செவ்வாய், 26 ஜூலை, 2011

மம்முட்டி, மோகன்லால் செல்வாக்கு கேரளாவில் சரிந்து விட்டது

சரிந்த செல்வாக்கு, தகர்ந்த கனவுகள்... தவிப்பில் மம்முட்டி, மோகன்லால்!

வருமானவரி சோதனையால் மம்முட்டி, மோகன்லால் செல்வாக்கு கேரளாவில் சரிந்து விட்டது. மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நல்ல அபிப்பிராயம் தகர்ந்து விட்டதாக கேரள பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

மேலும் மோகன்லாலுக்கு ராணுவத்தில் வழங்கப்பட்ட கவுரவ பதவியை திரும்பப் பெறுமாறு எழுத்தாளர் சுகுமாறன் ஆழிக்கோடு வலியுறுத்தியுள்ளார். மம்முட்டிக்கு வழங்கப்படவிருந்த ராஜ்யசபா எம்பி பதவிக்கும் இந்த சோதனை வேட்டு வைத்துள்ளது.

மம்முட்டியும் மோகன்லாலும் மலையாள திரையுலகில் முதல் நிலை நடிகர்கள். ரசிகர்களும் ஏராளம். பல ஆண்டுகளாக இவர்கள் மலையாள திரையுலகை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

அண்மையில் இவர்கள் சம்பாதித்த பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்ய துவங்கினர். மோகன்லால் ரியல் எஸ்டேட்டில் குதித்தார். அபார்ட்மெண்ட்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களை கட்டி வாடகைக்கு விட்டார். மம்முட்டியும் நிலத்தில் முதலீடு செய்தார். இதனால் வருமானம் குவிந்தது.

இதில் பொறாமையடைந்த சக நடிகர்கள் சிலர் வருமன வரித்துறைக்கு புகார்களை அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து மம்முட்டி, மோகன்லால் சொத்து விவரங்களை வருமான வரித்துறை ரகசியமாக வேவு பார்த்து அதிரடி வேட்டையில் இறங்கியது.

இந்த சோதனையில் லட்சக் கணக்கில் ரொக்கம், நகைகள், சொத்து ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இருவரிடமும் பலமணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன்மூலம் மம்முட்டி, மோகன்லால் செல்வாக்கு கேரளாவில் சரிந்து விட்டதாக அங்குள்ள திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

மம்முட்டி, மோகன்லாலுக்கு எதிரான பிரசாரத்திலும் சிலர் இறங்கியுள்ளனர். மோகன்லால் வீட்டில் யானை தந்தம் பிடிபட்டது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். குறிப்பாக எழுத்தாளர் சுகுமார் ஆழிக்கோடு இந்தக் கோரிக்கையை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணிக்கு வைத்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கேரள அணியை ஏலம் எடுக்க மோகன்லால் தயாராகி வந்தார். இந்த வருமான வரி சோதனை காரணமாக அது நிறைவேறுமா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் மம்முட்டியின் கலைச் சேவையை பாராட்டி ராஜ்யசபா எம்.பி.யாக்கவும் ஏற்பாடுகள் நடந்தன. இப்போது அதுவும் கேள்விக்குறியாகிவிட்டது.

கருத்துகள் இல்லை: