வியாழன், 8 அக்டோபர், 2020

இங்கே சுட்டு வீழ்த்தப்பட்டு கிடப்பது யார் தெரியுமா? இவர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் டாக்டர் ராஜினி திரணகம ராஜசுந்தரம்!...

இந்த படம்..... யாழ்ப்பாணத்து தெருவில்..... இங்கே சுட்டு வீழ்த்தப்பட்டு

Dr.  Rajini Thiranagama.Rajasundaram 

கிடப்பது யார் தெரியுமா? இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் டாக்டர் ராஜினி திரணகம ராஜசுந்தரம் ! . இவர் லண்டனில் பார்த்த வேலையை உதறி தள்ளிவிட்டு யாழ்ப்பாண மருத்துவ பீடத்தை செயல்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நாடு திரும்பியவராகும் . இவர் குண்டடி பட்டு இறந்து வீதியில் கிடக்கிறார். . அந்த வீதி வழியே செல்பவர்கள் ஏதும் அறியாதவர்களாக போகிறார்கள் வருகிறார்கள் ஏன் தெரியுமா? பயம் பயம் பயம் .. புலிகளுக்கு பயம் . ஜெர்மன் நாசிகளை விட நாசகாரிகளான பிரபாகரன் குண்டர்களின் அடுத்த சூடு எவருக்கு என்றே தெரியாத காலம் அது . தங்களோடு தங்கள் ஊரில் பிறந்து வளர்ந்து தங்கள் யாழ்மண்ணுக்கே சேவையாற்ற திரும்பி வந்த ஒரு தமிழ் பெண் டாக்டர் இவர் என்பதை கூட சிந்திக்க அனுமதி மறுக்கப்படடவர்கள் அந்த மக்கள்.

வீழ்ந்து கிடைக்கும் பேராசிரியை மீது ஒரு சின்னஞ்சிறு அனுதாப பார்வை செலுத்தி விட்டாலே புலிகளின் சந்தேக குறிக்கு இலக்காக வேண்டிவரும் என்ற மயான பயம் எங்கும் நிலவிய அந்த கொடூர காலங்கள்

ilankainet.com : மரணத்தினுள் வாழ்ந்தோம்! "One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" Rajini Thiranagama.



இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

1989 ம் ஆண்டு செப்ரம்பர் 21ம் நாள் வியாழக் கிழமை பாதுகாப்பு காரணங்களுக்காக எனது

மட்டுப்படுதப்பட்ட நடமாட்டத்துடன் வவுனியா நகரிலிருந்தேன். 1989 ம் ஆண்டு செப்ரம்பர் 23ம் நாள் மதியமளவில் ராஜினியின் மாணவர் எனது மைத்துனி தவணை விடுமுறைக்காக வவுனியா வீட்டிற்கு வந்தவர் என்னை ஒரு வாங்கு வாங்கிவிட்டார். “உங்கள் குறூப்தான் எங்கள் விருப்பமான விரிவுரையாளைரை கொன்றது. ஏன் இப்படி அநியாயம் செய்கின்றீர்கள்” என்று. நான் கூறினேன் விசாரித்து சொல்கின்றேன். ஆனால் எங்கள் குறூப் செய்வதற்கு சந்தர்பம் இல்லை என்று. பாதுகாப்பு காரணங்களினால் வவுனியா நகரை விட்டு நகர்ந்து சென்று உண்மைகளை அறிய முடியாத நிலமைகள் எனக்கு. இன்று போல் அன்று தொடர்பு சாதனங்கள் பெரிய அளவில் இல்லாத கால கட்டம்.

ஆனால் எம்மீதான் குற்றச்சாட்டுக்களில் உண்மைகள் இருக்காது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் மேலெழுந்து நிற்க மீண்டும் மறுக்கின்றேன். முடிந்தவரை தொடர்புகளை ஏற்படுத்தி விசாரிக்கின்றேன். இருதினங்களின் பின்பு இக் கொலை சம்மந்தமான சகல விடயங்களையும் தெளிவுபடுத்தினேன். இந்தக் குழப்பம் சிறிது காலம் நீடித்தது சிறிது காலத்தின் பின்பு வழமைபோல் இக்கொலகளை புலிகளே செய்தார்கள் என்பது பொது மக்கள் சிலருக்கு தெரிய வந்தது. ஆனால் பல வெகு ஜனங்களிடம் உண்மை உறங்கியே கிடந்தது. ஆனால் இன்று உண்மைகள் உறங்கவில்லை. ஆனால் ராஜினி மட்டும் உறங்கிவிட்டாள். வேண்டாம் இனியொரு இது போன்ற உறக்கங்கள்.

மரணத்தை இரசிக்கு ஒரு மனித சமூகத்தை உருவாக்கும் நிகழ்வுகளை நாம் நிறுத்த வேண்டும். மீண்டும்…. மீண்டும் கரம் சேர்ப்போம் வாருங்கள் தோழியரே! தோழர்களே!! இனி ஒரு நல் விதி செய்வோம் இந்த மனித குலத்திற்கு.

1989 செப்ரம்பர் 21ம் நாள் வியாழக் கிழமை பி.ப 4 மணியளவில் யாழ்பாண பல்கலைக் கழகத்தின் மருத்து பீடத்திருந்து 2ம் வருட மருத்துவ பீட மாணவர்களின் இறுதிப்பரீட்சை முடித்து. இப் பரீட்சைக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி விட்டு வழமைபோல் தனது துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்புகின்றார் ராஜினி. அவரின் பின்புறத்தே இருந்து பெயர் கூறி அழைக்கப்பட்டார். துவிச்சக்கர வண்டியை நிறுத்தி அதிலிருந்து இறங்காமல் தன்னை அழைந்தவரை திரும்பி பார்க்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழித்தொழிக்கும் பிரிவினரால் நெத்தியில் சுடப்பட்டார் ராஜினி.

அப்போது தனது தலையை பாதுகாப்பதற்கான கரங்களை மட்டும் ஆயுதமாக ராஜினி கொண்டிருந்தார். துப்பாக்கி சூட்டினால் நிலத்தில் வீழ்ந்த ராஜினியை மீண்டும் இரு தடவை தலையின் பின்புறமாக சுட்டனர் கொலைகாரர். இது அவர் உயிர் தப்புவதற்குரிய வாய்ப்புக்களை இல்லாமல் உறுதி செய்துவதற்காக சுடப்பட்ட சூடுகள். இதன் பின்னரே அவ்விடத்தை விட்டு கிழம்பினார்கள் கொலைகாரர்கள்.

இந்த கொலைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவர் பொஸ்கோ என்பவர் ஆவர். இக் கொலை சூட்டுச் சத்தங்களை அவரின் சின்ன மகள் கேட்டும் அளவிற்கு திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள யாழ் மருத்துவ பீட முன்வாசலுக்கும் ராஜினி குடும்பம் தங்கியிருந்த வீட்டிற்கும் இடையில் நடைபெற்றது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பலரும் வாகனம் வழங்கி உதவி செய்ய தயங்கினர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவனுக்கு ஜீவ கார்ண்யம் காட்ட முன்வராத அளவிற்து மனிதம் சாகடிக்கப்பட்டிருந்தது அந்தக் காலகட்டத்தில். மக்கள் அவ்வளவு பயம் அன்று துப்பாக்கி சனியனுக்கு.

சூட்டுச் சம்பவத்தை கேள்வியுற்ற அவ்விடம் விரைந்தனர் சில பொது மக்கள். இதில் எனது உறவினர் ஒருவரும் அடக்கம். அவரை ஈபிஆர்எல்எவ் இன் ஆதவாளர் என்ற கோதாவில் வெறுப்புடனும் பார்த்த சம்பவங்களும் உண்டு. காரணம் இக் கொலை செய்தவர்கள் இந்திய இராணுவத்தின் அனுசரணையுடன் செயற்படும் ஈபிஆர்எல்எவ் தான் செய்தது என்ற செய்திப் பரப்பலால். இக்கொலையை கண்டித்து உடனடியாக மருத்துவ பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட அவசர எதிர்ப்பு ஊர்வலத்தில் இக் கொலைக்கு காரணம் இந்திய அமைதிகாப்பு படையின் அனுசரணையுடன் செயற்படும் விடுதலை அமைப்பே என்றும் கதைகள் பரப்பப்பட்டன.

இக் கொலையை செய்தவர்கள் யார் என மருத்துவ பீட மாணவர்கள் பலருக்கு தெரிந்திருந்தும் பயப்பீதியினால் வழமைபோல் மௌனம் காத்தனர். மேலும் வதந்திகளுக்கு வலு சேர்பதுபோல் அன்றைய காலகட்டத்தில் ரமேஸ் என்று அழைக்கப்படும் அற்புதன் என்பவரை தலைமை ஆசிரியராக கொண்ட தினமுரசு இல் இக் கொலையை ஈபிஆர்எல்எவ் மேற்கொண்டது என்று கட்டுரையை ரமேஸ் வரைந்திருந்தார்.

இதே மாதிரியான கருத்தை பிரேமதாஸாவுடன் நல்ல உறவில் இருந்த டயான் ஜெயத்திலகாவும் வெளியிட்டார். அப்போது புலிகளும் பிரேமதாஸா தலைமையிலான இலங்கை அரசும் நல்ல உறவில் இருந்தனர். இக் கொலைக்கான நாளை மாணவர்களின் இறுதிப் பரீட்சை தினம் அன்று புலிகள் திட்டமிட்டே தெரிவு செய்து இருந்தனர். காரணம் மாணவர்கள் பரீட்சைகள் முடிந்ததும் விடுமுறைக்காக தமது வீடுகளுக்கு புறப்படுவதில் ஆர்வமாக இருப்பர். இதனால் மாணவர் மத்தியிலிருந்து இக் கொலைக்கான எதிர்பலைப் போராட்டங்கள் பாரியளவில் தொடர்ச்சியாக நடைபெற வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் என்பதற்காக.

சிறிது காலத்தின் பின்பு இக் கொலை சம்மந்தமான முழுமையான விபரங்களை அறிந்து முடிந்தது. இதில் ராஜினியை புலிகளுக்காக உளவு பார்த்த யாழ் மருத்துவ பீட மாணவர்கள் இருவரில் ஒருவர் எனது மாணவன் தர்மேந்திரா. முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது க.பொ.த உயர்தர கல்வியை வவுனியா மகா வித்தியாலயத்தில் மேற்கொண்டவர். யாழ் மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்ற இவர் 1985 களில் என்னையும் பல தடவைகள் யாழ்பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்க நிகழ்வுகளில் உளவு பார்த்தவர் என்பதுவும் எனக்கு தெரியும். இவர் தனது மருத்து படிப்பிற்கு பின்பு புலிகளின் மருத்துவ பிரிவில் வேலைசெய்தவர். தற்போது புலம் பெயர் தேசத்தில் இருக்கின்றார். இவருடன் இன்னொரு மருத்துவ பீட மாணவன் சூரியகுமார் இணைந்து செயற்பட்டிருக்கின்றார். இவரும் தற்போது புலம் பெயர் தேசத்தில் மருத்துவராக பணி புரிகின்றார். மேலும் இந்த உளவுக்கு ராஜினி வீட்டிற்குள் சென்று உதவி செய்தவர் எனது இன்னொரு மாணவனின் அண்ணன். இவர் ராஜினி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருபவர். இவர்கள் இருவரும் வவுனியாவில் ஒரே காலகட்டத்தில் க.பொ.த உயர்தர மாணவர்களாக இருந்தவர்கள். மருத்து பீடத்தின் இருமாணவர்களின் உளவுபார்த்தல் ராஜினியின் வீட்டிற்கு நட்பு ரீதியில் சென்று வந்து தகவல் சொன்னவர். ராஜினியின் நடமாட்டத்திற்கான சைகை மூலம் இறுதி நேரத் தகவலை வழங்கி பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி செல்வகுமார் கொலை நேரடியாக செய்த புலிகளின் புலனாய்வுப்பிரின் இல்லாது ஒழிக்கும் முக்கிய உறுப்பினர் பொஸ்கோ என்று ஐவரால் நிறைவேற்றப்பட்ட கொலை இது.

இதற்கான சகல உத்தரவுகளும் புலிகளின் தலைமைப் பீடத்தினால் வழங்கப்படடிருந்தன. இக் கொலை நடைபெற்ற மறு தினம் எனது மாணவனான மருத்துவ பீட மாணவன் முறைப்படி கிராம சேவகரிடம் அனுமதி பெற்று கொழும்பிற்குச் தப்பிச் சென்றுவிட்டார். இவற்றை அன்றைய கால கட்டத்தில் யாழ் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் பல பொது மக்கள் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

இதே போன்ற ஒரு நிகழ்வை இவ்விடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இவ் நிகழ்வின் கதாநாயகன் யாழ் பல்கலைக் கழக மருத்து பீடத்தின் கோடியில் வீடமைத்து வாழ்ந்து வந்தவர். எம்மில் பலருக்கு தெரியாதவர் இவர். ராஜினி போல் பட்டப்படிப்போ சர்வதேச பிரபல்யமோ ஏன் உள்ளுர் பிரபல்யமோஈ அல்லது புத்திஜீவியோ இல்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகிய 1970 களில் இருந்து இடதுசாரி செயற்பாடுடைய ஈழவிடுதலை அமைப்பிற்காக தனது வீடு குடும்பம் என்று எல்லாவற்றையும் வழங்கியவர் வைகுந்தவாசம். இவர் திருநெல்வேலி மரக்கறிச் சந்தையில் குத்தகை சேகரிக்கும் கடைநிலை கிராம சேவை உத்தியோகஸ்தர் விவசாயி. 4 பிள்ளைகளின் தந்தை இவரும் இக்கால கட்டத்தில்தான் புலிகளால் சுட்டுக்கொலப்பட்டார்.

இதே திருநெல்வேலியில்தான். சந்தையில் வேலையில் இருந்த தருணத்தில் பலர் முன்னிலையில். இவரின் தம்பி ஈரொஸ் அமைப்பின் யாழ்பாணத் தளபதி. இந்த பழியும் முதலில் ஈபிஆர்எவ்எவ் மீதே வீழ்ந்தது. ராஜினியின் பிரபல்யம் அவரை இங்கு நினைவு கூர வைக்கின்றது. கூட்டங்கள் கூட வைக்கின்றது. குறும்படம் எடுக்க வைத்திருக்கின்றது. பல்கலைக் கழக முன் வாசல் கொலையை இன்று உலகம் பேசுகின்றது. பல்கலைக் கழக பின்புறக் கொலையை யாரும் அறியாமலே பேசாமலே இருக்கின்றோம். வைகுந்தம் போன்ற அடிமட்ட மக்கள் போராளிகளின் விடயங்கள் விலாசம் இல்லாமலே போய்விடுகின்றது. இது போன்ற விடயங்களும் பதிவுசெய்யப்பட வேண்டும் கேள்வி எழுப்பப்படவேண்டும் என்ற காரணங்களுக்காக இங்கு குறிப்பிடுகின்றேன்.

இளம் பிராயத்தில் ராஜினி யாழ்ப்பாண மாநகர சபைக்குள் உட்பட்ட றக்கா வீதி நாவலர் வீதி சந்திப்பு அருகில் வசித்து வந்தார். யாழ்ப்பாணக் கல்லூரி உப அதிபர் இராஜசிங்கம் என்பவரின் மகள் ஆவார். மத்தியதர கிறிஸ்தவ குடும்பத்தில் 4 பெண்களில் 2 வது பெண்பிள்ளையாக பிறந்தார். 1954 பெப்ரவரி மாதம் 23ம் திகதி பிறந்த ராஜனி தனது கல்வியை அமெரிக்க மிசனறியால் நாடாத்தப்பட்ட வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்றார். மிகச் சிறிது காலம் ஆங்கில பாடத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கற்றார். 1973 ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவத்துறை கற்றலுக்கான அனுமதியைப் பெற்றார். பல்கலைக் கழக மாணவர்கள் பலரிடமும் காணப்படும் ஆர்வத்துடன் மாணவர் போராட்டங்களில் ராஜினியும் ஈடுபடலானார்.

1970 களில் இலங்கைப் பல்கலைக் கழகங்களில்(அப்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டிருக்கவில்லை) ஜனதா விமுத்தி பெரமுன(ஜே.வி.பி) என்ற இரகசிய அமைப்பின் மாணவர் அமைப்பின் செல்வாக்குகள் அதிகமாக இருந்தன. ஜேவிபி யினர் இலங்கையில் ஒரு வர்க்கப் புரட்சிக்கான கோஷங்களை முன்வைத்து இலங்கையின் சிங்கள வறிய கிராமங்களில் பெரும்பாலும் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர். சிறப்பாக அன்றைய காலகட்டத்தில் கொழும்பு பெரதனிய பல்கலைக் கழகங்களின் மாணவர் அமைப்புக்களின் தலைமைத்துவ பொறுப்பு ஜேவிபி இடமே இருந்தன. அந்த அளவிற்கு மாணவர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தது ஜேவிபி. பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் பலரும் ஜேவிபி மாணவர் பிரிவில் அங்கத்தவராக இருந்தனர். தயாபால திரணகம என்ற பல்கலைக்கழக மாணவனும் இந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு படிப்புடன் கூடிய அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தார்.
ராஜினியின் குடும்ப சூழல் கல்வி கற்ற பாடசாலை போன்ற வழிகளில் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். பல்கலைக் கழகத்தில் சிங்கள தமிழ் மாணவரிடையே நிலவி வந்த இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் ராஜினி புலமை பெற்றிருந்தமையினால் சக சிங்கள மாணவர்களுடனும் இலகுவில் தொடர்புகளைப் பேண ஏதுவாக இருந்தது. பல தமிழ் சிங்கள பல்கலைக்கழக மாணவரிடையே பழகுதலுக்கான தடையாக மொழி இருந்ததை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இரு மொழி(தமிழ் சிங்களம்)ப் புலமையின்மை இலங்கையில் மொழிப் பிரச்சனைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. இலங்கையில் உள்ள சகல மக்களும் இரு மொழிப் புலமை பெற்றிருப்பின் இன முரண்பாடு என்று வளர்த்தெடுக்கபட்ட பிரச்சனை இவ்வளவு தீவிரம் அடைந்திருக்க வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும். பல்கலைக்கழக மாணவ போராட்டங்களினூடக ராஜினிக்கும் தயாபாலா திரணகமவிற்கும் இடையே ஏற்பட்ட அறிமுகம் நட்பு காதல் என்று பரிணாமம் அடைந்து. அது 1977ம் ஆண்டு கல்யாணம் என்ற பந்தத்திற்குள் புகுந்து கொண்டது.

யாழ்ப்பாணத்து பாரம்பரிய வாழ்வு முறமைக்குள் பிறந்து வளர்ந்த கிறிஸ்தவ தமிழ் பெண்ணான ராஜினி ஒரு பௌத்த சிங்கள இன இளைஞனுடன் கல்யாணம் வரைக்குமான உறவுக்கு சென்றதற்கான தைரியத்தை கொண்டிருந்தார் என்பதை நாம் இங்கு உற்று நோக்க வேண்டும். இவர்களுக்கு முறையே 1978. 1980 களில் நர்மதா, சரிகா என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன.

யாழ்ப்பாண சமூக அமைப்பு முறமையில் நாம் ஒன்றை அவதானிக்க முடியும். குறிப்பாக மத்திய தர வர்க்க குடும்பங்களில் ஆண் சகோதரர்கள் இன்றி அமைந்த குடும்பங்களில் பிறந்த பெண்கள் அவர்கள் பெற்றோரால் தைரியமான பெண்களாக வளர்வதற்குரிய தவிர்க்க முடியாத கட்டுப்பாட்டுத் தளர்வுகளை கொண்டிருந்தனர். இதனை சமூகமும் ஒருவகையில் அங்கீகரித்தே வந்துள்ளது. இந்த வகையில் 4 பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த ராஜினியும் தைரியமான பெண்ணாக பரிணமித்தே இருந்தார். இதன் தொடர்ச்சியும் கல்வி கற்ற பல்கலைக் கழக சூழலும் ஒரு பௌத்த சிங்கள இளைஞருடன் திருமணம் என்ற பந்தத்திற்குள் இழுத்த வர உதவியது என்பதே என் பார்வையாகும்.

தயாபால திரணகம ராஜினியின் நட்பு காதல் கட்டங்களில் இலங்கை தமிழ் சிங்கள மக்கள் பற்றி இருவரும் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளில் முரண்பாடுகள் இருந்தே வந்திருக்கின்றன. ஆனால் முரண்பாடுகளுடனேயே வளர்ச்சி ஏற்படும் என்ற இயங்கியல் தத்துவத்தின் அடிப்படையில் இவர்களின் உறவு வளர்ந்து வலுப் பெற்று திருமணம் இரு பெண்பிள்ளைகளுக்கு பெற்றோர் என்ற நிலைவரை பரிணாமம் அடைந்து. இறுதிவரை மன மண முறிவின்றி தொடர்ந்ததே ராஜினி திரணகம தயாபால திரணகம என்ற இருவரதும் உறவு நிலையாகும்.

ராஜினி 1978 ம் ஆண்டு தனது மருத்துவக் கல்வியின் தொடர்சியான மருத்துவருக்கான தொழிற் பயிற்சியை யாழ் போதனா வைத்திய சாலையில் மேற் கொண்டார். இதனைத் தொடர்ந்து இலங்கையின் மலையகப் பிரதேசத்தில் அப்புத்தளை என்ற நகரத்தில் அமைந்த கல்டுமுல்ல என்ற பின் தங்கிய கிராம வைத்திய சாலையில் மருத்துவராக தனது பணியை ஆரம்பித்தார். இலங்கையைப் பொறுத்தவரையில் பல்கலைக் கழக படிப்பை முடித்த பலர் மருத்துவ தொழிலாக இருந்தாலும் சரி ஆசிரியர் தொழிலாக இருந்தாலும் சரி அல்லது வேறு என்ன அரசாங்க தொழிலாக இருந்தாலும் சரி பின்தங்கிய வசதி வாய்ப்புக்கள் குறைந்த பிரதேசங்களில் தங்கியிருந்து தமது சேவையை அரசு உத்தியோகத்தை பார்க்க விரும்புவதில்லை. பல்கலைக் கழக பட்டதாரிகளிடையே பொதுவாக நிலவி வந்த மத்திய தர குணாம்சம் அவர்களை பின் தங்கிய கிராமங்களை தவிர்த்து நகர வாழ்விற்குள் தள்ளியது என்பது மிகையானது அல்ல.

ஆனால் தவிர்க்க முடியாமல் பல்கலைக் கழக படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் முதல் வேலையில் சிறிது காலம் அரசால் தரப்படும் பின்தங்கிய பிரதேசங்களில் கடமையாற்றுவர். ஆனால் சிறிது காலத்திற்கு பின்பு முறையற்ற தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் இவர்கள் தமது விருப்பு இடங்களுக்கு மாற்றலாகி செல்வதும் வழமையாக இருந்து வந்துள்ளது. இதற்கு விதிவிலக்காக ராஜினி இருந்தாரா? என்பதை முடிவு செய்ய முடியவில்லை. காரணம் ஒரு வருட மருத்துவர் சேவையின் பின்னராக 1980 இல் யாழ் மருத்து பீடத்தில் விரிவுரையாளராக வேலை பெற்று இடம்பெயர வேண்டிய சூழல் ராஜினிக்கு ஏற்பட்டுவிட்டது.

1970 களில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஆரம்பித்த தீவிரவாதம் மிக்க அரசியல் செயற்பாடு 1972 களில் மாணவர் போராட்டங்களாக வெளிப்படத் தொடங்கியது. பல்கலைக் கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மாணவர்களைவிட மொழி இன ரீதியில் காட்டப்பட்ட தரப்படுத்தல் பாகுபாடு தமிழ் மாணவர்கள் மத்தியில் எழுச்சிக்களுக்கு வழி கோலின. இன மொழி ரீதியான தரப்படுத்தலில் இருந்த பாகுபாட்டை எதிர்த்து தமிழ் மாணவர் போராட்டங்களை முன்னெடுத்தனர். பின்தங்கிய பிரதேசங்களுக்கு பல்கலைக் கழக அனுமதியில் வழங்கிய சலுகைகள்(பிரதேச அடிப்படையிலான தரப்படுத்தல்) யாழ்பாணம் தவிர்ந்த ஏனைய பின்தங்கிய தமிழ் மாவட்டங்களுக்கு நன்மையாக அமைந்திருக்கின்ற என்பதை மூடி மறைத்தனர் இந்த யாழ்ப்பாண மையவாத போராட்டக்காரர்.

யாழ்ப்பாணம் கொழும்பு கண்டி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்ட மாணவர்கள் பிரதேச தரப்படுத்தல் முறமையினால் நன்மை அடைந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் பின்தங்கிய பிரதேச பல்கலைக்கழக அனுமதி முறமைகளில் உள்ள சலுகைகளை அப்பிரதேசங்களுக்கு தற்காலக இடம்பெயர்வுகள் மூலம் யாழ்ப்பாண மாணவர்களும் பயன்படுத்திக் கொண்டதுதான். கூடவே தமிழர்களுக்குள்ளேயே சாதி ரீதியாக தாழ்ந்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியிருந்தே கல்வி மறுப்பு என்ற மேட்டுக்குடி மக்களின் கல்விப் பாகுபாடும் நீண்டகாலமாக மூடி மறைக்கப்பட்டு வந்ததும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தமது பிள்ளைகள் சாதாரண அரச பாடசாலைகளில் கல்வி கற்க வைத்து சமூகத்தின் சகல பிரிவின் வாழ்வையும் அறிய வைத்த பேராசிரியர் கைலாசபதிக அதிபராக செயற்படும் போது அதிகார வர்க்கத்திறகுரிய செயற்பாட்டை தன்னகத்தே கொண்டிருக்காமல் மாணவர் சமூகத்திற்கு சமத்துவ கொள்கையை அறிமுகப்படுத்திய கார்திகேயன் போன்ற நல் ஆசான்கள் பலர் தோன்றியிருந்தால் தமிழருக்குள் தமிழர் போட்டுக்கொண்ட கல்வி மறுப்பு தரப்படுத்தல் இல்லாமல் உடைத்தெறியப்பட்டிருக்கும்.

பல்கலைக் கழகத்திற்கு தெரிவுக்கு அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் முறமை அறிமுகப்படுத்துவதற்கு முதல் வருடம் ராஜினி யாழ்பாணத்திலிருந்து கொழும்பு மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்றிருந்தார்.

மாணவர் போராட்டங்களுடன் ஆரம்பமான தமிழ் மக்களின் போராட்டம் 1974 களில் ஆயுதம் தாங்கிய செயற்பாடுகளுக்குள் புகுந்து கொண்டது. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்பு ஜேஆர் அரசினால் திட்டமிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மூலம் முழு வீச்சில் வீங்கிப் பெருத்தது. 1971 ஏப்ரல் மாதம் தென் இலங்கையில் இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசுக்கெதிராக ஜேவிபியினால் முன்னெடுக்கப்பட்ட அவசர ஆயுதக் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டு கங்கைகளில் வீசியது. இக் கொலைகளில் தயாபால திரணகம தமது கிராம மக்களினால் காப்பாற்றப்பட்டு இருந்தார்.

இக் கொலைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எதிர்பலைகள் போராட்டங்கள் சிறிய அளவிலேனும் நடைபெறவில்லை. தமிழ் மக்கள் மத்தியிலிருந்த அரசியல் தலைமைகள் இதற்கான முன்னெடுப்புக்கள் எதனையும் செய்யவில்லை. இலங்கையின் அன்றைய பிரதம மந்திரி பாதுகாப்பிற்காக சில தினங்கள் தென்னிலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து யாழ்ப்பாணக் கோட்டையில் தங்கியிருத்தல் பாதுகாப்பானது என்ற முடிவுகளின் அடிப்படையில் செயற்படும் அளவிற்கு யாழ்ப்பாணம் பாதுகாப்பான பிரதேசமாக காணப்பட்டது என்பது இங்கு கவனிக்கதக்கது.

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக சிங்கள தமிழ் மக்கள் முடிந்தளவில் இணைந்து போராடுதல் என்பதற்கான வாய்ப்புக்களை தமிழ் தரப்பு எப்போதும் தவற விட்டும் நிராகரித்தும் வந்திருக்கின்றது. பேரினவாதம் இதற்கான வாய்ப்புக்களை இல்லாது செய்திருந்தது. இதனாலேயே ஜே.ஆர் ஜெயவர்த்தன போன்றவர்களினால் தென்னிலங்கை எங்கும் 1977 களில் நடைபெற்றது போன்ற இன சுத்திகரிப்புகளை சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்புக்கள் ஏதும் இன்றி செய்யக் கூடியதாக இருந்தது.

ஆனால் சிங்கள மக்கள் மத்தியிலிருந்த நல்ல உள்ளங்கள் இப்படியான இனக் கலவரங்களின் போதெல்லாம் இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்து வந்த பல இலட்சம் தமிழ் மக்களை காப்பாற்றியிருக்கின்றார்கள் என்பது கவனிக்க தக்கது. வடக்கில் ஒரு சிங்கள மகன் ஈறாக அங்கு வாழ முடியாத செயற்பாட்டையும் இதே போல் பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் மகன் அங்கு தங்க முடியாத சூழலையும் புலிகள் ஏற்படுத்தியதை போன்று தென்னிலங்கையில் தமிழ் மக்கள் வாழ முடியாது என்று எந்த சாதாரண சிங்கள மகனும் அல்லது சிங்கள அமைப்பும் கட்சியும் கொள்கை ரீதியாக கொண்டிருக்கவில்லை என்பது இங்கு கவனிக்க தக்கது.

புலிகள் ஜேவிபி என்ற இரு தீவிரவாத அமைப்புக்களும் பரஸ்பரம் தமிழ் சிங்கள மக்கள் இணைவதை ஒரு வண்டிலில் பூட்டிய மாடுகள் போல் செயற்பட்டனர். இதற்கு குறுக்கே நின்ற யாவரையும் வகை தொகையின்றி கொன்று குவித்தனர். இவ்விருதரப்பினராலும் தமிழ் சிங்கள மக்களுடன் கலந்து வாழ்ந்த முஸ்லீம் மக்கள் பாதிப்பிறகு உள்ளானது பெரும் சோகம். இது இன்றுவரை தொடரந்து கொண்டே இருக்கின்றது.

1970 ஆரம்பமான தமிழ் மக்கள் மத்தியிலான தீவிரவாத செயற்பாடுகள் 1980 களில் ஆயுதம் தாங்கிய தாக்குதல் என்று தீவிரம் அடைந்து இருந்தது. வெறும் இன உணர்வை மையமாக வைத்தும் இடதுசாரி சிந்தனையின் அடிப்படையிலும் விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்று இருந்தன. இப்படியான ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் தனது விரிவுரையாளர் தொழிலை ஆரம்பித்தார் ராஜினி திரணகம.
ராஜினியின் மூத்த சகோதரி நிர்மலாவும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட யாழ் பல்கலைக் கழக கலைப்பீட விரிவுரையாளர் நித்தியானந்தன் என்பவரும் அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர மறைமுக? செயற்பாட்டாளர்களாக இருந்தனர். இலங்கை பொலிஸாரால் காயம் ஏற்பட்டிருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் சீலன். பாதுகாப்பு காரணங்களுக்காக சீலனுக்கு வைத்திய சாலைக்கு வெளியில் இரகசிய முறையில் சிகிச்சை அழித்தல் என்ற நிகழ்வில் வற்புறுத்தலுக்கு இணங்க செயற்பட வைத்ததன் மூலம் புலிகளுடனான ஒரு தொடர்பு வலைக்குள் உள்வாங்கப்பட்டார் ராஜினி. இதன் மூலம் ராஜினி அவரின் சகோதரி நிர்மலா நித்தியானந்தனால் புலிகளிடம் ஒரு சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டார். இந்நிகழ்வுக்காக நிர்மலா ராஜினியின் ஆவணப்படமான No More Tears Sister இல் கண்ணீருடன் வருந்தியதை நாம் யாவரும் பார்க்கமுடியும். ஆனால் ராஜினியின் மரணத்தின் பின்பு வரும் காலம் கடந்த ஞானமாக இது அமைந்தது துர்பாக்கியமாக அமைந்துவிட்டது.

ராஜினியின் கணவர் தயாபால திரணகம ஒருபோதும் தனி நாட்டிற்கான ஈழவிடுதலைப் போராட்டத்தையோ அல்லது அதன்பால் உள்ள அமைப்புக்களையோ ஏற்றுக்கொண்டவர் அல்ல. இதற்கான வாதப் பிரதிவாதங்கள் ராஜினிக்கும் தயாபாலாவிற்கும் இடையில் பல தடவைகள் ஏற்பட்டிருக்கவே வாய்ப்புக்கள் அதிகம். தயாபால உறுப்பினராக இருந்த ஜேவிபி தனது பிரதான 5 தலைப்பிலான அரசியல் வகுப்புக்களில் ஒன்றாக ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ என்பதை கொண்டிருந்தது. தமிழ் மக்களின் தேசிய இனப் போராட்டத்தை ஜேவிபி இந்திய விஸ்தரிப்பு வாதக் கண்ணோட்டத்திலேயே பார்த்து வருகின்றது. அதுவும் சிறப்பாக சுத்த இனவாத ஆயுதக் கண்ணோட்டத்தையுடைய புலிகளுடனான ராஜினியின் உறவை எந்த வகையிலும் அவரது கணவர் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். ஒட்டு மொத்த இலங்கையிற்கான வர்க்க புரட்சி தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு என நம்பும் தயாபால ராஜினியின் ஈழவிடுதலை அமைப்புகளுடனான தொடர்பை விரும்பியிருக்கவில்லை. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இலங்கையின் ஒட்டு மொத்தப் புரட்சியின் முதல்வடிவமாக அமையவேண்டிய தவர்க்க முடியாத சூழ்நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படடிருப்பதை சீர்தூக்கிப் பார்கத் தயாராக இருக்கவில்லை.

இவ் நிலமையை பேரினவாத சக்திகள் குறும் தேசியவாதிகள் ஏற்படுத்தியருந்தனர். ராஜினியின் கணவர் தயாபால திரணகமவின் அரசியல் நிலைப்பாட்டால் ராஜினியும் ஈழவிடுதலை அமைப்புகளுடனான உறவுகளில் சற்றே விலகிய நிலையில் 1982 வரை இருந்தார் என்பதே உண்மை.

மருத்துவ சிகிச்சை என்ற செயற்பாட்டின் ஊடாக புலிகளுடன் ஏற்பட்ட தொடர்பால் தங்களை விட்டு விலக முடியாக ஒரு கைவிலங்கை ராஜினிக்கு நிச்சயம் புலிகள் போட்டிருப்பார்கள். தங்களின் இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணம் என்ற கோதாவில் ஒரு வகையான கைதி நிலை உறுப்பினராக்கப்பட்டிருப்பார் என்பதே ராஜினியின் ஆரம்ப புலிகளுடான உறவு ஆரம்பித்து. இந்த கைதி நிலை உறவிற்கு முழுக்காரணம் நிர்மலா – நித்தியானந்தன் என்ற இருவரும் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இந்த புலிகளுடனான உறவு ராஜினி - தயாபால இடையிலான உறவுகளை பாதித்து இருந்தது.

கைதி நிலை உறுப்பினரில் ஆரம்பித்து மிகத் தீவிர புலிகளின் செயற்பாட்டாளராக மாற்றம் அடைவதற்கு புலிகள் ராஜினி போன்றவர்களுக்கு காட்டிய பகட்டான முக்கியத்துவங்கள் காரணமாக அமைகின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகச் சில புத்திஜீவிகளைத் தவிர்த்து ஏனையவர்கள் இவ்வாறே புலிகளால் உள்வாங்கப்பட்டு கைவிலங்கு வாய்விலங்கு இடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இது புலிகளின் பொதுவான போக்கே. இதில் ராஜினியும் வீழ்ந்து விட்டார் என்பதே உண்மை. வீழ்ந்தால் மீள முடியாது. விலக முடியாது என்பதே புலிகளைப் பொறுத்தவரை தண்டனை நியதி. இந்த வகை புத்திஜீவிகள் புலிகளின் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் உதவி உலகின் மிக மோசமான பாசிச சக்தியின் வளர்ச்சிக்கு உதவி செய்திருந்தனர். இதில் ராஜினியும் அடக்கம். இதன் உச்சகட்டமாக ‘சிலரின் மரணம் இயற்கையானதாக அமையமாட்டாது’ என்ற வக்கிரமான ‘கொலைவெறிக்குள் புகுந்த சிவத்தம்பிகள் பலரையும் இவ் புத்தி ஜீவிகள் கூட்டத்தில் நாம் பார்த்து இருக்கின்றோம். வாய்விலங்கை உடைத்தால் நிரந்தரமாக மௌனிக்கப்படுவோம் என்பதற்காக இன்றுவரை வாய் விலங்கை உடைக்காத புலிகளுக்காக வக்காலத்து பேனாபிடித்த பேட்டிகள் வழங்கி தொலைவாங்கி பிடித்த பலரை எமது சமூகத்தில் இன்றும் பார்க்க முடியும். இதில் மாறுபட்டு நிற்பவரே ராஜினி.

ராஜினி 1983 இல் தனது சிறப்பு மருத்துவ படிப்பிற்காக இலண்டன் பயணமானார். புலிகளுடனான உறவில் இருந்த ராஜினி இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தினூடாக தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணமானார். இதில் தனக்கு இலங்கை அரசால் ஏற்பட வாய்ப்புகள் இருந்த பாதுகாப்பு கெடுபிடிகளை எவ்வாறு சமாளித்தார் என்பது கேள்விகளாக தொக்கு நிற்கின்றது. இங்கிலாந்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் வசித்து வந்தார். எனவே புலிகளின் ஆங்கிலம் பேசும் புத்திஜீவுடனான உறவுகளும் அதனைத் தொடர்ந்த செயற்பாடுகளும் ராஜினி புலிகளின் முக்கியத்துவம் பெற்ற உறுப்பினராக மேலும் தொடர வாய்ப்புக்கள் ஏற்பட்டன. புலிகளின் இலண்டன் கிளையின் முக்கிய உறுப்பினராக செயற்பாடளராக இருந்தார்.

அப்போது புலிகளுடனான இணைந்த செயற்பாட்டால் 1982 இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட புலிகளின் தீவிர செயற்பாட்டாளரான தனது சகோதரியின் விடுதலைக்காக மனித உரிமை அமைப்புக்களுடன் சர்வதேச பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து செயற்பாட்டார். இச் செயற்பாட்டிற்கு புலிகள் வழங்கிய ஒத்துழைப்புகள் புலிகளுடனான உறவை மேலும் இறுக்கமாக்கியிருக்கின்றது. இவ் வலைக்குள் ஒருவரை வீழ்த்தும் செயற்பாட்டை புலிகள் அவர்கள் பாணியில் சரியாகவே செய்வர். ராஜினியின் இது போன்ற செயற்பாடுகளை புலிகள் தனது நிதி திரட்டும் சர்வதேச பிரச்சாரங்களுக்கு நன்கு திட்மிட்ட வகையில் பயன்படுத்தியிருப்பர் என்பது வெள்ளிடைமலை.

புலி உறுப்பினர் ஒருவர் புலிகளுடன் தீவிரமான செயற்பாட்டில் உள்ளார் என்பதை அறிவது மிகவும் சுலபம். மிக நீண்ட கால நட்பில் இருந்த ஒருவர் மாற்று ஈழவிடுதலை அமைப்பில் இருந்தார் என்றால் அவருடனாக உறவை மறுப்பர். மேலும் தவிர்க்க முடியாமல் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு எற்படும் போது முகத்தை வேறுபக்கம் திருப்பி வெறுப்பைக்காட்டும் செயற்பாட்டை கொண்டிருப்பர் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர். இதனை இலண்டனில் ஈழவிடுதலை அமைப்பு மாற்று இயக்க உறுப்பினரும் இவரின் பல்கலைக் கழக சாகாவிடமே காட்டி இருக்கின்றார் என்றார் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த அளவிற்கு புலிகளுடன் உறவில் ராஜினியின் தீவிரம் காட்டியிருந்தார்.

ஆனால் ராஜினி வெறுமனவே தலைமைக்கு தலையாட்டும் பொம்மையாக இருக்காது கேள்வி கேட்கும் செயற்பாட்டாளராக இருந்தார் என்பது இங்கு முக்கிய விடயம். அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழல் அவருக்கு இதனைக் கற்றுக் கொடுத்திருந்தது. கேள்வி கேட்தல் என்பது புலிகளுக்குள் தவிர்கப்படவேண்டி விடயம் என்பது தலமையின் இறுக்கமான இயக்கக் கட்டுப்பாடு. இது அவர்களின் அடிப்படையான விடயமும் கூட. கேள்விகள் கேட்கும் ஜனநாயக செயற்பாட்டினால் புலிகளின் அடிப்படை விதிகளை ராஜினி மீறினார் என்பதே உண்மை.

புலிகளால் மேற்கொள்ளப்படும் அப்பாவிச் கிராமத்து சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை நிச்சயம் ராஜினி கேள்விகளுக்கு உள்ளாக்கியிருப்பார். புலிகளின் சமூக விரோதிகள் என்று வாழைக்குலை திருடியவருக்கு மரண தண்டனையும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் பதுக்கல் வியாபாரிகளிடம் நிதி அறவிடுதல் என்ற வகையில் நல்ல உறவில் இருத்தல் என்பதையும் கேள்விக்கு உள்ளாக்கி இருப்பார். பிறப்புடன் கூடிய வளர்ப்பால் தைரியமான பெண்ணான ராஜினி தயாபாலவுடனான உறவாலும் போராட்டம் சம்மந்தமாக கேள்விகள் அல்லது விமர்சனம் செய்யும் செயற்பாட்டை வளர்த்திருப்பார் என்பதில் ஐயம் இல்லை.

இதுவே புலிகளுடான முரண்பாட்டிற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. கூடவே ராஜினியின் கணவர் ஒரு சிங்கள சமூகத்தை சேர்ந்தவர் என்ற சந்தேகங்களும் புலிகளின் புலனாய்வு பிரிவை பெரிதும் நம்பியும் தங்கியிருந்த பிரபாகரனுக்கும் ஏற்பட்டிருக்கும். இதனால் ராஜினி என்றும் புலிகளின் புலனாய்வுக் கண்களாலேயே பார்க்கப்பட்டிருப்பார். ஆனால் தனது கணவருடனான முரண்பட்ட அரசியல் கருத்தும் வடக்கு – கிழக்கு சிறப்பாக வடமாகாணம் அதிலும் சிறப்பாக யாழ்ப்பாணம் தமிழர் மட்டும் வாழும் இடம் என்ற புலிகளின் சுத்த இனசுத்திகரிப்பு செயற்பாட்டினால் தயாபால திரணகம போன்ற சிங்கள சமூகத்தை சேர்ந்தவர் யாழ்பாணத்தில் வாழ முடியாத நிலமையும் ராஜினி தயாபால குடும்பம் இணைந்து வாழ்தல் என்பது சாத்தியப்படாமல் செய்துவிட்டது. இவ் குடும்பம் இணைந்து வாழும் சாத்தியம் இல்லாமல் போனது ராஜினியின் வாழ்வுகாலத்தை கூட்டியுள்ளது என்பது புலிகளைப் பொறுத்தவரை நிஜமானது. தயாபாலாவுடனான ராஜினியின் உறவு இடைவெளி ராஜினியின் உயிரை பல காலம் காத்து வந்திருக்கின்றது.

புலிகளுடனான உறவுகளை 1982 ஆரம்பித்த இவர் புலிகளுடனான முரண்பாடுகள் காரணமாக தனது ஸ்தாபன உறவுகளை 1984 உடன் முறிதுக்கொண்டார் பொதுவாகவே புலிகள் தமது இயக்கத்தில் இணைந்த யாரும் இயக்த்தை விட்டு வெறியேறுவதை அனுமதிப்பது இல்லை விரும்புவதும் இல்லை. அப்படி யாராவது தன்னிச்சையாக வெளியேறினால் அவர்கள் தொடர்ந்தும் மௌனமாக வாய்விலங்கிட்டு தமது ஆயுள் காலம் வரை இருத்தல் வேண்டும். முள்ளிவாய்காலில் புலிகளின் சரணாகதி அழிவிற்குப் பின்னர் இன்றுவரை இது நீடிக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதனைக் கடைப்பிடிக்க தவறியவர்கள் புலிகளின் ஆயுதங்களால் நிரந்தரமாக மௌனிக்கப்படுவார்கள். இந்த நடைமுறையை உடைத்தெறிந்து புறப்பட்டவர்கள் ராஜினியைத் தவிர்த்து யாரும் இல்லை என்றே கூறலாம்.

புதிய அமைப்பொன்றையே நிறுவி அரச பாதுகாப்புடன் செயற்படும் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி இதற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக பார்க்கப்பட்டாலும் அவர் பிரிந்து சென்ற சூழல் காலகட்டம் நிலமைகள் அவர் புலிகளில் இருந்த இரண்டாவது நிலை பொறுப்பும் அவர் பிறந்த கிழக்கு மாகாண சூழலும் காரணமாக இருந்தன. இவர் தனி நபராக இல்லாமல் பெரும் படையாக பிரிந்து சென்றார் என்பதுவும் கவனிக்கத்தக்கது. இதனைத் தவிர்த்து தனி நபர்களாக புலிகளிலிருந்து ஒதுங்கி மௌனம் காக்காதவர் என்று யாரும் இல்லை. அவ்வளவு மரணப்பயத்தை ஏற்படுத்தியிருந்த திறமை புலிகளிம் மட்டுமே இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் விதிவிலக்காக அமைந்தவர் ராஜினி திரணகம என்றால் மிகையாகாது.

ஆமாம் புலிகளுடனான முரண்பாடுகளுடன் அவ் அமைப்பிலிருந்து வெறியேறிய ராஜனி தனது இலண்டன் மருத்துவத்துறை சிறப்பு படிப்பை முடித்துக் கொண்டு யாழ்ப்பாண மருத்து பீடத்திற்கு சிறப்பு விரிவுரையாளராக திரும்பினார். இங்கும் ஒரு கேள்வி தொக்கி நிற்கின்றது. இலண்டனில் ராஜினியின் புலிகளுடனான தொடர்பு சர்வதேசம் அறிந்தது. இலங்கையும் அறிந்தே இருக்கும். மீண்டும் இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தினூடு பயணிப்பதற்கான பாதுகாப்பு சிக்கலை ராஜினி எவ்வாறு சமாளித்தார் என்பதே அது. இக்காலகட்டத்திலேயே புலிகள் வடக்கு கிழக்கு எங்கும் மாற்று ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் போராடும் உரிமைகளை துப்பாக்கி முனையில் வலிந்து பறித்துக்கொண்ட கால கட்டம் ஆகும். ராஜினி புலிகளின் திறந்த சிறைச்சலையாக இருந்த வடமாகாண யாழ்பாணத்தில் தனது இரு குழந்தைகளுடன் குடியேறினார். அத்துடன் நிற்காமல் மனித உரிமை அமைப்பாக தம்மை பிரகடனப்படுத்திய யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமைகள் அமைப்பு என்ற அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவாராக செயற்பட்டார் என்ற தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

1986 களில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக புறப்பட்ட ஒவ்வொரு விடுதலை அமைப்புக்களை இந்தியாவின் கை கூலி எம்மை அழிக்க தீர்மானித்து இருந்தனர். தாமே தமது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டு ஒதுங்கிவிட்டனர் எம்முடன் கலந்து விட்டனர் என்று கூறி துப்பாக்கிகளால் வட கிழக்கில் செயற்படவிடாது தடுத்த போது எந்த புத்திஜீவிக் கூட்டமும் இந்த புலிகளின் ஏகபோக பாசிச செயற்பாட்டிற்கு எதிராக வீதியில் இறங்கவில்லை போராடவில்லை. கொலைகளை தடுத்து நிறுத்தவில்லை. இன்னொருவகையில் மௌனம் காத்து தவறுகளுக்கு வழிவிட்டு நின்றனர். சிலர் குளிர்பானம் பரிமாறி மகிழ்ந்தனர். சிலர் வாய்புக்களைப் பயன்படுத்தி பிரமுகர் ஆகினர். இவர்கள் அன்று யோசிக்கவில்லை இந்த ஆயுத ஏகபோகம் ஒரு முள்ளிவாய்கால் முடிவுகளை இறுதியில் கொண்டு வந்து நிறுத்தும் என்று. ஆனால் வரலாறு முன்னோக்கியே எப்போதும் நகரும் என்பதற்கு இணங்கு 33 வருடங்கள் கழிந்த நிலையில் ஒரு மிருகத்தினால் வலிந்து சிறைப்பிடிக்க இன்னொரு மிருகத்தினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் மரணங்களின் சாம்பல் மேட்டில் மண்டியிட்டு இரவல் கோணத்துடன் படுத்துறங்கிய விளைவுகளுடன் தனது கோர நிகழ்வுகளை தற்காலிகமா நிறுத்திக் கொண்டது.

33 வருடங்களுக்க முன் எம்மில் சிலர் இதனை அன்றே எதிர்வு கூறியிருந்தனர் இந்த 2009 மே மாதத்தை எதிர்வு கூறியவர்களில் பலர் துப்பாக்கிகளுக்கே பலியாகியும் விட்டனர். சிலர் உங்கள் முன்னேயும் நிற்கின்றோம்.

1986 டிசம்பர் தொடக்கம் 1987 ஜுலை வரையிலான காலப்பகுதியில் வடக்கு - கிழக்கில் புலிகள் தமது ஏகபோக முடியாட்சியை நடத்தினர். இக்காலகட்டத்தில் புலிகள் தவிர்ந்த வேறு எந்த அமைப்புக்களும் வடக்கு கிழக்கில் செயற்பட முடியவில்லை. விதிவிலக்காக தீப்பொறிக் குழு பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பு போன்ற அமைப்புக்கள் தனது மட்டுப்படுத்திய புலிகளை கோபத்திற்குள் உள்ளாக்காத செயற்பாட்டை மட்டும் கொண்டிருந்தனர்.

வடமராட்சியில் ஆரம்பித்து யாழ்பாணத்தை கைப்பற்றுதல் என்ற இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையை தடுத்து நிறுத்த 1987 ஜுன் 2ம் திகதி ஒப்பரேசன் பூமாலை என்ற மனிதாபிமான சாப்பாட்டு பொதிகளை ஆகாயத்திலிருந்து வீசுதல் என்ற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி தனது வழிக்கு ஜேஆர் ஜெயவர்தனாவை கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து ஜேஆர் ஜெயவர்தனவுடன் ராஜீவ் காந்தி வடக்கு கிழக்கில் அதிகாரப் பரவலாக்கலுக்கான இலங்கை இந்திய ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படையின் வடக்கு கிழக்கிற்கான வருகையும் நடைபெற்றன. பூரண கும்பம் மாலை ஆரத்தி கூடவே இந்திய அமைதிகாக்கும் படையின் இராணுவ வாகனத்தில் இந்தியக் கொடியுடன் கூடிய புலிக்கொடியுடன் இருவரும் ஒன்றாக பவனி வருதல் என்று தேன்நிலவுடன் புலிகள் இந்திய அமைதிகாக்கும் படை உறவுகள் வடக்கு கிழக்கு எங்கும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏனைய விடுதலை அமைப்புக்கள் மீண்டும் வடக்கு கிழக்கில் தமது அரசியல் செயற்பாட்டை ஆரம்பிக்க தொடங்கின. போர் நிறுத்தம் சமாதானம் என்று ஆரம்பித்த இந்த ஜனநாயக இடைவெளியை பாவித்து ராஜினி போன்றவர்களால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பும் தனது செயற்பாட்டை விஸ்தரித்தது.

இந்திய அமைதிகாக்கும் படையுடனான தேன் நிலவு புலிகளுக்கு சீக்கிரத்தில் கசத்தது. இதற்கு முக்கிய காரணம் ஏனைய விடுதலை அமைப்புக்களின் செயற்பாடுகள் தமது ஏகபோகத்தை இல்லாமல் செய்துவிடும் என்பதினால். மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். தருணம் பார்த்து இருந்தனர் புலிகள் இவற்றிற்கு முற்றுப் பள்ளி வைக்க. கடலில் ஆயுதக் கப்பலுடன் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை இந்திய அமைதிப்படை நிறைவேற்றவில்லை என்ற கோதாவில் புலிகள் இந்திய அமைதிப்படையை வலிந்த யுத்தத்திற்குள் இழுத்தனர். இதனையே ஜேஆர் என்ற குள்ள நரி இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது எதிர்பார்த்து செயற்பட்டார். இதற்கு செயல்வடிவம் கொடுத்தார்கள் புலிகள்.

இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் இடையிலான சண்டை ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் மட்டக்களப்பில் புளொட் ஈபிஆர்எவ்எவ் உறுப்பினர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் புலிகளின் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இந்திய இராணுவத்தின் கண்முன்பே மட்டக்களபு மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டனர். இதனைத் திசை திருப்புவதற்கான தருணமாகவும் வலிந்த சண்டை நிகழ்வுக்கு திகதி குறித்திருந்தனர் புலிகள்.

புலிகள் இந்திய அமைதி காக்கும் படையேயான யுத்தத்தின் போது இரு தரப்பினரும் மனித உரிமை மீறல்களை செய்தனர். இவ்விடயங்களை ராஜினி பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பு ஊடாக அறிகை வெளியீடுகள் மூலம் அம்பலப்படுத்தி வந்தார். பல்கலைக்கழகம் என்ற தளத்திற்கு அப்பால் இவ் செயற்பாட்டை விரிவு செய்திருந்தால் இன்னும் பல வெற்றிகளை இவர்கள் கண்டிருக்க முடியும். இவர்களிடம் இருந்த மத்தியதர புத்திஜீவித் தன்மை இதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

1987ம் ஆண்டு ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்த இலங்கையிற்கான இந்திய அமைதிகாக்கும் படையினரின் வருகையும் வடக்கில் செயற்பட்டு வந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளை பகிரங்கமாக புலிகளை நோக்கியும் செயற்படலாம் என்ற துணிவை ஏற்படுத்திருந்தது. ராஜினியிடமும் உறங்கு நிலையிலிருந்த இந்த செயற்பாடு முறிந்த பனை என்ற நூல் வடிவம் மூலம் ஆர்பரித்து எழுந்தது. இது புலிகளைப் பொறுத்தவரையில் எந்த வகையிலும் ஏற்றுகொள்ளக் கூடிய விடயம் இல்லை. எனவே வழமைபோல் புலிகள் காத்திருந்தனர் கொலை செய்து விட்டு பழியை யாரின் தலையிலும் போட வேண்டும் என்று.

1986 டிசம்பர் மாதம் புலிகளுடன் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த அமைப்புகளும் தனி நபர்கள் ஏனைய பொது அமைப்புக்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கிற்கு வெளியே இடம் பெயர்ந்தார்கள். இவர்கள் இலங்கை இந்த ஒப்பந்தந்தை தொடர்ந்து வடக்கு கிழக்கிற்கு மீள் குடியேறி தமது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தனர். இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னம் போர் நிறுத்தம் என்பவற்றால்; புலிகள் இனிமேல் யாரையும் செயற்படவிடாமல் தடுத்து ஏகபோகம் கொண்டாட முடியாது என்ற கோதாவில் செயற்படத் தொடங்கினர். இதே நிலைப்பாட்டையே ராஜினியும் கொண்டிருந்தார். இவர்களில் பலரும் ஒன்றை மறந்து விட்டனர் 1986 ல் புலிகள் எடுத்த ஏகபோகம் என்பதில் அவர்கள் எந்த மாற்றத்துடனும் எப்போதும் இருக்கவில்லை என்பதை.

புலிகளுடான முரண்பாடுகள் காரணமாக அவ் அமைப்பிலிருந்து வெளியேறிய ராஜினி இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னத்துடன் தனது மனித உரிமை அமைப்புடாக உறங்கு நிலைலிருந்த தனது செயற்பாட்டை முடுகி விட்டிருந்தார் ஏனைய விடுதலை அமைப்புகள்போல். புலிகளால் இச்செயற்பாட்டை எவ்வகையிலும் அனுமதிக்க முடிவில்லை. இதற்கு பலியானவர்களில் ராஜினி, செல்வி, சிவரமணி, தயாவர்சினி இன்னும் பல முகம் தெரியாத சகோதரிகள் ஆவர். கூடவே அதிபர் ஆனந்தராஜ விமலேஸ்வரன் தோழர் சாமி பல்கலைக் கழக மாணவன் விஜிதரன் போன்றவர்களும் அடங்குவர்.

ஜேவிபியினால் கொலை செய்யப்பட்ட பல ஆயிரம் சிங்கள் சகோதரர்களின் மத்தியில் சுதந்திர மாணவ அமைப்பு தலைவர் தயாபத்திரனவை இவ்விடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். மலையக மக்களுக்காக தியாகம் செய்த வெள்ளையனை மறக்க முடியுமா…? புலிகளின் அழித்தொழிப்பு முதலில் விடுதலை அமைப்புக்களில் இருந்தவர்களை இல்லாமல் செய்தல். அடுத்து பொது அமைப்புக்களை இல்லாது செய்தல் தொடர்ச்சியாக தனி நபர்கள் என்று விரிந்து சென்றது. இதில் ராஜினியும் செல்வியும் தீப்பொறி குழுவும உள்ளடக்கம்.

புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியவர்களில் மாறுபட்டு நிற்கின்றார் ராஜினி திரணகம. ஆனால் இவ்வாறு மாறுபட்டு நிற்பவர்களுக்கு புலிகள் என்ன செய்வார்கள் என்பதை மதிப்பீடு செய்வதில் தவறு விட்டுவிட்டார். பல்கலைக் கழக மனிதஉரிமை அமைப்பில் மிகவும் தீவிர தெளிவான செயற்பாட்டை கொண்டிருந்தவர் சிறீதரன் என்ற கணிதப் பேராசியர். இவரை 1970 களின் பிற்பகுதியில் யாழ்பல்கலைகழக கணிதவியல் விரிவுரையாளராக பணியாற்றிய போது கொம்சிறீ என்றே மாணவர்கள் அழைப்பார்கள். நானும் அதில் ஒருவன். காரணம் இவரிடம் நிலவிவந்த இடதுசாரி சிந்தனை செயற்பாடு பார்வைகள். விரிவுரையாளர் சிறீதரனிடம் இருந்த இந்த இடதுசாரிப் போக்கு ராஜினியிடம் இருந்திருக்கவில்லை. சமூக வர்க்க விடுதலையின் ஒரு அங்கமே பெண்விடுதலையாகும். தனித்தே பெண்ணிலைவாதம் பெண்விடுதலை என்பது சாத்தியமற்றது. அதுபோல் பெண் விடுதலையின்றி வர்க்க சமூக விடுதலை சாத்தியம் இல்லை முழுமைபெறவும் மாட்டாது. இதை போன்றதே மனித உரிமை செயற்பாடுகளும் ஆகும்.

ராஜினி மனித உரிமை செயற்பாட்டாளர் பெண்நிலைவாதி என்று பலராலும் விளிக்கப்பட்டாலும்; இவர் எப்போதும் ஒரு இடதுசாரி சிந்தனையாளராக இருக்கவில்லை. தைரியமான பெண் என்ற மத்தியதர வர்க்க செயற்பாட்டாளராகவே இருந்தார் என்பதே உண்மை. இதனால்தான் பேராசிரியர் சிறீதரன் போன்றவர்களிடம் 1970 களின் நடுப்பகுதியிலுருந்து இருந்து வந்த எதிரிகளிடம் ஒருவகை தலைமறைவு வாழ்வு. மக்களிடம் எப்போதும் தலைமறைவற்ற வாழ்வு என்பதை ராஜினி கொண்டிருக்கவில்லை. இப் பாதுகாப்பு விடயம் இடதுசாரிகளுக்கே உரிய சிறப்பு அம்சம் ஆகும். ராஜினி மேற்கூறிய வாழ்வை தன்னத்தே கொண்டிருந்தால் தீப்பொறி அமைப்பில் உள்ள பலரைப்போல் இன்றும்; உயிர்வாழ்ந்திருக்க வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம். தனது சகாவான விரிவுரையாளர் சிறீதரனுக்கு இருந்த எச்சரிக்கை ராஜினிக்கு இருக்கவில்லை. மேலும் பல்கலைக் கழகத்தினூடு மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தல் என்ற சிறிய வட்டத்தை தவிர்த்து பரந்துபட்ட (சிறப்பாக அடிமட்ட மக்கள்) மக்களிடையேயும் விரிவுபடுத்தியிருந்தால் ஒரு பலம் மிக்க ஸ்தாபனமாக வளர்த்து வெற்றிகள் இன்னும் பல கண்டிருக்க முடியும். தனது உயிரையும் இது போன்ற பலலாயிரக்கணக்கான உயிர்களையும் காப்பாற்றியிருக்க முடியும். இந்த எச்சரிகை உணர்வு இருந்திருப்பின் ராஜினியின் இந்த நினைவுரைப் பேச்சுக்கு இன்று தேவை இருந்திருக்க வாய்ப்புக்கள் குறைவு.

ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர் தேசிய விடுதலைப் போராட்ட வீரர் ஒரு சமூக விடுதலைப் போராளி தமது செயற்பாட்டில் முழுமை பெற்று வெற்றி பெற வேண்டுமாயின் அவர்கள் நிச்சயமாக இடதுசாரிகளாக இருக்க வேண்டும். அன்றேல் அவர்களால் தமது போராட்ட வடிவங்களை செயற்பாடுகளை முழுமையாக செயற்படுத்த முடியாது. வெற்றி காண முடியாது. இதனை நாம் சர்வதேச விடுதலைப் போராட்டத்தில் மட்டும் அல்ல இலங்கையில் நடைபெற்ற தமிழ் சிங்கள் மக்களின் ஆயுதப் போராட்டத்திலும் கண்டிருக்கின்றோம்.

ராஜினி புலிகளில் ஒரு தீவிர செயற்பாட்டாளராகவும் ஒரு அடையாளம் காட்டும் அங்கரிக்கும் சர்வதேச புத்திஜீவியாகவும் இருந்தவர். புலிகளை விட்டு முரண்பாடுகள் காரணமாக வெளியேறியவர். அதுவும் புலிகளின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் பற்றிய முரண்பாடுகளினால் வெளியேறியவர். இதனை வெளிப்படையாக பேச்சு, அறிக்கை, செயற்பாடுகள் மூலம் விமரசித்துவந்தவர். கூடவே முறிந்த பனை(இந்த புத்தகத்துடன் சம்மந்தப்பட்ட மற்றயவர்கள் புலிகளில் உறுப்பினராக எப்போதும் இல்லாது இருந்தவர்கள்) என்ற புத்தகத்தின் வெளியீடும் புலிகளின் தலைவர்களின் ஒருவரான திலீபனின் இறந்த உடலை புலிகள் தங்கள் விருப்பிற்கு ஏற்ப கையாள முற்படுகையில் ஒரு மருத்துவராக விரிவுரையாளராக பொறுப்பு மிக்க பல்கலைக்கழக நிர்வாகியாக ராஜினி செயற்பட்டது புலிகளுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியிருந்தது. இவைகளே புலிகள் ராஜினியைக் கொல்வதற்கு அவசரப்பட்டதற்கான காரணங்கள் ஆகும். புலிகளின் ஏகபோக ஆதிகத்திலிருந்த பிரதேசத்திருந்து கொண்டு புலிகளின் மனித உரிமை மீறல் செயற்பாட்டையும் விமர்சித்துக் கொண்டு இவ்வளவு காலமும் உயிர்தப்பியது அவரின் பிரபல்யம் பல்கலைகழக விரவுரையாளர் என்ற பதவி சர்வதேச ரீதியில் அவருக்கு இருந்த தொடர்பு என்பனவே காரணம் ஆகும்.

இந்தக்காலகட்டதில் தென் இலங்கையில் ஜேவிபி தமிழ் மக்களுக்கு வழங்கிய அதிகாரப் பரவலாக்தை ஆதரித்த சகல நபர்களையும் சிறப்பாக இடதுசாரிகளை தேடி அழித்துக் கொண்டிருந்தனர். இதற்கு பிரேமதாஸாவின் ஆசீர்வாதம் இருந்து கொண்டே இருந்தது. இதேபோல் புலிகளும் பிரேமதாஸாவுடன் நல்ல உறவை ஏற்படுத்தி இதே அதிகாரப் பரவலாக்க ஆரம்ப புள்ளிக்கு எதிராக செயற்பட்டனர். ஆக பிரேமதாச இலங்கை அரசு ஜேவிபி புலிகள் என்ற மூன்று தரப்பும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக கிடைக்கிவிருந்த அதிகாரப் பரவலாக்கத்திற்கான ஆரம்ப புள்ளிளை இல்லாமல் செய்வதில் இயைந்து இணைந்தே செயற்பட்டனர்.

அதிகாரப் பரவலாக்கத்திற்கு ஆதரவாக கருத்துக் கொண்டிருந்த தயாபால திரணகம் ஜே.வி.பி புலி பிரேமதாஸ என முத்தரப்பினருக்கும் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற நிலையிலேயே இருந்தார்.

ஜேவிபியும் புலிகளும் ராஜினியை தனது குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மட்டும் செயற்பட தள்ளியது. இதேபோல் தயாபாலாவை சிறந்த தகப்பனாக மட்டும் செயற்பட தள்ளியது. மாறாக ராஜினி தயாபால இருவரையும் இரு குழந்தகளுக்கும் சிறந்த தாய் - தந்தையாக இணைந்து செயற்படும் வாய்புக்புகள் எற்படுவதை தடுத்தே வந்துள்ளது. தாயை பறிகொடுத்த பின்பு தாயின் அரவணைப்பில் வாழ்ந்த 9 வயது சரிகா 11 வயது நர்மதா என்ற பிஞ்சுகளை தனது சிறகுக்குள் அரவணைத்தபடி 1989ம் ஆண்டு பிற்பகுதியில் இலங்கையை விட்டு வெளியேறினார். இங்கும் கேள்வி ஒன்று தொக்கு நின்றாலும் தயாபாலா திரணகமவின்; வெளிநாட்டு பாதுகாப்பு பயணத்திற்கு உதவி செய்த அந்த நல்ல உள்ளத்திற்கு நான் தலைவணங்குகின்றேன். என் அனுபவங்களிலிருந்து இந்த தலைவணங்கலை நான் செய்கின்றேன்.

தோழர் ஜேம்ஸ்
ஆகஸ்ட் 19, 2012

ராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு!

பாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்:
„ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுதாக இருக்காது. எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்"

என தன்னுடைய மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு எம் தேசத்து மக்களின் விடிவுக்காக போராடினார். அடங்காப்பற்றுடன் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடய அந்த தீர்க்கதரிசி புலிகளின் அழிவு எவ்வாறு அமையும் என்பதனை முற்கூட்டியே தனது முறிந்த பனை என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதி வைத்தவர்.

'புலிகளின் வரலாறு, அவர்களது தத்துவ வறுமை, காத்திரமான அரசியற் பார்வை இன்மை, சகிப்புத் தன்மையின்மை, வெறித்தனமான அர்ப்பணிப்பு போன்றனவே, அவர்களின் உடைவுக்கு, இறுதிக் காரணமாக அமையப் போகிறது.

புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீராலும், ரத்தத்தினாலும் பூசப்பட்ட காவியங்களைச் சுமந்தவாறே மடிவர். இந்தச் சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து வரப் போவதில்லை. இந்த முழுச் சரித்திரத்திலிருந்தும், அதன் மேலாதிக்கக் கருத்தியலில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளும்போது தான் விடுதலைக்கான ஒரு புதிய பார்வை பிறக்க முடியும்.'


ராஜனி திரணகம அவர்கள் கொல்லப்பட்டு 16 வருடங்களின் பின்னர் அவரது மாணவன் ஒருவனால் அன்னாரது கொலையின் சில முடிச்சுக்கள் அவிழ்கப்பட்டது. இது தொடர்பில் இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் 21 - 09 - 2005 வெளியாகிய கட்டுரை இவ்வாறு தெரிவித்திருந்தது. வரலாற்றில் மறக்கமுடியாத அந்த மாமேதையின் 30 ஆண்டு நிறைவில் அக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசிப்போம்-

எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!

1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.

அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது
Free Doom
& Free Dump
ist our Freedom...?

இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன்.

அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.

எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.

இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர்.

மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.

இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 - 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான்.

மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, 'புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு' என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும்.

சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும்.

எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன்.

-- 1989ம் ஆண்டய யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன்-

மீள்பதிவு

கருத்துகள் இல்லை: