செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

சசிகலா :தீர்ப்பு நல்லவிதமாகவே இருக்கும்... சுதாகரன் இளவரசி சசிகலா ஆகியோர் இன்று ...


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்லவிதமாகவே இருக்கும் என்றும், அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் தொடரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்தார்.
அதிமுக எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பான்மை பலம் இருப்பதாக சசிகலா கூறினாலும், அவர்மீது சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவரவிருக்கும் நிலையில், அவரை ஆட்சியமைக்க அழைக்கக்கோரி ஆளுநர் தரப்பில் தயக்கம் காட்டும்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறும் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் கூவத்தூர் விடுதிக்கு தொடர்ந்து 2 நாட்களாக சென்று அவர்களிடம் பேசிவந்த சசிகலா நேற்று 3வது நாளாக மீண்டும் கூவத்தூர் விடுதிக்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார்.
கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சூழ சசிகலா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது, எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது கழகத்திற்காக 1991 தேர்தலில் வெற்றி தேடித்தந்தவர் ஜெயலலிதா. தமிழக மக்கள் ஜெயலலிதா முழுமையாக நம்பினார்கள். எம்ஜிஆர் மறைந்த பின் கழகத்தை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. மக்கள் முழுமையாக அவரை நம்பினர்.

நான் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருப்பதாக சொல்கின்றனர். தற்போது அனைத்து ஊடகங்களும் தற்போது எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கிறீர்கள்.
எங்கள் எம்.எல்.ஏ.க்களை எதிரிகள் மிரட்டி வருகின்றனர். அதன் காரணமாகத்தான் தொடர்ந்து 3 நாட்களாக நான் அவர்களை சந்தித்து வருகிறேன். எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என புகார்கள் எழுந்துவருவதாக ஊடகங்களில் தெரிவிக்கின்றனர். தற்போது அனைத்து எம்.எல்.ஏக்களும் உங்கள் முன் உள்ளனர்.
இன்று அவர்கள் அனைவரும் மிகுந்த சந்தோசத்துடன், நானும் அவர்களோடு இன்று இரவு தங்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதையடுத்து, எம்.எல்.ஏ.க்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், எல்லோரும் கேட்டுக்கொண்டதன் பேரில் நான் இன்று இங்கு தங்குகிறேன்.
வரும் ஆண்டுகளில் ஆட்சியை நடத்தப்போவது நாம் தான். மக்களின் பிரச்னையை நாம் அவர்களின் வீட்டுக் கதவுகளை தட்டி குறைகளை கேட்கப் போகின்றோம். எத்தனை முறை கேட்டாலும் நாங்கள் அதிமுக.,வுக்கு தான் ஓட்டு போடுவோம் என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் உழைக்கத் தயாராகிவிட்டோம். அம்மா நினைவிடத்தில் சிறப்பான மணிமண்டபம் அமைப்போம்.எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின்னர் பிளவுப்பட்ட கழகத்தை இணைத்தவர் அம்மா. பிரச்னை வந்தால் அதிமுக தொண்டர்கள் சூறாவளியாக போராடுவார்கள்.
கவர்னர் சட்டம், ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். நான், எல்லாவற்றையும் நல்லதாகவே நினைக்கிறேன். நீங்கள் ஒன்றொன்றாக, அடுத்து என்ன நடக்கப்போகுது என்று பார்க்கத்தான் போகிறீர்கள் எப்படியும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும். இன்று அறிவிக்கப்படவிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் நல்லவிதமாகவே இருக்கும். அம்மாவின் ஆசியோடு அதிமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும். சட்டமன்றத்தில் அம்மாவின் படத்தை நாம் நிச்சயம் திறந்து வைப்போம் என்று கூறினார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: