செவ்வாய், 26 ஜூலை, 2011

பத்மநாபசுவாமி கோயில் நகைகள் விவசாயிகளுக்கே சொந்தம்!''


'பொக்கிஷ'த்துக்குள் புதைந்திருக்கும் கண்ணீர் வரலாறு...
ஆதங்கம்
என். சுவாமிநாதன்.
''150 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்த அறைகளுக்குள் இவ்வளவு தங்கமா... இவ்வளவு வைரங்களா..!'' என்று கேரள மாநிலம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கிடைத்திருக்கும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கும் மேற்பட்ட நகைகளைப் பார்த்து உலகமே வியந்து கொண்டிருக்கிறது.
அதையடுத்து, 'நகைகள் அனைத்தும் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்' என்றும்... 'இல்லையில்லை, கோயிலுக்கே சொந்தம்' என்றும் மாறி மாறி கோஷங்கள் ஒலிக்கின்றன.

இதற்கு நடுவே... ''எல்லாமே எங்கள் பகுதி விவசாயிகள், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குச் செலுத்திய அநியாய வரிகள் மூலமாக உருவாக்கப்பட்ட நகைகள்தான். அவை அனைத்தும் மக்களுக்கே சொந்தம்'’ என்று சோக வரலாறு சொல்லிக் குமுற ஆரம்பித்துள்ளனர், கேரள எல்லையிலிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள்!

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி பிள்ளை இதைப் பற்றி விவரமாகவே நம்மிடம் பேசினார். ''முன்ன திருவிதாங்கூர் சமஸ்தானத்துலதான் கன்னியாகுமரி பகுதி இருந்துச்சு. இதை 'நாஞ்சில் நாடு’னும் சொல்வாங்க. 'நாஞ்சில்’னா 'கலப்பை’னு அர்த்தம். அந்த அளவுக்கு விவசாயத்துல கொடி கட்டிப் பறந்த பூமி இது. அந்தக் காலத்து திருவிதாங்கூர் சமஸ்தானத்துலயே விவசாயம் செய்றதுக்கு முழுக்க முழுக்க ஏத்த பகுதினா... அது இந்த நாஞ்சில் நாடுதான். இந்தப் பக்கம் முழுக்க முழுக்க நெல்லுதான் சாகுபடி பண்ணுவாங்க. அந்தக் காலத்துல எல்லா நிலமும் மன்னருக்குத்தான் சொந்தமா இருந்துச்சு. மக்கள் கையில நிலம் இருக்காது. நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துதான் விவசாயம் பண்ண முடியும். அப்படி சமஸ்தானத்துக்குப் பணம் கட்டி எடுக்குறதுக்கு 'மாராய பணம்’ கட்டறதுனு சொல்வாங்க. அப்படி எடுத்து பயிர் செய்றவங்கள 'பண்டாரப் பாட்டம்’ எடுத்தவர்னு சொல்வாங்க.
ஒரு ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சா, மூணு கோட்டை முதல் அஞ்சு கோட்டை நெல் (ஒரு கோட்டை என்றால், 87 கிலோ) வரைக்கும் மன்னருக்கு வரியா கொடுத்துடணும். இதுபோக, ஏக்கருக்கு பத்து ரூபா வரைக்கும் நில வரி கட்டணும். தண்ணி வரி தனியா கட்டணும். அறுவடை முடிஞ்சதுக்கப்பறம் விவசாயத்தை விட்டுடறதா இருந்தா... வரி பாக்கியெல்லாம் பிடிச்சது போக, மாராயப் பணத்தைத் திரும்பக் கொடுத்துடுவாங்க. புயல், வெள்ளம்னு மகசூல் பாதிச்சிருந்தாலும், அதைப் பத்தியெல்லாம் சமஸ்தான அதிகாரிக இரக்கப்படவே மாட்டாங்க. அவங்களுக்குச் சேர வேண்டியதை அபராதத்தோட எடுத்திக்கிட்டுதான் விடுவாங்க.
நூறு வருஷத்துக்கு முன்ன திருவிதாங்கூர் சமஸ்தானத்தோட சேர்ந்து ஆங்கிலேயர்கள் 'பேச்சிப்பாறை’யில ஒரு அணையைக் கட்டினாங்க. அந்த அணைத் தண்ணியில பாசனம் பண்ணுன விவசாயிகளுக்கு 'பேச்சிப்பாறை சானல் பாசன பயன்பாட்டு வரி’னு தனியா வரி போட்டது சமஸ்தானம். இதெல்லாத்தையும்விட கொடுமை... காரணமே இல்லாம ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பேருல தனியா ஒரு வரி போட்டு வசூலிப்பாங்க. அப்படி நாஞ்சில் நாட்டு விவசாயிகளுக்கு 'மணியங்கரம்’னு ஒரு வரி போட்டிருந்தாங்க.

 
இப்படி ஏகப்பட்ட வரிகள போட்டு நெருக்கடி கொடுத்ததால பல பேர் விவசாயத்தை விட்டே ஓடினாங்க. அப்படி இருந்தும் பெருமைக்காக பல ஏக்கர்ல கூலியாட்களை வெச்சு விவசாயம் பண்ற ஆளுங்களும் உண்டு. அந்த மாதிரி எங்க அப்பாவும் தோவாளை தாலூகா, பூதப்பாண்டியில ஏழு ஏக்கர்ல நெல் சாகுபடி பண்ணினார். கிடைக்கிற வருமானம் முழுசும் மன்னருக்கு வரி கட்டத்தான் சரியா இருக்கும். ஆனாலும், பெருமைக்காக விடாம விவசாயம் பண்ணுனார்.
இப்படியெல்லாம் விவசாயிகள விரட்டி, வேதனைப்படுத்தி வசூலிச்ச வரிப்பணத்துல ஆக்கப்பூர்வமா எதுவும் பண்ணாம... கஜானாவ நிரப்புறதுல மட்டும்தான் குறியா இருந்தாங்க அந்த மன்னர்கள். அப்படி விவசாயிகள்கிட்ட கெடுபிடி பண்ணி வசூலிச்ச பணத்தையெல்லாம்தான் தங்கம், வைரம்னு பத்மநாபசாமி கோயில் பாதாள அறையில பதுக்கி வெச்சிருந்தாங்க. இப்ப அதெல்லாம் உச்ச நீதிமன்ற உத்தரவால வெளியில தெரிய ஆரம்பிச்சிருக்கு. அதென்னமோ அவங்கள்லாம் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்ச சொத்துக் கணக்கா... எனக்குச் சொந்தம்... உனக்குச் சொந்தம்னு உரிமைப் போர் நடத்தறாங்க. மொத்தமுமே மக்களுக்குத்தான் சொந்தம்.. குறிப்பா விவசாயிகளுக்கு!'' என்றார் ராமசாமி பிள்ளை அழுத்தமாக!


மக்களாட்சியில் மட்டுமல்ல, மன்னராட்சியிலும்கூட விவசாயிகள் சுரண்டப்பட்டுதான் வந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த சோக வரலாறுதான் சாட்சி.

கருத்துகள் இல்லை: