வெள்ளி, 18 செப்டம்பர், 2015

பாக். விமானப்படை தளம் மீது தலிபான் அதிரடித் தாக்குதல்...42 பேர் பலி !

பெஷாவர் : பாகிஸ்தானில் விமானப்படை தளம் மீது தலிபான்கள் இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் படாபர் விமானப்படை தளம் உள்ளது. இப்பகுதிக்கு செல்லும் பாதைகளில் இன்று வழக்கம்போல் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவ உடை அணிந்து வந்த 13 தீவிரவாதிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இரண்டு பாதைகள் வழியாக நுழைந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.  கையெறி குண்டுகள், மோர்ட்டர் ரக குண்டுகள் மற்றும் ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளால் பாதுகாப்பு படை வீரர்களை கண்மூடித்தனமாக தாக்கிய தீவிரவாதிகள், விமானப்படை தள வளாகத்தில் உள்ள மசூதிக்குள் சென்று தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டனர்.
தகவல் அறிந்த பாதுகாப்பு படை வீரர்களும் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ கேப்டன், விமானப்படை பொறியாளர்கள் உள்பட 29 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 13 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 8 வீரர்கள் உள்பட 22 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் தற்கொலைப் படை பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலையடுத்து விமானப்படை தளத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில தீவிரவாதிகள் அப்பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: