வெள்ளி, 18 செப்டம்பர், 2015

பெரியார் தன்மீது கோபப்பட்டவர்களை இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே” என்று வரவேற்றவர் ,

பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய், ரிஷியாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் “பறையனாய்ப்” பிறந்து “பிராமணனாய்ச்” செத்தவரோ “பிராமணனாய்” பிறந்து “பறையனாய்” செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய்ச் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய்ச் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.!”
“நடுவில் முருகன் இரண்டுபக்கமும் வள்ளி தெய்வானை என்று கும்பிடுகிறாயே, இதே போல நடுவில் வள்ளி இரண்டு பக்கம் ஆண் என்று இருந்தால் கும்பிடுவாயா? கோபப்படுவாயா?
வமானங்களோடு வாழ மக்களை அனுமதிக்காதவர் பெரியார், அவர்களே அதை விரும்பினாலும் கூட!
“நீ யார் கேட்க? நீ யார் சொல்ல? நீதான் முட்டாள்” என்று தன் மேல் கோபப்பட்டவர்களை தயங்காமல் அனுமதித்தவர் பெரியார். “இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே” என்று வரவேற்றவர் பெரியார், அவர்களே அதை விரும்பாவிட்டாலும் கூட.
“நான் சொன்னாலும் கூட பகுத்தறியாமல் ஏற்காதே, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்” என சொந்த முட்டாள்தனங்களின் மீது சுரணை எழுப்பியவர் பெரியார்.
“என்ன தெரியும் உனக்கு வாயை மூடு, சொல்றதை மட்டும் கேள்!” என்று ஈன்ற தந்தையே ஈட்டியாய் பாய்கையில், “என்னையும் விடாதே! ஏன் என்று கேள்!” என்று பகுத்தறிவு பாய்ச்சினாரே அதனால்தான் அவர் தந்தை பெரியார்.
யாருக்கு வரும் அந்த அறிவுத்துணிச்சல், “கடவுள் இல்லை இல்லை என்கிறாயே வந்தால் என்ன செய்வாய்?” என்று கடவுளின் காப்பாளர்கள் சீறிய போது, சிறிதும் `வெறி’ இன்றி “வந்தா ஏத்துக்கப் போறேன்!” என்றாரே என்ன ஒரு சிந்தனை அழகு!

பெரியார் வாயெடுத்த போதெலாம் வாயடைத்து போனது அறிவீனம். “கடவுள் நம்பிக்கைகாக ஒருவன் பார்ப்பானுக்கு அடிமையாக, கீழ் சாதியாக இருக்க வேண்டுமா?” என்று பெரியார் எதார்த்த சமூக நிலைமைகளிலிருந்து கேட்ட கேள்விக்கு இன்று வரை பார்ப்பனியம் யோக்கியமாக பதில் சொன்னதில்லை.
அந்தக் கடவுளே ஆனாலும் பெரியார் பார்ப்பன பிறவி ஒடுக்குமுறையை எதிர்த்தார் என்பதை பக்குவமாக மறைத்துவிட்டு, பெரியார் கடவுளை எதிர்ப்பவர் என்று மட்டும் மக்களிடம் பிரச்சாரம் செய்து உண்மையை மறைக்கிறார்கள் இன்றளவும்.
பெரியார்
“இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது.”
ஒவ்வொரு மதமும் தன்னை வந்து சேர்ந்தவர்களை கோட்பாட்டளவில் இஸ்லாமியராக, கிருத்தவராக வரித்துக்கொண்டது. பார்ப்பன இந்துமதமோ சித்தாந்த அடிப்படையிலேயே சொந்த மதத்துகாரனையே நீ சூத்திரன் தள்ளிநில்லு, பள்ளன் , பறையன், தீண்டப்படாதவன் என்று சாதியாக விலக்கி வைக்கிறது. இந்த அயோக்கியத்தனம் ஒரு மதமா என பெரியார் கேட்டது சரிதானே!
அதுமட்டுமல்ல, ” உன் மதம் சாதி பார்க்கும் மதம், உன் சாமி சாதி பார்க்கும் சாமி … சக மனிதனையே மனிதனாக மதிக்காத இரண்டையுமே ஒழி ! ” என்றார். இதிலென்ன தப்பு.
“இந்து மதத்தை விட்டு நீங்காமல் இழிவு நீங்காது” என்றார்! சொந்த விருப்பு வெறுப்பிலிருந்தல்ல சமூக எதார்த்தத்திலிருந்து சரியாகவே சுட்டிக்காட்டினார் இப்படி. “இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய், ரிஷியாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் “பறையனாய்ப்” பிறந்து “பிராமணனாய்ச்” செத்தவரோ “பிராமணனாய்” பிறந்து “பறையனாய்” செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய்ச் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய்ச் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.!” என்று இந்துமதத்தை தோலுரிக்கையில் எந்த மத்ததையும் விட்டுவைக்கவில்லை பெரியார்.
கருத்து உபதேசியாக காலம் தள்ளவில்லை பெரியார். கலகக்காரகவும் களம் கண்டவர் பெரியார். அனைத்து சாதியினருக்கும் ஆலய நுழைவு உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை என்ற போராட்டங்களின் ஊடாக சாதியம்தான் இந்துமதம் அது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதை பக்தர்களுக்கும் புரியவைத்தார்.
“ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றால், அந்த ஆண்டவனை பிறவி அடிப்படையில் பார்ப்பனனைத் தவிர பிறிதொருவர் தெட்டு பூசை செய்தால் சாமி தீட்டாகிவிடும்” என்பது பார்ப்பன சதியா? பகவான் சதியா? என்று சுயமரியாதையை தூண்டினார்.
“உன்னை பிறப்பிலேயே இழிவுபடுத்தும் இந்து மதம் ஒரு மதமா கொடுமையா?” என்ற பெரியாரின் கேள்விகள் பக்தனாய் இருப்பதற்காக சுயமரியாதையை இழக்கவேண்டியதில்லை என்று இன்றும் பின்தொடர்கின்றன. பதில் சொல்ல நியாயமற்ற பார்ப்பன இந்து மதம் இன்றும் கோயில் கருவறையிலேயே “கடவுளை பரப்பியவன் அயோக்கியன்” என்ற பெரியாரின் கருத்துக்கு சாட்சியாய் நிற்கிறது.
பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்று பார்ப்பனர்கள் வகுத்துவிட்ட எந்த கட்டுக்கதைகளையும் விட்டுவைக்கவில்லை பெரியார்.
எல்லோரும் முருகன் வள்ளி தெய்வானை என்று கன்னத்தில் போட்டு கும்பிட்ட நேரத்தில் பெரியார், “நடுவில் முருகன் இரண்டுபக்கமும் வள்ளி தெய்வானை என்று கும்பிடுகிறாயே, இதே போல நடுவில் வள்ளி இரண்டு பக்கம் ஆண் என்று இருந்தால் கும்பிடுவாயா? கோபப்படுவாயா?” என்று புத்திக்கு உரைக்கும்படி கேட்டார். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்பதற்காக புராண ஆபாசங்களையும் மக்களை முட்டாளாக்கும் மடமைகளையும் விட்டுவைக்காமல் பெரியார் விளாசித்தள்ளியதால்தான் ஆரியபார்ப்பன கொடும்கோன்மைக்கு எதிரான அரசியல் அடித்தளம் இன்னும் இங்கே பட்டுவிடாமல் இருக்கிறது.
“பெண் பிள்ளைகளை சில்லுகோடு விளையாடவிடாது சிலம்பம் கற்றுக்கொடு” என்றார். “பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம்” என்றார்.
ஜகத்குரு கைம்பெண்களை விதவை எனவும் தரிசுநிலம் எனவும் அவமதித்து ஒதுக்கிவைக்க உபதேசிக்கிறபோது, பார்ப்பன எதிர்ப்பாளர் பெரியாரோ பார்ப்பன பெண்கள் உள்பட யாராயிருந்தாலும் மறுமணத்தை ஆதரித்தும், அவர்கள் மீதான மத பிற்போக்கு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
பெண்களுக்கு கல்வி முக்கியம் என்று வலியுறுத்தியதோடு அது பகுத்தறிவாக விளங்கவேண்டும் எனவும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஊக்கப்படுத்தினார். பெண்களே ஒரு மாநாட்டில் அவரது பணிகளை சிறப்பித்து வழங்கிய பட்டம்தான் பெரியார் என்பது. பெண்கள் இப்படி மதிப்பளிக்கும் அளவுக்கு யோக்கியதை எந்த சாமியாருக்காவது சங்கராச்சாரிக்காவது உண்டா? அதனால்தான் அவர் சமூகத்திற்கே பெரியார் ஆனார்!
சொல்லும் கருத்துக்களை சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது, தனக்கென சுயநலமாக ஆதாயம் பார்க்கமல் சமுகமாற்றத்திற்காக வாழ்நாட்களை அர்ப்பணிப்பது, மக்கள்மீது நம்பிக்கை வைத்து வேலை செய்வது என்ற விடாப்பிடியான போராட்டங்களில் இளமை துடிப்புதான் பெரியார். பல்வேறு சமூகபரிமாணங்களோடு நாத்திகத்தையும் பார்ப்பன எதிர்ப்பையும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக கட்டியெழுப்பிய சிந்தனை உறுதிதான் பெரியார். சூழ்ந்திருக்கும் பார்ப்பன பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க நம் ஒவ்வொருவருக்கும் அந்த உறுதி இப்போது தேவைப்படுகிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் சொன்னார், “இந்த வேலைகளை செய்வதற்கு யாரும் முன்வராததால் இவைகளை தோள்மேல் சுமந்துகொண்டு நான் செய்தேன் என்பதைத்தவிர இதற்கான தகுதியும் யோக்கியதையும் எனக்கு இருக்கிறது என்பதால் அல்ல”, எனும் பொருள் படும்படி பேசியிருப்பார்.
எந்த வகையிலும் சமூகமாற்றத்திற்கான வேலைகளை தட்டிக்கழிக்காமல் பெறுப்பேற்றுக்கொள்ள ஏன் நமக்கு இப்படி தோன்றுவதில்லை! பதிலுக்கு பெரியார் காத்திருக்கிறார் போராட்ட களங்கள் எங்கும்!
– துரை.சண்முகம் வினவு.com

கருத்துகள் இல்லை: