வியாழன், 29 நவம்பர், 2012

ஆதிக்கச் சாதியினரைத் தூண்டிவிடுவதும், சாதியச் சக்திகளை ஒருங்கிணைப்பதும்

தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?.. திருமாவளவன் வேதனை!
Posted by: Sudha




 Thirumavalavan Condemns Attacks On Dalits சென்னை: தலித்துகள் என்னும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக பெரும்பான்மையாக உள்ள ஆதிக்கச் சாதியினரைத் தூண்டிவிடுவதும், சாதியச் சக்திகளை ஒருங்கிணைப்பதும் போன்ற நடவடிக்கைகளை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள எவராலும் அனுமதிக்க முடியாது. மேலும், தலித்துகளுக்கு எதிராக தலித் அல்லாதோர் இயக்கத்தை உருவாக்க முயற்சிப்பதும் தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்னும் கவலையை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கை:
தருமபுரி அருகே தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சாதிய வன்முறை வெறியாட்டத்தையடுத்து, கடலூர் மாவட்டம் வடலூர் அருகே காச்சாரப்பாளையம் என்னுமிடத்தில் 27-11-2012 அன்று தலித் மக்களின் மீது வெறித்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தலித் மக்களைத் தாக்கியதுடன் வழக்கம்போல குடிசைகளுக்கும் தீ வைத்து சாதிவெறிக் கும்பல் வெறியாட்டம் நடத்தியுள்ளது. இதில் 8 குடிசைகள் எரிந்துபோயுள்ளன. நால்வர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://tamil.oneindia.in/

காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தும் வழக்கம்போல காலந்தாழ்ந்தே அங்கே வந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட சாதிவெறியர்களை விரட்டியடிக்கவோ, கைது செய்யவோ முனைப்புக் காட்டாத காவல்துறையினர், குறிஞ்சிப்பாடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளை அச்சுறுத்தி விரட்டியுள்ளதோடு அவர்கள் மீதே வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் சேரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தீ வைத்த கும்பலைத் தப்ப வைக்கும் வகையில் மெத்தனமாகவே செயல்பட்டுள்ளனர். வன்முறையாளர்களைக் கைது செய்ய வலியுறுத்தி மறியல் செய்வோம் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்புச் செய்ததைத் தொடர்ந்து கண்துடைப்பாக தாக்குதலில் ஈடுபட்ட ஒருசிலரை காவல்துறை கைது செய்துள்ளது.

காச்சாரப்பாளையத்தில் நடந்துள்ள இந்த வன்முறைக்கு, தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்த பெண்களை தலித் இளைஞர்கள் கேலி செய்ததே காரணம் என்று வழக்கம்போல அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தை சாதிவெறியர்கள் திட்டமிட்டே செய்து வருகின்றனர்.
தம்முடைய ஆணாதிக்கப் போக்கிற்கும் சாதி வெறிக்கும் பெண்களைக் கேடயமாக அல்லது பகடைக் காயாக சாதி வெறியர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.

தருமபுரியில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து, கடலூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டத்திற்கென அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளை அப்பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் அரசுப் பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் ஒட்டியுள்ளனர்.
இதனை தலித் அல்லாதவர்கள் கிழித்தெறிந்ததனால் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் தட்டிக்கேட்டுள்ளனர். இதற்காகவே சாதிவெறியர்களை ஒருங்கிணைத்து 200க்கும் மேற்பட்டோர் கொண்ட சாதிவெறிக் கும்பல் உருட்டுக்கட்டை, அரிவாள், கத்தி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சேரிக்குள் புகுந்து தலித் மக்களைத் தாக்கி, குடிசைகளுக்குத் தீ வைத்துள்ளனர்.
தருமபுரி வன்முறையானாலும், காச்சாரப்பாளையம் வன்முறையானாலும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு சிலரின் திட்டமிட்ட தூண்டுதல்களால் விளைந்தவையே தவிர, தமது சாதிப் பெண்களைச் சீண்டினார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரமேயாகும். சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நலன்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் ஜனநாயகச் சக்திகள், தம்முடைய நலன்களுக்காகப் பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் ஆணாதிக்கப் போக்குள்ள சாதிவெறி சக்திகளின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பதுடன், அவர்களால் விளையவிருக்கும் தீங்குகளிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்கு முன்வரவேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

தலித்துகள் என்னும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக பெரும்பான்மையாக உள்ள ஆதிக்கச் சாதியினரைத் தூண்டிவிடுவதும், சாதியச் சக்திகளை ஒருங்கிணைப்பதும் போன்ற நடவடிக்கைகளை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள எவராலும் அனுமதிக்க முடியாது. மேலும், தலித்துகளுக்கு எதிராக தலித் அல்லாதோர் இயக்கத்தை உருவாக்க முயற்சிப்பதும் தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்னும் கவலையை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், இத்தகைய பிற்போக்குவாத சக்திகளை எதிர்க்கும் வகையில் தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பாட்டாளி வர்க்க நலன்களுக்காகப் போராடும் அரசியல் சக்திகளை ஒருங்கிணைத்து வரும் 3-12-2012 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக