வியாழன், 29 நவம்பர், 2012

ஆ.இராசாமீது ஊழல் குற்றஞ் சுமத்தியவர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?

2ஜியில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று எங்கள் அறிக்கையில் (Draft Report) குறிப்பிடப்படவில்லை - ஆடிட்டர் ஜெனரல் ஆர்.பி.சிங்

  • ஸ்பெக்ட்ரம் குறித்து சி.பி.அய். எந்த முடிவுக்கும் வரவில்லை  - சி.பி.அய். இயக்குநர் அமர்பிரதாப்சிங்

  • ஆ.இராசாமீது ஊழல் குற்றஞ் சுமத்தியவர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?
    வர்ணமும் - வர்க்கமும் சேர்ந்த கூட்டுச் சதி
    தமிழர் தலைவரின் அடுக்கடுக்கான வினாக்களும்  விடைகளும்

    சென்னை, நவ.29- ஆ. இராசாமீது சுமத்தப் பட்ட ஊழல் பழி வருணமும் வர்க்கமும் சேர்ந்த கூட்டுச் சதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலா? ஜோடிக்கப்பட்ட சதியா? எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் சரியாக இரவு 7.10 மணிக்கு சென்னை பெரியார் திடல் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது (28.11.2012). கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையாற்றினார். அவரது உரையில், ஸ்பெக்ட்ரம் பிரச்சினை வந்த போதே தெளிவாக எடுத்துச் சொன்ன தலைவர் தமிழர் தலைவர்தான். பல முறை அறிக்கை வெளியிட்டு அதற்காக விமர்சனங்களையும் எதிர் கொண்டோம். ஆனால் பூனைக்குட்டி வெளியில் வந்தது என்று விடுதலையில் வெளியிடுவதைப் போல தற்போது உண்மைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இப்போது அந்த பத்திரிகைகள் நடமாடிக் கொண்டுதானே இருக்கின்றன. மக்கள் நல அரசு என்பது வடநாட்டு மார்வாடிபோல வட்டிக் கடை நடத்துவது போன்றதல்ல!
    எல்லாவற்றிலும் லாபக் கணக்கினை அரசு பார்க்கக் கூடாது. இப்போது உண்மைகள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றன. எனவே அமைச்சர் ராஜாவை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்திருந்தார்களே! அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு ஏற்பது? ஒரு நிறுவனத்தில் பங்கு தாரராக இருந்தார் என்பதற்காக கனிமொழி எம்.பி., அவர்களைச் சிறைப்படுத்தியது எப்படி சரி என்று வினா எழுப்பினார்.

    தொடர்ந்து தமிழர் தலைவர் உரை யாற்றத் தொடங்கினார். கழகத்தின் முக்கிய பிரமுகர்கள், பல்துறை சான் றோர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள் என அரங்கம் நிரம்பியிருந்தது. தமிழர் தலைவர் அவர்கள் தன்னுடைய உரையில் குறிப்பிட்டதாவது:
    கோயபல்ஸ் பிரச்சாரம்
    நம்முடைய இயக்கத்தைப் பொறுத்த வரை உண்மைகள் மக்களுக்கு மறைக்கப்படும்போது வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக பணியாற்றுபவர்கள்; நாம் பூதாகரமாக ஒரு பொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் நிலைத்து விடும் என்று புராணக் காலத்தில் இருந்து வருவதுதான்; உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை என்பார்கள். கந்த புராணத்தின் புளுகு எந்தப் புராணத்திலும் இல்லை என்ற சொலவடை உண்டு. அப்படியெனில் கந்தபுராணம் புளுகுதானே!
    அதற்கடுத்து அரசியல் உலகம். இதில் இரண்டாம் உலகப் போரில் கோயபல்ஸ் என்ற பிரச்சார அமைச்சர். இதைவிட பெரிய பொய்களை யாரும் சொல்ல முடியாத அளவுக்கு கட்டவிழ்த்து விட்டவர். கோயபல்ஸ் பாணி என்று அரசியலில் நிலைத்துவிட்டது. ஊடகங்கள் - பார்ப்பன ஊடகங்கள் வெட்கப்பட வேண்டாமா? 2ஜி அலைக்கற்றைபற்றி தற்போதுதான் ஓய்வு பெற்ற அதிகாரிகள் போதி மரத்து புத்தர்களாகி வருகிறார்கள். அவர்கள்மேல் நமக்கு வருத்தம் இல்லை. அந்தளவுக்கு அவர்களுக்கு நெருக்கடி இருந்திருக்கிறது.
    எல்லோருக்கும் தெரியும். நண்பர்கள்கூட கேட் டார்கள். ஆசிரியர் வக்காலத்து வாங்கலாமா? ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலென்று வரிசையாக பூஜ்யத்தைப் போட்டார்களே, இன்றைக்கு இதன் நிலை என்ன?
    இமாலய ஊழல், ராஜா ஊழல் செய்தார், திமுக செய்தது என்று பிரச்சாரம் செய்தார்கள், தொடர்ந்து அச்சுறுத்தினார்கள். சுப்பரமணிய சுவாமி போன்ற அரசியல் தரகர்களின் அடாவடிக்குப் பயந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் நடந்து கொண்டது  பொறுப்பில் உள்ளவர்களுக்கு அழகா?
    மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கியவர் ஆ. இராசா
    எப்போதுமே ஓடுகிறவர்களைக் கண்டால் துரத்துகிறவனுக்குக் கொண்டாட்டம்தான். எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சலை மத்திய அரசு பெறவில்லை. யாராவது ஒருவரை பலிகடா ஆக்க வேண்டும். கூட்டுப் பொறுப்பில் ஒரு தவறு என்றால் தலைமைப் பொறுப்பில் வகிப்பவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அதுதான் நியாயம். திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மய்யமாக பலருக்கு இருந்தது. தகுதி திறமையை நிரூபித்து தொலைத் தொடர்புத் துறை வரலாற்றில் மிகப் பெரும் புரட்சியை உருவாக்கியவர் ஆ. இராசா அவர்கள்.
    நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்துத் துறையும் தொலைத் தொடர்புத் துறையும் மிக முக்கியமானவை. போக்குவரத்து வளர்ச்சிக்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. சார்பில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு அவர்கள் பெரும் சாதனை செய்தார். தங்க நாற்கர சாலைகளை, சிறப்பாக அமைத்தார். சென்னையில் இருந்து திருச்சிக்கு 5 மணி நேரத்தில் போகக் கூடிய அளவுக்கு நல்ல சாலைகளை, பாலங்களை அமைத்தார். போக்குவரத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தொலைத் தொடர்பும் ஆகும்.
    தாழ்த்தப்பட்டவர் என்பதாலா?
    தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர், சட்டக் கல்லூரியில்  படித்து, பகுத்தறிவோடு திகழ்ந்து நம் தோழர்கள் பி.எல். படித்தாலே அரிது. அதிலும் மாஸ்டர் ஆப் லா எனும் எம்.எல். படித்து, சிறப்பாக ஒவ்வொரு பொறுப்பையும் எந்தப் புகாருக்கும் ஆளாகாமல், முன்னால் இருந்தவர்கள் கொள்கையை பின்பற்றியதோடு, அதனை எப்படி இன்னும் பயனுள்ளதாக செய்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி சிறப்பாக செயல் பட்டவர் ஆ. இராசா.
    ஒரு மாற்றம் செய்தால் அம்மாற்றத் தால் பாதிக்கப்படுபவர்கள் மாற்றம் செய்தவர்களை சகித்துக் கொள்ள முடியாது. எதிர்ப்பு காட்டுவார்கள் - மிரட்டுவார்கள், அச்சுறுத்துவார்கள் எல்லா இடங்களுக்கும் தொலைத் தொடர்பு போய் சேர வேண்டும் என்று நினைத்தார் ராசா.
    சாமான்ய மக்களுக்கும் கிடைக்கச் செய்தார்
    தொலைத் தொடர்பு துறை அமைச்சராக பொறுப்பு ஏற்ற உடனே மனதுக்குள் முடிவெடுத்து சாமான்ய மக்களுக்கும் தொலைத் தொடர்பு வசதியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு ரூபாய்க்கு பேசலாம் என்பதே புரட்சி என்று பேசப்பட்டது. ஆனால் ஆ. இராசா 30 பைசாவுக்குக் கொண்டு வந்தவர். ஒவ்வொரு முறையும் பிரதமரிடம் கலந்து கொண்டு ஏற்கெனவே செய்த கொள்கை முடிவின்படி எப்படி அணுக வேண்டுமோ, அப்படி அணுகி ஆலோசித்து பயன் பாட்டைப் பரவலாக்கினார். ஏகபோக ஆதிக்கத்தில் சில முக்கியக் கம்பெனி களின் கைகளில் வைத்துக் கொண்டு இருந்த அலைக்கற்றை உரிமங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்தார். இதுதான் சமதர்மத்தின் அணுகுமுறை. சாதாரண ஆட்கள் வந்தால் போட்டி அதிகமாகும். எனவே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சிறப்பாக வழங்கப்பட்டது.
    பெரிய நகரங்களில்  மட்டும் தொழில் நடத்தி சிக்கலில்லாமல் லாபத்தைக் கண்டிருந்த நிறுவனங்களுக்கு மாற்றாக நிறைய நிறுவனங்கள் உரிமம் பெற்றதால் சிறிய ஊர்களுக்கும் செல்பேசி கிடைத்தது. 30 சதவிகித அளவு பயன் பாடு என்றிருந்ததை 80 சதவிகிதமாக  மாற்றினார் ஆ. இராசா. நாடு தழுவிய அளவில் சென்றடைந்தது முதலாளிகள் பாதிக்கப்பட்டார்கள். சும்மா இருப் பார்களா? 1952-களில் இருந்தே மத்தி யில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் டாடாக்களும், பிர்லாக்களும் 50-60 எம்பிக்களை வைத்திருப்பார்கள். சட்ட நிபுணர் ஒருவர்கூட, டாடா நிர்வாகத் தின் எம்பி என்ற பெருமையை பெற வில்லையா? முதலாளிகளுக்கு நாடாளு மன்றத்தில் கேள்வி கேட்டவர்கள் பற்றி பட்டியல் வெளிவரவில்லையா?
    அதுபோல அரசாங்கத்தை வளைப்ப தற்கு பார்ப்பனப் பத்திரிகைகளை பயன்படுத்தினார்கள். முதலாளித்துவ யானைகள் ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு என்ன வழி இவரை வீழ்த்த என்று சதித் திட்டம் தீட்டினார்கள்.
    வர்க்கமும் வருணமும்
    பார்ப்பன - பனியா கூட்டு என்பதுபோல் வர்க்கமும் வர்ணமும் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டினர்; சுப்பிரமணியசுவாமி போன்ற அரசியல் தரகர்களுக்கு பஞ்சமா? ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ற கதையை ஜோடித்தார்கள்.  ஆ. இராசா எடுத்த முடிவா?
    இப்பிரச்சினை வந்தபோதே நாங்கள் சொன்னோம். சுப.வீ, ரமேஷ் பிரபா,  மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம் முதலியோர் பேசினோம். அது வும் அனுமான இழப்பு - யூக இழப்புதான் என்று. ஏலம் ஏன் விடவில்லை? ஆ. இராசா எடுத்த முடிவா இது?  பிரமோத் மகாஜன் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.
    அருண்சோரிகூட பத்திரிகையாளர் களிடம் பேசுகையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்பது கற்பனைத் தொகை அநேகமாக 30,000 கோடி ரூபாய் தான் இருக்கும் என்றாரே. அவர்கூட அநேகமாக என்றுதான் சொன்னார். இந்தக் கதை எப்படி உருவானது? ஒய்வு பெற்ற டைரக்டர் ஜெனரல் ஆர்.பி. சிங் என்ன சொல்லியிருக்கிறார்? ராஜா செய்ததில் 2460 கோடி ரூபாயாக இருந்த வருமானம் அடுத்த ஆண்டு 18,000 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. அதற்கடுத்த ஆண்டு மேலும் இது அதிகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் இதுதொடரும். ஆனால் ஏலம் ஒருமுறை மட்டுமே விட இயலும்.
    டிராப்ட்டு ரிப்போர்ட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்  இழப்பு என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்று கூறியிருக்கிறாரோ!
    கபில்சிபல்கூட சொன்னாரே பொன் முட்டையிடும் வாத்து என்று; பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அழிக்கலாமா?
    ஆர்.பி. சிங்குக்கு நிர்ப்பந்தம்
    பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டி (PAC) தலைவராக இருந்தவர் முரளிமனோகர் ஜோஷி அய்யர்தான்; ஓய்வு பெற்ற  டைரக்டர் ஜெனரல்  ஆர்பி சிங் சொன்னது ஞாயிறன்று தி இந்து பத்திரிகையிலேயே வந்திருக்கிறது. என்னைக் கூப்பிட்டு கையெழுத்து போடச் சொன்னார்கள். கட்டளைக்குக் கீழ் படிந்தேன் அவ்வளவுதான். அரசுத் துறையிலே பணியாற்றியவர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறிச் செய்தால் என்ன நடக்கும் என்பதையும் நன்கு அறிவீர்கள்.  சி.பி.அய். இயக்குநர் என்ன சொல்கிறார்?
    அதேபோல சி.பி.அய். இயக்குநர் அமர்பிரதாப் சிங் என்ன சொல்லி யிருக்கிறார்? கடந்த 2 ஆண்டுகளாக காமன்வெல்த், 2ஜி ஸ்பெக்ட்ரம், ஆதர்ஸ் உள்ளிட்ட வழக்குகள் என் காலத்தில் தான் வெளி வந்தது. இதில் ஸ்பெக்ட்ரம் இழப்புத் தொகை குறித்து சிபிஅய் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை - இது தினமலரில் வந்திருக்கிற செய்தி!
    அப்புறம் எதுக்கு ராஜாமீது வழக்கு? ஒன்றரை ஆண்டுகள் பெயில் தராத  ஜெயில்  வாழ்வு எதுக்கு?   என்ன கொலையா செய்து விட்டார்? கொலை செய்ததாக சொல்லப்பட்ட சங்கராச்சாரி யார்கூட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இல்லையே? 2001-இல் குறியீட்டு எண் அடிப்படையிலான மதிப்பீட்டுப்படி குறிப்பிட்ட தொகை 30,000 கோடி அதைக்கூட வருவாய் இழப்பு என்று நாங்கள் சொல்லவில்லை என்று சிபிஅய் தெரிவித்த குற்றப் பத்திரிகையிலேயே தெரிவித்திருக்கிறதே. அப்புறம் எதுக்கு ராஜாவுக்கு சிறை? 2001இல் ராஜாவா அமைச்சராக இருந்தார்? ராஜா எப்போது அமைச்சரானார்?
    ஜீரோ லாஸ்
    ஜீரோ லாஸ் என்று சொல்லும் அளவுக்கு நடந்திருக்கிறதே. ராஜா கட்ஆப் தேதியை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வந்தார் என்கிறார்கள். ஆ. இராசா தனி மனிதனாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதற்கான எல்லா ஆதாரமும் இருக்கிறது. வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வந்ததற்குப் பிறகு இந்த ஆதாரங்கள் அனைத்தும் பப்ளிக் டாக்குமெண்ட், யார் இதைக் கண்டுபிடித்தது? ராஜா தவறு செய்தார் என்று பயனீர் என்ற  பாஜகவின் பத்திரிகை. சுப்பிரமணியசாமி உடன் கூட்டு சேர்ந்து மத்திய அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்க தீட்டிய திட்டம்தான் இது! பார்ப்பன ஊடகங்கள் கூட்டணி.
    ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை ஊடகங்களுக்கு கொடுத்தவர் யார்?
    அதேபோல ஆடிட்டர் ஜெனரல் அறிக் கையை முன்கூட்டியே ஊடகங்களுக்குக் கொடுத்தது யார்? இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில்தானே வைக்க வேண்டும். அதற்கு முன்னால் ஊடகங் களுக்கு எப்படிப் போனது? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதுகுறித்த இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை நிர்ணயித்தது ராஜா அல்ல. ட்ராய் எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம். நுழைவுக் கட்டணம், ஏலம் விட வேண்டும் என்றோ ட்ராய் உள்ளிட்ட யாரும் சொல்ல வில்லையே. அப்புறம் அதில் தவறு எங்கே  நடந்தது? வழக்கு போட்ட சிபிஅய் இன்னும் இழப்பு குறித்து முடிவுக்கு வரவில்லை என்று சொல்லி விட்டது. 80 சாட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை ஒருவர்கூட இழப்பு - தவறு நடந்திருக்கிறது என்று சொல்ல வில்லையே.
    ராஜா தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் செய்யவில்லை. அன்றைய நிதித் துறை அமைச்சகத்தின் செயலாளரும், தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுந ருமான சுப்பாராவ் 78ஆவது சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது அமைச்சர வையைக் கலந்துதான் முடிவெடுத்தார் ராஜா, தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டாரே.
    மக்கள் நல அரசு என்றால்....
    மக்கள் நல அரசு என்பது லாப - நட்டக் கணக்கு பார்க்கக் கூடாது. நான் பொருளாதாரம் படித்த மாணவன். 60 வருடத்திற்கு முன்பு படித்தது இப்போது ராஜாவுக்கு பயன்படுகிறது. விழுமிய பயன் கருதி விலை நிர்ணயம் (Cost of Service), உடனே பணிக்கு ஏற்ற  விலை நிர்ணயம் (Value of Service), என்று  இரண்டு முறைகள் உண்டு. போக்குவரத்துத் துறையில் ஏன் நட்டம் வருகிறது. வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகள் லாபத்தில் இயங்கும். டவுன் பஸ் எனும் உள்ளூர் பேருந்துகள் நட்டத்தில் இயங்கும். ஏனெனில் 2 பேர் ஏறினாலும் பேருந்து ஓட வேண்டும். இதை தனியாருக்கு கொடுத்தால் வழித்தட அனுமதி பெற்றிருந்தால்கூட நட்டத்தில்  இயக்க மாட்டார்கள். எனவே மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதுபோலத்தான் தொலைத் தொடர்புத் துறையும்.  அரசாங்கம் என்ன வட்டிக் கடையா நடத்துகிறது?  ராஜாவின் புத்திசாலித்தனத்தால் அணுகுமுறையில் கடைசியாக ரூபாய் 90,000 கோடி வந்துள்ளது. (AGR என்ற வருமானம்) லாபம் வந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியைவிட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அதிக லாபம் பெற்றிருக்கிறார்கள் காரணம் இராசா.
    கனிமொழி எம்.பி., என்ன குற்றம் செய்தார்?
    அதேபோல கனிமொழி எம்.பி., என்ன குற்றம் செய்தார்? கலைஞர் டி.வி.க்கு லஞ்சப் பணம் வந்தது என்று சொல்கிறார்கள். லஞ்சப் பணத்தை யாராவது செக் மூலம் வாங்குவார்களா? செக்குமாட்டு மனப்பான்மை யாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது செக்கு அல்ல. செக் (Cheque) இன்னொன்று சாதிக் பாட்சா என்ற நண்பர் தற்கொலை செய்து கொண்டார். அது கொலையா? தற்கொலையா? கழுத்து இறுகியதா? எந்தக் கயிறு? எத்தனை இன்ச்? என்று நம்ம பத்திரிகையாளர்கள் எப்படியெல்லாம் எழுதினார்கள்! இப்போது இவர்கள் உயிரோடு இருக்கலாமா? என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இப்போது சிபிஅய் விசாரணை முடிவில் உண்மை வெளிவந்துவிட்டதே. தற்கொலைதான் என்று சொல்லி விட்டார்களே. நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா?
    தருமபுரியில் நடப்பது என்ன? உண்மையைச் சொல்லத் தயங்கக் கூடாது. பெரியாரின் பால பாடம் இது. இன்னமும் தொண்டினை, அறிவைப் பார்க்காமல் ஜாதி பார்க்கிறார்களே! அதனால்தானே தருமபுரிகள் நடக்கின்றன. எல்லோரும் வேடிக்கை பார்த்தால் நாங்களும் பார்க்க வேண்டுமா? நியாயத்தை பேசாமல் போனால் சமுதாயத்தில் பொது ஒழுக்கம் என்னாவது? கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட  அந்த குடும்பங்கள் சந்தித்த அவமானம், மன உளைச்சலுக்கு பதில் என்ன? இழப்பீடு அதற்கு தர முடியுமா?
    பிரதமர் கருத்து அலட்சியப்படுத்தப்பட்டதா?
    அதேபோல பிரதமர் கருத்தை இராசா அலட்சியப்படுத்தினாரா இல்லை.  7.11.2008இல் பிரதமருக்கு ராசா கடிதம் எழுதினார். 17.11.2008இல் பிரதமர் பதில் எழுதி இருக்கிறார். இதுபோல பல கடிதங்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமரின் ஒப்புதலை பெற்றே நடந்திருக்கிறது. இதில் தவறு எங்கே நடந்தது?
    கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் கூட இதுவரை எத்தனையோ அமைச்சர்கள் இருந்தார்கள்; ஆனால் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விசயத்தை ராஜாதான் கண்டுபிடித்தார். ராணுவத்தில் பயன்படுத்தாமல் கிடந்த அலைக்கற்றையை கண்டுபிடித்து மக்களுக்குக் கொடுத்தவர் ராஜா என்று சொல்லப்பட்டிருக்கிறதே. இதை எழுதியவர் ஒரு பார்ப்பனர். எனவே தோழர்களே உண்மையை பரப்புவதற்குத்தான் இந்த இயக்கம். காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப இதன் உண்மைகள் இன்னும் வெளிவர இருக்கின்றன. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை விளங்கும். புதிய நோக்கு, புதிய பார்வை மட்டுமல்ல புதிய தீர்வும் தேவை. - இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.
    கண்டவர் விண்டிலர்
    விண்டவர் கண்டிலர்
    இனிமேல் யாராவது 1,76,000 கோடி ஊழல் என்று சொன்னால், சொன்னவர் சட்டையைப் பிடிக்க வேண்டும். என்னய்யா, இந்தத் தொகையை யார் சொன்னது? எதனடிப்படையில் சொன்னது? என்று கேட்க வேண்டும். கடவுள் கதை மாதிரி ஆகிவிட்டதே! கண்டவர் விண்டிலர் - விண்டவர் கண்டிலர் என்பது போல. பார்த்தவர்கள் சொன்னதில்லை. சொன்னவர்கள் பார்த்ததில்லை. பெரியார் சிலை திறப்பு விழாவில் ஈரோட்டில் பேசினார் - ராவணனுக்கு 10 தலை வைத்தான். அதற்கப்புறம் ஏன் வரவில்லை. நாங்கள் வந்து விட்டோம்? கேள்வி கேட்க ஆரம்பித்தோம். கதையை நிறுத்தி விட்டான், என்று அய்யா சொன்னார். அதுபோல இனிமேல் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலும் உண்மையை வெளிப்படுத்த நாங்கள் வந்து விட்டோம், இனி விடமாட்டோம்! உண்மைகள் உறங்க விட மாட்டோம்.
    - சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்


    பலூன் உடையும்!
    ஏலம் விடவில்லை, ஏலம் விடவில்லை என்று சொன்னார்களே. இப்போது விட்ட ஏலம் என்ன ஆனது? ஏன் விலை போகவில்லை? உடனே இதற்கு என்ன எழுதுகிறார்கள்? கூடிப்பேசி முடிவு செய்து விட்டார்கள் என்கிறார்கள். இப்படி கூடிப் பேசுகிறவர்கள் ராஜா முன்பே ஏலம் விட்டிருந்தால் அப்போது கூடி பேசமாட்டார்களா? எவ்வளவுதான் தொகையை பெரிதாக்கி ஊதி ஊதி பலூனை பொய்யைக் கொண்டு நிரப்பினாலும் உண்மை, என்ற ஒரு சிறு ஊசியைக் கொண்டு குத்தினால், பலூன் உடைந்து போகும். இப்போது ஓய்வு பெற்றவர்களே ஒவ்வொருவராக குத்திக் கொண்டிருக்கிறார்கள். பலூன் காற்று இறங்கி விட்டதே!                                                  - சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக