வெள்ளி, 13 நவம்பர், 2020

இந்தியாவில் 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் தயார்!

minnambalam.com :ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தில் இதுவரை 4 கோடி டோஸ்களை தயாரித்து இருப்பதாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் 4 கோடி டோஸ் தயார்!

உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. அண்மையில், அமெரிக்கா பிஃப்சர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள மருந்து 90 சதவிகிதம் வெற்றியைத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.   ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் V, 92% பாதுகாப்பு அளிக்கிறது என்று அந்நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்பூட்னிக் V மருந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தால் சோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டெராசெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு மருந்தைத் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் உரிமையை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.<>சீரம் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “40 மில்லியன் டோஸ் தடுப்பூசியை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அபாயகரமான உற்பத்தி மற்றும் இருப்பு உரிமத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிட்யூட் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி 2021 ஜனவரி மாதத்திற்குள் நாட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

சீரம் இன்ஸ்டிட்யூட்டும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) இந்தியாவில் 15 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வதுகட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துகின்றன.

“கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு யதார்த்தமான ஒரு தீர்வாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இந்த தடுப்பூசி இந்தியாவில் மனித பரிசோதனையில் மிகவும் மேம்பட்டது” என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இதுதவிர மற்றொரு கொரோனா தடுப்பூசியான கோவாவாக்ஸ் தடுப்பூசிக்காக அமெரிக்கவின் நோவாவாக்ஸுடன் சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 100 கோடி அளவு டோஸ் தடுப்பூசி வழங்க நோவாவக்ஸ் - சீரம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா


கருத்துகள் இல்லை: