவ்வொரு நாளும் 65,000 கிமீ ஏந்திச் செல்கின்றன. அவர்களின் மலம்
1,72,000 திறந்த கழிப்பு வெளியேற்றத் துளைகள் வழியே நேராக இருப்புப்
பாதைகளில் போய் விழுகின்றன. டன் கணக்கான இந்த மலம் முழுக்க முழுக்க
தலித்துகளால் கையுறைகளோ, வேறெந்தப் பாதுகாப்புச் சாதனங்களோ இன்றி
வெறுங்கையால் கூட்டி அள்ளப்படுகிறது. மனிதத் துப்புரவாளர்ப் பணியமர்த்தத்
தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான சட்டவரைவு (2012) ஒன்றுக்கு
அமைச்சரவையும் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்தியத்
தொடர்வண்டித் துறை அதனைக் கண்டுகொள்ளவில்லை. வறுமைச் சூழல் இன்னும் மோசமாகி
வரும் போதே அரசு வேலைவாய்ப்புகளும் தொடர்ந்து வற்றி வரும் நிலையில்,
தலித்துகளில் ஒரு பிரிவினர் பாரம்பரிய மலமள்ளும் தொழிலினை இடையில் புகுந்து
சிலர் பறித்துக் கொள்ளும் சூழலை எதிர்த்து நின்று அதனையே தங்கள் ‘நிரந்தர’
அரசுப் பணியெனத் தீவிரமாகத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.
தலித்துகளில் சிலர் இந்த அநீதிகளை வென்று
சமாளித்து விட்டனர். அவர்களின் தனிப்பட்ட கதைகள் அசாதாரணமானவை,
ஊக்கந்தருபவை. சில ஆண், பெண் தலித் வணிகர்கள் ஒன்றாகச் சேர்ந்து சொந்தமாக
தலித் வணிகம் மற்றும் தொழிலுக்கான இந்தியக் குழாம் என்னும் நிறுவனத்தை
உருவாக்கியுள்ளனர். அது பெரு வணிகங்களால் போற்றப்படுகிறது, ஆதரவு நல்கிக்
காக்கப்படுகிறது. அது தொலைக்காட்சிகளிலும் பெரும் ஊடகங்களிலும்
பெருமளவுக்குப் பேசப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், நன்கு
உழைப்பீர்களானால் முதலாளித்துவம் இயல்பாகவே சமத்துவத்துக்கு ஆதரவாக
இருப்பதாகக் காட்டுவதற்கு அது உதவி புரிகிறது.
சாதி இந்து கடல் கடப்பது சாதி இழப்பாகவும்
அனாசாரமாகவும் கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. இப்போது சாதி அமைப்பே
ஏற்றுமதியாகி வருகிறது. இந்துக்கள் எங்கே சென்றாலும், சாதியையும் கூடவே
அழைத்துச் செல்கின்றனர். அது இலங்கையில் சித்திரவதைகளுக்குள்ளாகும்
தமிழர்களிடம் நிலவுகிறது; ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ‘சுதந்திர உலகில்’
உச்சி நோக்கி நகரும் இந்தியக் குடியேறிகளிடம் நிலவுகிறது. இங்கிலாந்தில்
சுமார் 10 ஆண்டாகவே தலித் தலைமையிலான குழுக்கள் சாதிப் பாகுபாட்டை
பிரித்தானியச் சட்டத்தின் அடிப்படையில் இனப் பாகுபாட்டைப் போல் கருத
வேண்டுமென்னும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். சாதி இந்துப்
பரப்புரையாளர்கள் இதனைத் தற்போதைக்குத் தடுத்து வைத்துள்ளனர். சனநாயகம்
சாதியை அழித்து விடவில்லை. அது சாதியை உறுதிப்படுத்தி நவீனமாக்கியுள்ளது.
சாதி அமைப்புக்குரிய இந்துப் பதமாகிய
சதுர்வர்ணம் அசைக்க முடியாதபடி ஆட்டிப் படைத்து வருகிறது: பார்ப்பனர்
பெருமளவுக்கு அறிவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்; வைசியர்கள் வணிகத்தில்
ஆதிக்கம் செலுத்துகின்றனர். சத்ரியர்கள் இன்னுஞ்சிறந்த நற்காலங்களைப்
பார்த்து விட்டவர்களே என்றாலும் இன்றும் அவர்கள் பெருமளவுக்கு நில
உடைமையாளர்களாக உள்ளனர். மாபெரும் வீட்டின் அடித்தளத்தில் வசிக்கும்
சூத்திரர்கள் உள்ளே இடம்பிடிக்க முயல்வோரை அண்டவிடாது தடுக்கின்றனர்.
ஆதிவாசிகள் தங்களின் வயிற்றுப் பாட்டுக்கே போராடி வருகின்றனர். கடைசியாக
தலித்துகள் - நன்கு விரிவாகப் பார்த்தாயிற்று.
சாதி அமைப்பை அழிக்க முடியுமா? நாம் நமது
மண்டலத்தில் விண்மீன் நிலைகளை மாற்றியமைக்கத் துணிவு காட்டாத வரை,
புரட்சியாளர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் தங்களைப் பார்ப்பனியத்தின் தீவிர
விமர்சகர்ளாக மாற்றிக் கொள்ளாத வரை, பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டோர்
தங்களின் முதலாளித்துவ விமர்சனத்தைக் கூர்மைப்படுத்திக் கொள்ளாத வரை சாதியை
அழிக்க முடியாது. அது வரை இந்துஸ்தானத்தின் நோய்வாய்ப்பட்ட ஆண் பெண்களாகவே
இருந்து வருவோம், அவர்களுக்கோ நலம் பெற வேண்டுமென்னும் எண்ணம் இருப்பதாகவே
தெரியவில்லை.
வினவு.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக