திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் அதிமுகவுடன்
கூட்டணி வைத்தோம். இனி ஒருபோதும் அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க
மாட்டோம்" என திருச்சியில் தேமுதிக நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த்
பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2016 சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பு துவங்குவதற்கு முன்னரே திமுக தனித்துவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
அதே வேளையில் தேமுதிகவின் இந்த அறிவிப்பானது இடது சாரிகள் தலைமையிலான
மக்கள் நல கூட்டு இயக்கத்துக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது. ஏற்கெனவே
இந்த கூட்டமைப்பில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக,
விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் திரண்டுள்ளன.
இந்நிலையில், திருச்சியில் பேசிய பிரேமலதா திமுக, அதிமுக கட்சிகளுக்கு
மாற்றாக தேமுதிக ஏற்கெனவே வலுப்பெற்றுவிட்டது எனக் கூறியிருப்பதை மக்கள் நல
கூட்டு இயக்கம் சார்பில் வைகோ ஆதரித்திருக்கிறார்.
கோவில்பட்டியில் மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் துரை
ரவிக்குமார், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின்
மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர்
கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய வைகோ, "அதிமுக, திமுக அல்லாத கூட்டணியை, அமைக்க இந்த மக்கள்
நல கூட்டு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற, நம்பகத்தன்மை வாய்ந்த
ஆட்சியை உருவாக்க இந்த கூட்டு இயக்கம் செயல்படும்" என்றார்.
2016 தேர்தலில் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும்
திமுக, தேமுதிகவுடனான கூட்டணியை மிகவும் எதிர்பார்த்திருந்தது.
இந்நிலையில், இந்த இரு அறிவிப்புகள் திமுகவுக்கு நிச்சயம் அரசியல்
நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதில் ஐயமில்லை.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் மட்டுமே இருக்கும்
நிலையில், திமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தவிர வேறு எந்த கட்சியும்
முன்வரவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் பாமக அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக
அறிவித்தது. அதன்பின்னர் அக்கட்சி தேர்தல் களத்தில்
தனித்துவிடப்பட்டுள்ளது. தற்போது, திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என
தேமுதிக திட்டவட்டமாக கூறியிருக்கும் நிலையில், திமுகவும் தனித்து
விடப்பட்டிருக்கிறது.
பிரேமலதாவின் அறிவிப்பை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்
செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற
பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தேமுதிக எங்களுடன் கூட்டணி
அமைக்கும் என நம்புகிறோம். மக்கள் நல கூட்டு இயக்கம் தமிழக அரசியலில்
புதிய பாதையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ்
கட்சியும் எங்களுடன் கூட்டு சேர்ந்தால் நிச்சயம் இந்த கூட்டணி மேலும்
வலுப்பெறும்" என்றார்.
கலக்கம் இல்லை: திமுக
தமிழக அரசியலின் சமீபத்திய போக்கு திமுக தனித்துவிடப்பட்டதாக காட்டினாலும்
இத்தகைய அரசியல் மாற்றங்களால் திமுகவுக்கு எவ்வித கலக்கமும் இல்லை எனக்
கூறுகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத திமுக மூத்த தலைவர் ஒருவர்.
மேலும் அவர் கூறும்போது, "இப்போது சில கட்சிகள் சேர்ந்து ஒருங்கிணைத்துள்ள
மக்கள் கூட்டு இயக்கம் எத்தனை நாட்கள் இதேபோல் இருக்கும் என்பதற்கும்
உத்தரவாதம் இல்லை. அப்படியே ஒரு கூட்டணி உருவானாலும் அது தேர்தல்
வெற்றிக்கு வித்திடும் கூட்டணியாக அந்தக் கூட்டணி இருக்க வாய்ப்பில்லை.
இந்தக் கூட்டணி தேமுதிக தலைமையில்தான் அமைய வேண்டும் என்று விஜயகாந்த்
ஒருவேளை கோரிக்கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்தே பார்க்க
வேண்டும்.
மக்கள் கூட்டு இயக்கத்தில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சித் தலைவர்
ஜவாஹிருல்லா, தேமுதிக தங்களுடன் இணைவதை வரவேற்றாலும், பாஜகவுடனான நட்பு
குறித்த நிலைப்பாட்டை விஜயகாந்த் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி
வருகிறார்.
தமிழக தேர்தல் களம் அரசியல் அதிரடி மாற்றங்களுக்கு பெயர் போனது. எனவே, தேர்தல் நெருங்கும்போது எத்தகைய மாற்றமும் நடைபெறலாம்" என்றார் tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக