வியாழன், 25 செப்டம்பர், 2014

ஆவின் பால் கலப்பட வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

ஆவின் பால் கலப்படம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: டேங்கர் லாரிகள் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு வரப்பட்ட பாலில் தண்ணீர் கலந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கூடாது.மாறாக தமிழக அரசு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் தவறுகளை தடுக்கும், கண்டுபிடிக்கும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த தவறுகள் பல ஆண்டுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.ஆகையால் ஆவின் நிறுவனத்திலுள்ள ஊழல் தடுப்பு அதிகாரிகள் அனைவரையும் இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
பாலில் கலப்படம் செய்த வழக்கில் ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினரும் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி.மூலம் நடைபெற்றால் நியாயமாக நடைபெறாது என்பதால் வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.

ஆவின் பால் அடைப்பதற்கு பயன்படும் பாலிதீன் கவர் தயாரிக்க குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு மட்டும் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கு தடையின்றி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாலிதீன் கவர் 40 மைக்ரான் இருக்க வேண்டும். ஆனால் 20 மைக்ரானுக்கும் குறைவாக உள்ளது. இதன் மூலமும் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தையும் உடனே ரத்து செய்து, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் ஆவின் பாலை அதிக விலை கொடுத்து வாங்குவதையும், சில்லறை வணிகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதையும் தடுத்து, தனியார் பால் நிறுவனங்களைப் போல் முகவர்களுக்கு நேரிடையாக வர்த்தக தொடர்புகளை ஆவின் நிறுவனம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

இல்லையெனில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் பால் முகவர்கள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது என அந்த செய்திக்குறிப்பில் எஸ்.ஏ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: