vikatan.com - Antony Ajay R : MIMO : உலகை மாற்றிய தமிழரின் கண்டுபிடிப்பு - யார் இந்த ஆரோக்கியசாமி பவுல்ராஜ்?
ஆரோக்கியசாமி பவுல்ராஜ் நாம் அதிகம் அறிந்திடாத இந்திய-அமெரிக்க கண்டுபிடிப்பாளரும், தொழில்முனைவோருமாவார். இவரது மிமோ என்ற வயர்லெஸ் தொழில்நுட்பத்துக்காக IET-ன் ஃப்ரடே விருதைப் பெற்றுள்ளார்.
இந்த விருது தொழில்நுட்பத்துறையில் இங்கிலாந்தால் வழங்கப்படும் உயரிய சர்வதேச விருதாகும். மின்காந்தவியலின் தந்தை என அழைக்கப்படும் மைக்கேல் ஃப்ரடேவின் நினைவாக வழங்கப்படுகிறது.
இந்த விருதைப் பெறும் 100வது நபர் அரோக்கியசாமி பவுல்ராஜ். மிமோ வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பு மற்றும் வணிகமயமாக்கலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா வழங்கும் உயரிய சர்வதேச விருதான IEEE-ன் அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் மெடல் 2011ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இந்த இரண்டு உயரிய விருதுகளையும் பெறுவது மிகவும் அரிதானது.
2014ம் ஆண்டு மாக்ரோனி விருது, 2010ம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷன் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இவ்வளவு விருதுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கும் மிமோ தொழில்நுட்பம் குறித்தும், தமிழகத்தில் பிறந்து இத்தகைய உயர்ந்த இடத்தை அடந்திருக்கும் அரோக்கியசாமி பவுல்ராஜ் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் 6.4 பில்லியன் மொபைல் ஃபோன்கள் மிமோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுகின்றன. பிற வயர்லெஸ் இணையத்தைப் பயன்படுத்தும் சாதனங்களையும் சேர்த்தால் 12 பில்லியனுக்கும் மேலேபோகும்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்ட உலகளாவிய சமூக பொருளாதார தாக்கத்தைக் கொண்ட தொழில்நுட்பம் மிமோ என்கின்றனர்.
பவுல்ராஜ் 1944ம் ஆண்டு பொள்ளாச்சியில் பிறந்தவர். 26 ஆண்டுகள் இந்திய கடற்படை தொழில்நுட்ப திட்டங்களில் பணியாற்றினார். அதன்பிறகு அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பலகலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
1992ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மிமோ தொழில்நுட்பத்தின் முன்வரைவை உருவாக்கினார். MIMO - Multiple-Input Multiple-Output என்பது வயர்லெஸ் இணைய தொடர்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். இது இணைய வேகத்தை அதிகரிப்பதில் உதவுகிறது.
1998ம் ஆண்டு பல சந்தேகங்களைத் தீர்த்த பிறகு மிமோ தொழில்நுட்பம் கவனிக்கப்பட்டது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்தினர்.
இன்றைய 4ஜி, 5ஜி மொபைல் மற்றும் வைஃபை தொழில்நுட்பங்களில் மிமோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக