சனி, 11 அக்டோபர், 2014

மோடி ரகசிய பேரம்: மருந்துகளின் விலை கடுமையாக உயரும் ! 8,000 ரூபாய் புற்றுநோய் மருந்து 1 லட்சமாக உயரப்போகிறது ? காங்கிரஸ் கடும் கண்டனம் !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தொழிலதிபர்களுடன் மேற்கொண்டுள்ள ரகசிய பேரத்தால், மருந்துகளின் விலை கடுமையாக உயரும் நிலை உருவாகியுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த மாதம் 15ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தின் தின்தோரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திமோடி சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்னதாக அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் குழுவினர் மோடியைச் சந்தித்து மருந்துகளின் விலைக்கான கட்டுப்பாட்டை நீக்க கேட்டுக்கொண்டனர். திரைமறைவில் நடைபெற்ற இந்த பேரத்தால், 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து தற்போது ரூ.1 லட்சமாக உயரப் போகிறது.
மேலும், மத்திய அரசின் கொள்கையால் நீரிழிவு, ரத்தக்கொதிப்புக்கான மருந்து விலைகளும் பன்மடங்கு உயரும். இந்த விலை உயர்வால் மக்களின் பணம் நேரடியாக தொழிலதிபர்களின் பைகளில் சென்று சேரப்போகிறது. முன்னதாக நேரடி மானியத் திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தை தற்போது பெயர் மாற்றம் செய்து, பாஜகவினர் தொடர்ந்து வருகின்றனர்.
காங்கிரஸ் அல்லாத மகாராஷ்டிரத்தை உருவாக்க மோடி அழைப்பு விடுக்கிறார். ஆனால் சிவாஜி, அம்பேத்கர், ஜோதிலால் பூலே ஆகியோரின் சிந்தனைகளுக்கும், காங்கிரஸின் சித்தாத்தங்களுக்கும் மாறுதல் இல்லை என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ள வேண்டும். அந்தத் தலைவர்களின் நினைவுகளை எப்படி மக்களிடத்தில் இருந்து உங்களால் (பாஜக) அழிக்க முடியும்?
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியாவை பலம் வாய்ந்த நாடாக மாற்றப் போவதாகவும், பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டப் போவதாகவும் மோடி கூறினார். எல்லையில் பாகிஸ்தான் தற்போது நடத்தி வரும் தாக்குதல்களால் நமது வீரர்களும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். ஆனால் தற்போது எல்லாம் சரியாகிவிடும் என்று மோடி கூறுகிறார். எப்போது சரியாகும்? என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.
மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. தின்தோரி பகுதியில் 6 அணைகள் எங்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டுள்ளன. அதேபோல் 120 தொழிற்சாலைகளை தொடங்கி இந்தப் பகுதியை தொழில் மையமாக மாற்றியுள்ளோம் என்றார் ராகுல் dinamani.com

கருத்துகள் இல்லை: