சனி, 27 செப்டம்பர், 2014

என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆவணமும் இல்லை: சிபிஐ கோர்ட்டில் கனிமொழி !

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளில், தி.மு.க.வுக்கு சொந்தமான கலைஞர் டி.வி. பெற்ற ரூ.200 கோடி பற்றிய வழக்கும் ஒன்றாகும். இந்த வழக்கை சி.பி.ஐ. நடத்தி வருகிறது. வழக்கு விசாரணை, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான வாதம், டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு நேற்று நடைபெற்றது. சிறப்பு அரசு வக்கீல் ஆனந்த் குரோவர் வாதிடுகையில், ‘கலைஞர் டி.வி.க்கு வந்த பணம், நேர்மையான வர்த்தக பரிவர்த்தனை அல்ல’ என்று கூறினார். கனிமொழி சார்பில் அவருடைய வக்கீல் சுஷில் பஜாஜ் ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:- இந்த வழக்கில் கனிமொழி மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் ஆ.ராசாவுடன் சேர்ந்து, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி சென்றடைய ஏற்பாடு செய்தார் என்பதுதான். ஆனால் இதற்கு எந்த ஆவணமும் இல்லை. இவ்வழக்கில், அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த புகாரிலோ, சாட்சிகளின் வாக்குமூலங்களிலோ கனிமொழி இந்த பணபரிவர்த்தனையில் சம்பந்தப்பட்டு இருப்பதாக எந்த இடத்திலும் காட்டப்படவில்லை.

ஆகவே, இந்த ஆவணங்களையும், வாக்குமூலங்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு, கனிமொழிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்ற முடிவுக்கு கோர்ட்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

29-ந் தேதி அவர் மீண்டும் வாதிடுகிறார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: