மின்னம்பலம் -vivekanandhan : முதல்வருக்கு கிடைத்த தருமபுரி ரிப்போர்ட்…மாவட்டச் செயலாளர்களை வெளுத்துக் கட்டிய அமைச்சர்!
தருமபுரி நாடளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு பிரச்சார வேலை மந்தமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு அமைச்சரைக் கேட்டதால், கோபமான அமைச்சர் தருமபுரி மாவட்டச் செயலாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அ.மணி, பாஜக கூட்டணியில் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி, அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு வேலை செய்ய அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் தருமபுரி தொகுதியில் களமிறங்கியுள்ளனர். வன்னியர்களின் வாக்குகளைக் குறிவைத்து ஊர் ஊராக வீடு வீடாகச் சென்று உருக்கமாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
பாமக செய்யும் வேலையுடன் ஒப்பிடும்போது, திமுகவின் பிரச்சார வேலைகள் குறைவாக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது.
நேற்று முன்தினம் ஏப்ரல் 6 ஆம் தேதி கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தையும் மற்றும் சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனையும் ஆதரித்து பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். அப்போது அவர் உடன் வந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் என்னாங்க தருமபுரி ரிப்போர்ட் வேறு மாதிரியாக வருகிறது…கொஞ்சம் கவனமாகப் பாருங்கள் பன்னீர் என்று கேட்டுள்ளார்.
தருமபுரி பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவசர அவசரமாக ஏப்ரல் 7 ஆம் தேதியான நேற்று தருமபுரி வந்தார். காலை 8.30 மணியளவில் அதியமான் ஹோட்டல் நான்காவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு மாவட்டச் செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி மற்றும் பழனியப்பன் இருவரையும் வரவழைத்தார்.
தடங்கம் சுப்பிரமணியைப் பார்த்து எல்லாரும் என்ன செய்றீங்க, நாளை (இன்று) ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் வருகிறார்…கூட்டத்தை எப்படி கூட்டப் போறீங்க எனக் கேட்டவர், தொகுதி வீக்காயிருக்கு என்று தலைவர் சொல்றாரு, நீங்க அமைதியாக இருக்கீங்க…மேலிடத்தில் என்னைத்தான் கேட்கிறாங்க என்று லெப்ட் & ரைட் வாங்கியிருக்கிறார் அமைச்சர்.
அமைதியாக வெளியில் வந்த மாவட்டச் செயலாளர்கள் கரன்சி இல்லாமல் என்ன செய்ய முடியும் என புலம்பிக் கொண்டே சென்றுள்ளனர்.
-வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக