செவ்வாய், 26 ஜூலை, 2011

பிரதமர் மீது ராசா மீண்டும் குற்றச்சாட்டு


 
முன்னாள் அமைச்சர் ஆ ராசா
முன்னாள் அமைச்சர் ஆ ராசா
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்ய, ஜிஓஎம் என்று அழைக்கப்படும் சிறப்பு அமைச்சர்கள் குழுவை அமைக்காததன் மூலம், பிரதமர் மன்மோகன் சிங், தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாகவும், அதன் மூலம் இந்த வழக்கில் சதித்திட்டத்தில் உடந்தை என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் மீதும் குற்றம் சாட்ட முடியும் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அலைக்கற்றை உரிமம் பெற்ற தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், தங்கள் பங்குகளைத் தளர்த்திக் கொள்ள அனுமதியளிப்பது குறித்து பிரதமர் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துடன் விவாதிக்கப்பட்டதாக திங்கள் கிழமையன்று நீதிமன்ற விசாரணையில் ராசா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், செவ்வாய் கிழமையன்று விசாரணை துவங்கியபோது, பிரதமர் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மீது ராசா குற்றம் சாட்டவில்லை என்று அவரது வழக்கறிஞர் சுஷில்குமார் விளக்கமளித்தார்.
ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டு செய்திகளை வெளியிட்டிருப்பதாகவும், சரியான செய்தியை மக்களுக்குக் கொடுக்காவிட்டால், அவர்களை நீதிமன்றத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுங்கள் என நீதிபதியைப் பார்த்து சுஷில்குமார் கோரிக்கை விடுத்தார்.
அவ்வாறு கருத்துத் தெரிவித்த சிறிது நேரத்துக்குப்பிறகு, விவாதம் தொடர்ந்துகொண்டிருந்தபோது, மீண்டும் பிரதமர் மீது ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் குற்றம் சாட்டினார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் குழுவை அமைத்து ஆய்வு செய்ய அதிகாரம் இருந்தும், பிரதமர் அதற்கான அவசியம் இருப்பதாக உணரவில்லை. அவர் அவ்வாறு புறந்தள்ளியதால், அமைச்சர்கள் குழு அமைக்கப்படவில்லை. அதனால், கடமையிலிருந்து தவறிவிட்டார் என்ற அடிப்படையில், அவரும் சதித்திட்டத்தில் உடந்தை என்றுதான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஜிஓஎம் தேவையில்லை என்பது அவர் எடுத்த முடிவு என்று ராசாவின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்த வழக்கில் உள்துரை அமைச்சர் சிதம்பரத்தையும் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று ராசாவின் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக, தொலைத் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் எந்தத் திருத்தமும் செய்யவில்லை என்றும், தற்போதைய அட்டார்னி ஜெனரலாக உள்ள அப்போதைய சொலிசிடர் ஜெனரல் வஹன்வதி ஒப்புதல் அளித்த பிறகே அது வெளியிடப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் ராசா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ராசாவின் மீதான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாததால், சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதில் இருந்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

கருத்துகள் இல்லை: