வியாழன், 21 டிசம்பர், 2023

ஹிந்தி திணிப்பால் சிதறப்போகும் இந்தியா கூட்டணி? ஹிந்தியில் பேசிய நிதிஷ்குமார் அடாவடி!

 tamil.oneindia.com -  Mathivanan Maran :  டெல்லி: "இந்தியா" கூட்டணியின் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு ஆகியோர் மீது ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் நேற்று "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
I.N.D.I.A bloc: Nitish loses cool after DMK request translation of Hindi speech
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், அக்கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது டிஆர் பாலு, நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசுவதை மொழிபெயர்த்து சொல்ல வேண்டும் என்றனர். இதையடுத்து மனோஜ் ஜா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டிருந்தார்.

ஆனால் நிதிஷ்குமார் கடும் கோபத்துடன், இந்தி இந்தியாவின் தேசிய மொழி. ஆகையால் திமுக தலைவர்கள் இந்தி மொழியை கற்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போனபோதே அவர்களுடன் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்தும் போய்விட்டது என ஆவேசப்பட்டிருக்கிறார். அத்துடன் தமது கட்சியின் மனோஜ் ஜா, தமது இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததையும் உடனே நிறுத்துமாறு நிதிஷ்குமார் கோபத்துடன் கூறினாராம். இது "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முந்தைய "இந்தியா" கூட்டணியின் 3 கூட்டங்களிலும் நிதிஷ்குமாரின் இந்தி மொழி பேச்சை மனோஜ் ஜாதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அதனடிப்படையில்தான் இம்முறையும் டிஆர் பாலு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆனால் "இந்தியா" கூட்டணி மீது ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் நிதிஷ்குமார் தமது கோபத்தை நேற்று திமுக தலைவர்கள் மீது வெளிப்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை: