வெள்ளி, 5 டிசம்பர், 2014

கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அமெரிக்க உற்பத்தி!

அமெரிக்கா அதிக அளவில் 'ஷேல் காஸ்' உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது தான் உலக அளவில் கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 12 நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது வழக்கம். ஆனால் கடந்த வாரம் இக்கூட்டமைப்பின் கூட்டத்தில் அவ்வாறு குறைக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. ஆழ்கடல் பாறைகளில் துளையிட்டு எடுக்கப்படும் இந்த எரிவாயுக்கு 'ஷேல் காஸ்' என பெயர். மேலும் இந்த துளைகளில் இருந்து கச்சா எண்ணெய்யும் அதிக செலவில் எடுக்கப்படுகிறது. கடந்த 2008ல் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 140 டாலர் என ஒபெக் உயர்த்திய போது அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவால் இப்போது அந்த நாட்டில் அதிக அளவு ஷேல் எண்ணெய் மற்றும் ஷேல் எரிவாயு கிடைக்கிறது.


வட அமெரிக்க பகுதிகளில் ஷேல் எரிவாயு கச்சா எண்ணெய் கிடைக்க அமெரிக்கா மேற்கொண்ட இம்முயற்சிக்கு 'பிராக்கிங்' என்று பெயர். அமெரிக்காவில் மட்டும் 665 லட்சம் கோடி கன அடி ஷேல் காஸ் வளம் உள்ளதாக கூறப்படுகிறது. இதை எடுக்கும் அதிநவீன தொழில்நுட்பமும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கா தன்னிடம் கிடைக்கும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகயரித்து அதை சாமர்த்தியமாக சந்தைப்படுத்தும் போது சவுதி உட்பட பல நாடுகள் தங்கள் பொருளாதார பலத்தை இழக்க நேரிடும். அரபு நாடுகளில் இயற்கை வளமாக கிடைக்கும் கச்சா எண்ணெய்யுடன் அதிக செலவு கொண்ட இந்த ஷேல் காஸ் அதிக நாளைக்கு போட்டி போட முடியாது. அதனால் தற்போது சப்ளையை குறைக்க வேண்டாம் என ஒபெக் நாடுகள் இப்போது திட்டமிட்டு இருக்கலாம். ஏனெனில் இன்றும் சவுதியில் தினமும் 3 கோடி பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. அது கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவு இந்தியா சீனா போன்ற அதிக இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அன்னியச் செலாவணியை குறைக்கும். இருந்தாலும் சீனா சற்று பொருளாதார பாதிப்பில் இருக்கிறது. ஆனால் எண்ணெய் வளத்தை அதிகரித்து வளம் காண நினைத்த ரஷ்யாவுக்கு பெருத்த அடி கிடைக்கலாம்; ஈராக் வருமானமும் குறையும்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: