வெள்ளி, 30 நவம்பர், 2012

சிவாஜிகணேசன் N.S,Krishnan முன்னால் உட்கார மாட்டார்


கலைவாணர் பிறந்த நாள்  இன்று (29.11.1908)
சிவாஜியை விடவும் அவன் வயிறு அதிகம் பசிக்கலாம்!

திறமையின் முழு உருவமாக இருந்தார் கலைவாணர்.  அதற்காக திறமை இருந்தால்தான் வாய்ப்பு என்று அவர் இருந்ததில்லை.  வறுமை இருந்தால் வாய்ப்பு கொடுத்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.
’’பார்த்த மாத்திரத்தில் அவரின் வறுமை புரிந்தது.   வேலை கேட்டு வந்தார்(அவர்தான் சதாசிவம்).  வேலை என்ன செய்வே?என்று கேட்டார் அண்ணன்.  சவுண்ட் டிராக் கவனிப்பேன் என்றார்.  அதுக்கு ஆள் இருக்கே என்றார் அண்ணன்.
’ஆர்ட் டைரக்டர் வேலை செய்வேன்’
‘ அதுக்கும் ஆள் இருக்கே’
‘மேனஜர்...’
‘இருக்காங்களே..’
’டான்ஸ்...’
’இருக்காங்களே..’
அந்த சமயம் சிவாஜிகணேசன் மனோகரா நாடகத்தில் நடித்து முடித்துவிட்டு வந்து அண்ணன் உட்கார்ந்திருந்த ஊஞ்சல் சங்கிலியை பிடித்துக்கொண்டு நின்றார்.  அண்ணன் முன்னால் அவர் உட்கார மாட்டார்.

கடைசியா சதாசிவம்,  ‘ஆக்ட் பண்ணுவேன்’ என்றார்.
ஏ!கணேசா உனக்கு போட்டிடா என்று சிரித்தார் அண்ணன்.
எத்தனை கஷ்ட நிலைமை இருந்தால் எந்த வேலைக்கும் வளைந்துகொடுக்க துணிகிறார் இவர் என்பதை உணர்ந்த அண்ணன்,   நீ தளபதி நாடகத்துல ஆக்ட் பண்ணுற என்று சொல்லிவிட்டார்.
 எதற்கும் ஒத்திகை பார்த்துவிடுவது நல்லது என்று முடிவெடுத்தார்.
தளபதி நாடகத்தில் ஒரு பஞ்சாயத்து தீர்ப்பு.  அங்கே உனக்கு ஒரே ஒரு டயலாக்தான்.   பெரிய பாதகம் பண்ணியவனை பார்த்து நீ சொல்ல வேண்டிய டயலாக் என்ன தெரியுமா?  இந்த கொடியவனை தூக்கிலிடுங்கள்..என்பதுதான் அந்த டயலாக்.
எங்கே நீ சொல்லு என்றார்.
இதுவரை தளபதி நாடகத்தில் அந்த கேரக்டரில் நடித்தவர் சிவாஜி. அவர் சிவந்த கண்களை உருட்டிக்கொண்டு  கோபத்தின் உச்சிக்கே சென்று கனீர் என்று அந்த டயலாக்கை பேசுவார்.
ஆனால் இவரோ,  பிஞ்சுப்போன மத்தளம் போல சொத்தென...இந்த கொடியவனை தூக்கிலுடுங்கள் என்று டயலாக் பேசினார்.
வெற்றிலைப்பெட்டியை வைத்துவிட்டு எழுந்து வந்த அண்ணன்,  முதலில் இவனை தூக்கிலிடுங்கள் என்றார்.(சிரித்துக்கொண்டுதான்)
மதுரம் அம்மா, இதையெல்லாம் கவனித்துவிட்டு,  காமராஜர் எல்லாம் வந்து இந்த நாடகத்தை பார்க்குறாங்க...அசிங்கப்படுத்திடுவான் போலிருக்கு. 
’ஆளை மாத்திடுங்க..’ என்றார்.
அண்ணன் உடனே,  ம்ஹூம்..டயலாக்கை மாத்திடுவோம்’ என்றார்.
உனக்கு வேற டயலாக் தர்றேன்.  ‘அம்மா பிச்சை’ இதுதான் நாளை நீ பேசப்போற டயலாக் என்று சொல்லிவிட்டு எழுந்து போனார்.
ஒத்திகை எதுவும் பார்க்கவில்லை.
இதையாவது ஒழுங்கா பேசுவானா என்று சந்தேகமாக கேட்டார் மதுரம் அம்மா.
இந்த டயலாக்கில் இவன் சொதப்பமாட்டான்.   வறுமையில் இருக்கும் அவனிடம் இருந்து அந்த வார்த்தை ஆக்கபூர்வமாக வரும் பாரு.  இவன் மட்டுமல்ல தமிழ்நாட்டுல இருக்குற எல்லோரும் இந்த டயலாக்கில் சொதப்ப மாட்டாங்க.  சரியா பேசுவாங்க.  எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த டயாக்கிற்கு ஆளாகியிருப்பாங்க என்று சொன்னார்.
இப்படிப்பட்ட முட்டாள ஏன் வச்சுக்கனும்....அவன் சிவாஜி மாதிரி நடிக்க மாட்டேங்கிறான் அவன ஏன் வச்சுக்கனும் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.
அதற்கு அண்ணன்,  ‘முட்டாளா இருக்கலாம்...ஆனா முட்டாளுக்கும் பசிக்குமே.  சிவாஜி மாதிரி நடிக்க தெரியாமல் இருக்கலாம்...ஆனா சிவாஜியை விடவும் அவன் வயிறு அதிகம் பசிக்கலாம் இல்லையா..?’என்று கேட்டார்.
அவருக்கு வேலை கம்பெனியில் உறுதியாகிவிட்டது.   கம்பெனியில் சேர்ந்துவிட்டால் போதும் அன்று முதல் அவருக்கு என்ன தேவையோ அதையெல்லாம் கிடைத்துவிடும்.  மாதம் மாதம் வீட்டுக்கு அனுப்ப சம்பளமும் கிடைத்துவிடும்.
அண்ணன் அண்ணன்தான் அவர் மனசு யாருக்கு வரும்’’என்கிறார் வில்லிசை வேந்தர் சுப்புஆறுமுகம்.

........கதிரவன் எழுதிய  ’வள்ளல் என்.எஸ்.கே.’ நூலில் இருந்து!
வள்ளல் என்.எஸ்.கே.
வெளியீடு : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
105,ராயப்பேட்டை,சென்னை-14.
044 - 43993000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக