திங்கள், 1 டிசம்பர், 2014

ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை திடீர் முடிவு ஏன்? பின்னணியில் பாஜக?

சென்னை: 18 ஆண்டுகளாக நடைபெற்ற வருமான வரி ஏய்ப்பு வழக்கில், திடீரென ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை முன் வந்ததற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1993-1994-ஆம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல், இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 1991-1992, 1992-1993 ஆகிய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீதும் வருமான வரித் துறை 1996, 1997-ஆம் ஆண்டுகளில் வழக்குத் தொடர்ந்தது.  இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எழும்பூர் சென்னை பெருநகரக் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வழக்கில் சமரசம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா, சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். பின்னர், அந்த மனுவை ஏற்றுக்கொண்டு வரி செலுத்தாத காலத்துக்கு அபராதத் தொகை செலுத்துமாறு வருமான வரித் துறை உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 27ம்தேதி ரூ.2 கோடியை அபராதமாக செலுத்தியுள்ளது ஜெயலலிதா தரப்பு. வருமானவரித் துறையின் சென்னை வட்டார துணை ஆணையர் விஜயகுமார், ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வருமான வரித்துறையில் நீங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை, அது தொடர்பாக விசாரிக்கும் அதிகாரிகள் கொண்ட குழு விசாரித்து கடந்த 26ம்தேதி ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, வருமானவரித்துறை சட்டம் பிரிவு 279(2) அதன் அடிப்படையில் நீங்கள் கீழ்கண்ட தொகையை செலுத்த வேண்டும். அதாவது வரி தாக்கல் செய்யாத தொகை ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 637, அரசு தரப்பு வழக்கு விசாரணை செலவுக்காக ரூ.50 ஆயிரம், வழக்கு விசாரணைக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.22 லட்சத்து 81 ஆயிரத்து 250 ஆக மொத்தம் ரூ.30 லட்சத்து 83 ஆயிரத்து 887 தொகையை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.30 லட்சத்து 83 ஆயிரத்து 887 ஆகும். அதேபோன்று சசிகலாவுக்கு ரூ.28 லட்சத்து 7 ஆயிரத்து 972 , சசி எண்டர் பிரைசஸ் தொடர்பாக 2 வழக்குகளில் ஒரு வழக்கில் ரூ.65 லட்சத்து 67 ஆயிரத்து 872, இன்னொரு வழக்கில் ரூ.75 லட்சத்து 33 ஆயிரத்து 330 அபராதம் விதிக்கப்பட்டது. வரி மற்றும் தண்ட தொகை சேர்த்து மொத்தம் சுமார் ரூ.2 கோடி விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அனைத்தையும் வருமான வரித்துறையிடம் ஏற்கனவே கட்டிவிட்டதாக அதிமுக வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. 18 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று, அதற்காக நீதிமன்றங்களும், அரசும், வழக்கறிஞர்களும் பல மணி நேரம் செலவிட்ட பிறகு, எடுத்திருக்கும் இந்த முடிவினை ஜெயலலிதா தரப்பினர் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து, அப்போது துறை மூலமாகப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முயற்சித்திருந்தால் நீதிமன்றங்களின் பொன்னான நேரம் மிச்சப்பட்டிருக்கும். இந்தப் பிரச்சினை தொடர்பாக தே.மு.தி.க. தலைவர், விஜயகாந்த் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் "இந்த வழக்கு நடைபெறும் 18 ஆண்டுகளில், நீதிபதி பலமுறை உத்தரவிட்டும், ஒரு முறை கூட ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜரானதில்லை என்றும், 30-6-2014 அன்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் சராசரி இந்தியக் குடிமகன் இதுபோன்று செயல்பட்டிருக்க முடியுமா என்றும், அதற்கு சட்டமும் நீதிமன்றமும் இடம் கொடுக்குமா என்றும், இந்த நிலையில் ஜெயலலிதா வருமான வரித் துறையின் இயக்குனர் ஜெனரலிடம் கம்பவுண்டிங் முறையில் வருமான வரி பாக்கியைச் செலுத்தி சமரசமாக தீர்த்துக் கொள்ளத் தயார் என்று அறிவித்திருப்பது சரிதானா என்றும், ஜெயலலிதாவின் வேண்டுகோளை வருமான வரித் துறை ஏற்றுக் கொள்ளுமேயானால், பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஜெயலலிதா மீது நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கை அது திசை திருப்பிவிடும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள் என்றும், அதைக் கருத்திலே கொண்டு வருமான வரித் துறை ஜெயலலிதாவின் சமரசம் பற்றி முடிவெடுக்க வேண்டுமென்றும்" கூறியிருந்தார். அப்படியிருந்தும் வருமான வரித்துறை திடீரென ஜெயலலிதாவிடம் அபராதம் பெற்றுக்கொண்டு, வழக்கை முடிக்க இப்போது முன்வந்துள்ளது. முன்பு இதே வருமான வரித்துறைதான் சமரசத்தை ஏற்க மறுத்தும் வந்தது. ஏற்கனவே சொத்குக்குவிப்பு வழக்கை இழுத்தடித்து அதன்பிறகு வெளியான தீர்ப்பு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நிலை வருமான வரித்துறை வழக்கிலும் நடந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று அதிமுக வட்டாரங்கள் பயப்பட்டன. இந்நிலையில் வருமான வரித்துறையின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசின் கீழுள்ள வருமான வரித்துறை, இதுபோன்ற ஒரு முக்கிய முடிவை எடுக்கும் முன்பாக ஆளும் தரப்பிடம் அனுமதி கேட்காமல் இருக்காது என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. ஜெயலலிதாவுடன் சமரசமாக போகச்சொல்லி ஆளும் வட்டாரம்தான் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதிமுக-பாஜக இடையே உள்ள மறைமுக உறவின் எதிரொலிப்புதான், இந்த சமரசம் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக அதிமுக தரப்பில் இருந்து பாஜக குறித்து எந்த விமர்சனமும் வராததையும் இந்த வழக்குடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, பாஜகவுக்கு எந்தவித நெருக்கடியும் தராமல் வளரவிடச் செய்ய இந்த வழக்கை, பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். இந்த வழக்கின் மூலம் ஜெயலலிதா, பாஜகவின் பிடியில் சிக்கியிருக்கலாம் என்று கிசுகிசுக்கின்றனர் டெல்லி பக்கம்.

tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: