செவ்வாய், 26 ஜூலை, 2011

கே ஆர் விஜயா, ராஜஸ்ரீ உருக்கம் ஆண்டுதோறும் ரவிச்சந்திரனின் பத்து படங்கள் வரை வெளியாகும்.

ரவிச்சந்திரன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை நம்ப முடியவில்லை, என்று அவருடன் நடித்த நடிகைகள், பழகிய பிரமுகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் நேற்று இரவு மறைந்தார். அவரது மறைவுக்கு கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த ரவிச்சந்திரன் நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி ஆகியவற்றில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 1960-களில் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த ரவிச்சந்திரனுக்கு ரசிகர்களை விட ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

ஆண்டுதோறும் அவர் நடித்த பத்து படங்கள் வரை வெளியாகும். அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்துவிடும். எனவே தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக வரிசையில் நின்றனர். நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, "மானசீக காதல்', "மந்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கன்னடத்திலும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

ராஜ்ஸ்ரீ

ரவிச்சந்திரனின் மறைவு குறித்து அவரது முதல் படத்தில் நாயகியாக நடித்த ராஜஸ்ரீ கூறுகையில், "நான் நடித்த முதல் படமான 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நான்தான் அவருக்கு ஜோடி. நான் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையானதால் படப்பிடிப்பின்போது என்னை சீனியர் நடிகை என்று மிகுந்த மரியாதை கொடுப்பார். ஆனால் அவரைப் பார்த்தால் அறிமுக நடிகராகவே தெரியாது. தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பார். அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அறிந்து மூன்று நாள்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் பார்த்தேன். அவருடைய மறைவை நம்ப முடியவில்லை. அவருடைய குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

கே ஆர் விஜயா

ரவிச்சந்திரன் நடித்த கடைசி படமான ஆடுபுலியில் அவருக்கு ஜோடியாக கேஆர் விஜயா நடித்திருந்தார். அவர் கூறுகையில், "மனசு மிகவும் கஷ்டமாக உள்ளது. நேற்றுதான் அவரைப் பார்த்தது போலிருக்கிறது. அதற்குள் மறைந்துவிட்டார். மிக இனிமையான மனிதர் ரவிச்சந்திரன். நாங்கள் இருவரும் ஆடுபுலியில் நடித்தபோது, பழைய நாட்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம். ரவிச்சந்திரன் மறைவு, எங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது," என்றார்.

காதலிக்க நேரமில்லை வசனகர்த்தா சித்ராலயா கோபு கூறுகையில், "காதலிக்க நேரமில்லை' படத்துக்காக ஸ்ரீதர் ஏற்கெனவே நான்கு பேரைத் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் ரவியைப் பார்த்தவுடன் "இவர்தான் நம் ஹீரோ'' என முடிவுசெய்துவிட்டார். ஆனாலும் ரவிச்சந்திரனிடம் அதைப்பற்றி ஏதும் கூறாமல் இருந்தார். அதனால் படப்பிடிப்பு தொடங்கும் நாள் வரை ரவிச்சந்திரன் பதற்றமாகத்தான் இருந்தார். பிறகு ஸ்ரீதர் அவரை படப்பிடிப்புக்கு அழைத்தவுடன்தான் சகஜ நிலைக்குத் திரும்பினார். அனைத்து இயக்குநர்களிடமும் மிகுந்த மரியாதை கொண்டவர். அவருடைய மறைவு வேதனை தருவதாக உள்ளது", என்றார்.

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்

"காதலிக்க நேரமில்லை' படத்தில் நான் இணை இயக்குநர். ரவிச்சந்திரனுக்கு முதல் படம் என்பதால் அவரிடம் சகஜமாகப் பேசி, நடிப்பை சொல்லித் தாருங்கள் என ஸ்ரீதர் கூறினார். அதனால் அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நட்பு இப்போது வரை தொடர்ந்துகொண்டிருந்தது. ரவிச்சந்திரனைப் போன்ற குரு பக்தி உடையவர்களை சினிமாவுலகில் பார்ப்பது கஷ்டம். ஒரு நல்ல நண்பனை இழந்த சோகத்தில் இருக்கிறேன்," என்றார்.

கருத்துகள் இல்லை: