புதன், 27 ஜூலை, 2011

மலையாளிகளுக்கு பதவி.பிரதமர் செயலாளர் டி.கே.ஏ. நாயருக்கு கல்தா

டெல்லி: பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து டி.கே.ஏ.நாயர் தூக்கப்படவுள்ளார். அவருக்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்பு எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது அவரிடம் தனிச் செயலாளராக இருந்த புலோக் சாட்டர்ஜி நியமிக்கப்படவுள்ளார்.

வரும் நவம்பர் முதல் சாட்டர்ஜி பிரதமர் அலுவலக செயலாளராகவுள்ளார். உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், முன்பு பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக இருந்துள்ளார். இப்போது இவர் வாஷிங்டனில் உலக வங்கியின் செயல் இயக்குனராக உள்ளார்.

இவருக்கு அடுத்த ஆண்டு வரை இந்தப் பதவிக்காலம் உள்ளது. ஆனாலும், புதிய பொறுப்பேற்க வசதியாக அவரை இந்தியா திரும்புமாறு பிரதமர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

பிரதமர் அலுவலகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என சோனியா கருதுவதே நாயர் தூக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், முக்கியமான காரணம், இவர் தனது கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே முக்கியத்துவம் தருவதும், அவர்களுக்கே மத்திய அரசில் முக்கிய பதவிகளைப் பெற்றுத் தருவதுமே காரணம் என்கிறார்கள்.

இதையடுத்து நாயர் மீது கடுப்பான பிற மாநில அதிகாரிகள், அதை பிரச்சனையாக்கியதையடுத்து அவரை பதவியை விட்டுத் தூக்க சோனியாவும் மன்மோகன் சிங்கும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

பஞ்சாப் மாநில ஐஏஎஸ் கேடரைச் சேர்ந்தவரான நாயர், அந்த மாநில அதிகாரிகளையும் அவ்வப்போது கவனித்துக் கொள்ளவும் தவறுவதில்லை என்கிறார்கள். (பிரதமர் பஞ்சாபைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மாநில அதிகாரிகளைக் கவனித்துக் கொண்டால், தனக்கு பிரச்சனை வராது என நாயர் கருதியிருக்கலாம்!).

நாயர் தூக்கப்பட்டு சாட்டர்ஜி அந்தப் பதவிக்கு வருவதால் அதிக பலன் அடையப் போவது பிரதமர் அலுவலக செயலாளர் எம்.என்.பிரசாத் தான். சாட்டர்ஜிக்குப் பதில் உலக வங்கி பதவிக்கு பிரசாத் நியமிக்கப்படவுள்ளார். இதனால் இவர் விரைவில் வாஷிங்டனுக்குச் செல்கிறார்.

பிரதமர் அலுவலத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்த நாயரைத் தான், 2009ம் ஆண்டு, இலங்கையின் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, மன்மோகன் சிங் தனது சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பி அதிபர் ராஜபக்சேவை சந்தித்துவிட்டு வரச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசா தொலைத் தொடர்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கும் விஷயத்தில் அந்த அமைச்சகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளவே பிரதமர் மன்மோகன் சிங் விரும்பவில்லை என்று இவர் எழுதி வைத்திருந்த குறிப்பு நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் தரப்பட்டு பரபரப்பானதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: