திராவிட இனம் என்ற ஒன்றே கிடையாது என்கிறார்களே இந்து அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும்?
-சாமுவேல், திருவாரூர்.
ஆரியர் என்ற இனம் இருப்பது உண்மையானால், திராவிடம் என்ற இனம் இருப்பதும் உண்மையே.
ஆரியர் என்ற அடையாளத்திற்குரியவர்கள்
இந்தியா முழுக்க பிராந்திய அளவில் இருந்தாலும், அவர்கள் தங்களை ‘ஆரியர்
என்று அழைக்காதீர்கள்’ என்று சொல்வதில்லை.
தமிழகத்திலும் ‘தமிழர்’ என்று தங்களை
அழைத்துக் கொண்டாலும், அதற்கு ஒரு படி மேலே போய் பெருமையோடு தங்களை
‘ஆரியர்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள், பாரதியைப் போல்.
இந்து மத சடங்குகளில், சமஸ்கிருத
சுலோகங்களில். வேத வியாக்கானங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,
மராட்டி இப்படி எந்த மொழி பேசுகிறவர்களாக இருந்தாலும், ஆரியர்களுக்குள் ஒர்
ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது.
தமிழ்நாட்டில்கூட வட்டார வழக்கைத் தாண்டி,
தமிழகம் முழுக்க இருக்கிற ஆரியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான ‘பார்ப்பன
தமிழ்’ பேசுவது எப்படியோ அப்படி ஓர் ஒற்றுமை.
‘தமிழை’, ‘ஜாதி வழக்கு’ தமிழாக
பயன்படுத்துகிற ஒற்றுமை வேறு எந்த ஜாதிக்காரர்களிடமும் கிடையாது. அவுங்க
பேசுற தமிழைக் கேட்டவுடேனேயே அவர்களின் ஜாதியை அடுத்த நொடியே தெரிந்து
கொள்ளலாம்.
அதற்குக் காரணம் சமஸ்கிருதத்தை மேன்மையான மொழியாக தமிழோடு கலந்து பேசுவதுதான்.
திராவிடர் என்பதற்கான முதன்மையான அடையாளம்
சமஸ்கிருதம் கலக்காத தனித்தமிழ்தான். திராவிடர் என்பது இனம் அல்ல என்றால்,
நிச்சயமாக தமிழன் என்பதும் இனம் அல்ல. அது மொழியின் அடையாளம்.
ஆரியம் என்பது இனம். சமஸ்கிருதம் அதன் மொழி என்பதைபோல.
‘திராவிடர்’ அரசியில் பேசிய திராவிட இயக்கத்தவர்கள், அதனால்தான் தமிழை முதன்மை படுத்தினார்கள்.
பெரியாரிடம் இருந்து பிரிந்த திமுக
காரர்கள், தமிழை சமஸ்கிருதம் போல் புனிதமாக்கினார்கள். இந்தி எதிர்ப்பின்
வடிவமாக தமிழ் கூடுதல் புனிதம் பெற்றது.
‘தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என்ற மொழி சார்ந்த உணர்வு ரீதியான அரசியல் தீவிரமாக்கப்பட்டது.
திராவிடம் பேசியவர்கள், ‘திராவிடத் தாய்’ என்று சொல்லாமல், ‘தமிழ்த் தாய்’ என்று மொழியை முதன்மைப்படுத்தி அரசியல் செய்தார்கள்.
தமிழ்த் தாய் வாழ்த்தே கலைஞர் ஆட்சியில்தான் வந்தது.
ஒருமுறை திமுகவைச் சேர்ந்த சி.பி. சிற்றரசு
மேலவை உறுப்பினராக இருந்தபோது இந்தியினால், தமிழ்த் தாய் சீராழிகிறாள்,
‘தமிழ்த் தாய்.. தமிழ்த் தாய்’ என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது,
ஒரு காங்கிரஸ்காரர் குறுக்கிட்டு,
‘மூச்சுக்கு மூச்சு தமிழ்த் தாய் என்கிறீர்களே உங்கள் தமிழ்த் தாய் எங்கே
தங்கி இருக்கிறாள்?’ என்று கேட்டாராம்.
அதற்கு சிந்தனை சிற்பி சிற்றரசு இப்படி பதில் அளித்தார்:
‘உங்க பாரதமாத வீட்டுக்கு பக்கத்து வீட்ல.’ http://mathimaran.wordpress.com/