வெள்ளி, 26 செப்டம்பர், 2014

வாடிக்கையாளரை கேட்காமலேயே இன்சுரன்சை புதுப்பித்த விஜயா வங்கிக்கு நீதிமன்றம் தண்டனை !

வாடிக்கையாளரிடம் தெரிவிக்காமலேயே அவருடைய கார் காப்பீட்டை புதுப்பித்ததற்காக விஜயா வங்கி நிர்வாகம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்.ராஜ்குமார், விஜயா வங்கியின் ரங்கராஜபுரம் கிளை மூலம் வாகனக் கடனில் கார் வாங்கி உள்ளார்.
மேலும், ரூ.36,478 செலுத்தி, ஒரு தனியார் பொது காப்பீடு நிறுவனத்தில் காருக்கு காப்பீடும் எடுத்துள்ளார். 2007 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல், ஓராண்டுக்கு செல்லத்தக்க அந்த காப்பீட்டை 2008 ஆகஸ்ட் 13-ஆம் தேதி, விஜயா வங்கி நிர்வாகம் தன்னிச்சையாகப் புதுப்பித்துள்ளது.
வங்கியின் இந்த செயல்பாட்டை சேவைக் குறைபாடாகக் கருதிய ராஜ்குமார், இதற்கு உரிய நஷ்டஈடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வாடிக்கையாளர்களின் காலாவதியாகும் காப்பீட்டை புதுப்பிப்பது வழக்கமான நடைமுறைதான் என வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரகுபதி, நீதிசார் உறுப்பினர் ஜெ.ஜெயராம், உறுப்பினர் பி.பாக்கியவதி ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், கார் காப்பீட்டை புதுப்பிப்பது குறித்து வாடிக்கையாளருக்குத் தெரிவிக்காமல், சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் சேவைக் குறைபாடாக செயல்பட்டுள்ளது. இதற்காக, மனுதாரருக்கு ரூ.10,000 நஷ்டஈடும், ரூ.2,000 வழக்குச் செலவும் தர வேண்டும். மேலும், ரூ.39,478 காப்பீட்டுத் தொகையை 9 சதவீதம் வட்டியுடன், வங்கி நிர்வாகம் அவருக்கு திரும்பத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை: