வியாழன், 29 நவம்பர், 2012

நாடாளுமன்றத் தேர்தல்.. கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு காங்கிரஸ் குறி!

டெல்லி: வரும் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஒடிஸ்ஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தீவிர கவனம் செலுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்ததை சந்திக்க காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந் நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஒடிஸ்ஸா, ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று அந்த குழு முடிவெடுத்துள்ளது.
இந்த மாநிலங்களில் இருந்து 93 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நவீன் பட்நாயக் ஆளும் ஒடிஸ்ஸா மாநிலத்தைத் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக தான் ஆட்சியில் உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கும், மாயாவதியும் மிக பலமாக உள்ளதால் அங்கு பெரிய அளவில் சாதிக்க முடியாது என காங்கிரஸ் கருதுகிறது.
பிகாரில் நிதிஷ் குமார் நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறார். இங்கே காங்கிரஸ் என்ன செய்தாலும் வெற்றி கிடைப்பது கஷ்டம். இதனால் அங்கு லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க அந்தக் குழு முடிவு செய்துள்ளது.
குஜராத்திலும் காங்கிரஸ் கட்சி குட்டிக்கர்ணம் அடித்தாலும் மோடியை வெல்ல முடியாத நிலை.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே தான் மோதல் நடக்கப் போகிறது. அங்கு காங்கிரசுக்கு தேர்தலை வேடிக்கை பார்க்கும் வேலை மட்டுமே உள்ளது.
இதனால் மற்ற பெரிய வட மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஒடிஸ்ஸா, ஜார்க்கண்ட் ஆகியவற்றை காங்கிரஸ் குறி வைக்கத் திட்டமிட்டுள்ளது. ஒடிஸ்ஸாவில் முதல்வர் நவீன் பட்நாயக் பலமாக இருந்தாலும் அவரை சமாளிக்க முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
தென்னகத்தில் ஆந்திராவில் காங்கிரசுக்கு மூன்றாவது இடமே கிடைக்கும் என்று தெரிகிறது. ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை தான் அதிக இடங்களைப் பிடிக்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் சவாரி செய்ய ஒரு திராவிடக் கட்சி மாட்டிவிடும். அது தொடர்ந்து திமுகவாகவே இருக்க அதிக வாய்புகள் உள்ளன. கேரளத்தில் இப்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மண்ணைக் கவ்வி இடதுசாரிகள் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல வாய்ப்புள்ளது.
இதனால் காங்கிரசுக்கு மிச்சம் உள்ள ஒரே நம்பிக்கை மாநிலம் கர்நாடகம் தான். இங்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை கூட காங்கிரஸ் காணாமல் போனவர்கள் பட்டியலில் தான் இருந்தது.
ஆனால், பாஜக ஆட்சியில் நடந்த தொடர் ஊழல்கள், அதிகாரத்துக்கு நடந்த சண்டை, 4 வருடத்தில் 3 முதல்வர்கள் ஆட்சிக்கு வந்தது, அமைச்சர்கள் மீதான ஊழல்-குஜால் புகார்கள், பாஜகவில் நடந்து வரும் குடுமிடிப்படி சண்டை, எதியூரப்பா தனியாக கட்சி ஆரம்பிப்பது ஆகியவை காங்கிரசுக்கு பெரும் 'போஷாக்கை' அளித்துள்ளன. இதனால் அந்தக் கட்சி திடீரென கர்நாடகத்தில் உயிர்தெழுந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக