வெள்ளி, 17 ஜூலை, 2020

பிரதமர் இந்திரா காந்தி மறைவு! .இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 8

பிரதமர் இந்திரா காந்தி  (November 19, 1917 - October 31, 1984  -

(அமிர்தலிங்கம் August 26, 1927 - July 13, 1989).
திரு அ .அமிர்தலிங்கம் :அப்போதே நாம் சர்வகட்சிக் கூட்டத்திலிருந்து வெளி நடப்புச் செய்யப் போவதாக இந்தியாவிற்கு தெரிவித்தோம். தொடர்ந்து  முயற்சி செய்யுமாறு திரு. பார்த்தசாரதி கேட்டுக் கொண்டபடி நாம் அங்கு தொடர்ந்தோம். தீர்வுகாண வேறு திட்டங்களைத் திருமதி காந்தி யோசித்துக் கொண்டிருந்த போது பஞ்சாப் பிரச்சனை வெடித்தது. திருமதி இந்திரா காந்தியின் உயிரைக் குடித்தது. விதிகெட்ட தமிழன் கதியற்றுப் போனான். இந்தப் பயங்கரப்படுகொலை நடந்திராவிட்டால் வரலாறே வேறுவிதமாக இருந்திருக்கும்.
அன்னை இந்திராவின் மரணச் சடங்கின் அடுத்த நாளே திரு. ராஜீவ் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
எனது அன்னை உங்கள் பிரச்சனையில் என்ன கொள்கையைக் கொண்டிருந்தாரோ அதையே நானும் பின்பற்றுவேன், உங்களைக் கைவிடமாட்டேன்" என்று உறுதி கூறினார். சர்வ கட்சிக் கூட்டத்தில் தொடர்ந்து பங்கு பெறுமாறு அவரும் திரு. பார்த்தசாரதியும் கேட்டுக் கொண்டபடி தொடர்ந்து கலந்து கொண்டோம். நாம் ஏற்கமுடியாத திட் டத்தை திரு. ஜயவர்த்தனா முன் வைத்தபோது அதை நிராகரித்தோம். சர்வகட்சிக் கூட்டமும் முடிவுக்கு வந்தது. எமது முயற்சிகளை முதலிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தியப் பொதுத் தேர்தல்:
பிரதமர் பதவியை ஏற்றவுடன் திரு. ராஜீவ் காந்தி மக்கள் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகப் பொதுத் தேர்தல் நடத்தினார். அமோக வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்த சில நாட்களில் மீண்டும் பிரதமரைச் சந்தித்தோம். எமது விடையத்தில் இந்திய அரசாங்கதின் கொள்கையில் மாற்றம் இருக்க மாட்டாது என்று உறுதியளித்ததோடு ஆக்கப்பூர்வமான சில யோசனைகளையும் திரு. ராஜீவ் காந்தி தெரிவித்தார். அச்சந்திப்பைத் தொடர்ந்து தமிழ் இன விடுதலைக்காக உழைக்கும் எல்லா இயக்கங்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம். ஒரு இயக்கம் தவிர ஏனைய இயக்கங்களை 1985 பிப்ரவரி 28-ஆம் திகதி ஓர் இணைப்புக் குழுவில் ஒன்றுபடுத்திச் சேராதிருந்த இயக்கத்திற்கு எல்லோரும் கையொப்பமிட்டு ஒரு வேண்டுகோள் அனுப்பினோம். அந்த முயற்சி தோல்வி கண்டது
மாத்திரமின்றி இணைந்த இயக்கங்களிடையிலும் பிணக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எமது இயக்கங்கள் எல்லாம் ஒன்று பட்டிருந்தால் வரலாறு வேறுவிதமாக அமைந்திருக்கலாம். தமிழ் இனம் என்றுதான் ஒன்று பட்டிருந்தது.

இந்த நேரத்தில் இந்திய அரசின் வெளிநாட்டு அமைச்சி லும், கொள்கையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. திரு.ரொமேஷ் பண்டாரி வெளிநாட்டுச் செயலாளரானார். 1985 மே மாதத்தில் திரு. ராஜீவ் காந்தியை நாம் மீண்டும் சந்தித்தபோது அம்மாற்றம் தெரிந்தது. எமது விடயத்தில் இந்திய அரசின் மூன்று அடிப்படை கொள்கைகளை அவர் விளக்கிக் கூறினார்.
1.      இராணுவத் தலையீடு சாத்தியமற்றது;
2.       நாட்டுப் பிரிவினையை இந்தியா ஏற்றுக்
கொள்ளாது;
3.      இந்தியாவில் ஒரு மாநிலத்தின் அதிகாரத்திற்கு கூடிய
அதிகாரத்தை இலங்கையில் தமிழ் மாநிலத்திற்கு
வழங்குமாறு இந்தியா கோரமுடியாது.


என்பவையே அம்மூன்று கொள்கைகளாகும். இந்த கொள்கைகளின் அடிப்படையில் கொழும்பு சென்ற திரு. ரொமேஷ் பண்டாரி பேச்சு வார்த்தை நடத்தினார். வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும்படி இந்தியா வற்புறுத்த மாட்டாது என்று இலங்கை அரசுக்கு கூறினார். எமக்கு அறிவித்தல் ஏதுமின்றி போராளிக் குழுக்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். போர் நிறுத்தத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டது. இலங்கையிலேயே அமைந்த ஓர் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு போராளி இயக்கங்களிடமிருந்து சில தமிழருடைய பெயர்கள் பெறப்பட்டன. இதன் பின்தான் இவ்விடயங்கள் எமக்குத் தெரிவிக்கப்பட்டன. போர் நிறுத்தம் முறையாக நடைபெற ஓர் வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழு வேண்டும் என்று கேட்டோம். இந்தியக் குழுவை அனுப்ப முடியாவிட்டால் சாவதேசச் செஞ்சிலுவை சங்கம் அல்லது சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற நிறுவனத்தின் பிரதிநிதிகளாவது கண்காணிப்பு சபையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். அது நடைபெறவில்லை. ஓர் உள்நாட்டுக் குழுவே போராளிகள் கூறிய பட்டியலில் இருந்து மூன்று தமிழர்களையும் சேர்த்து நியமித்தது.

திம்பு மகாநாடு:
 பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில், முதன் முறையாக ஐந்து விடுதலைப் போராளிகளின் இயக்கப் பிரதிநிதிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரதிநிதிகளும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளோடு சமாதனப்பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, 1985 ஜுலையில் மகாநாடு கூட்டப்பெற்றது. 1984 டிசெம்பரில் கொழும்பில், சர்வகட்சி மகாநாட்டில் இலங்கை அரசு முன்வைத்து, தமிழர் விடுதலைக் கூட்டணியால் நிராகரிக்கப்பட்ட திட்டத்திலும் குறைந்த ஓர் திட்டத்தை இலங்கை அரசின் பிரதிநிதிகள், திம்பு மாநாட்டில் சமர்ப்பித்தனர்.

தமிழ் குழுக்கள் அத்தனையும் ஒரு முகமாக நாலு அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்து இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு அவற்றின் அடிப்படையிலேயே அமைய வேண்டுமென்று கூறினோம்: (1) தமிழ் மக்களை ஓர் தனித்தேசீய இனமாக அங்கீகரித்தல். (2) தமிழ் இனத்தின் தாயகத்தை அங்கீகரித்தல். (3) தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுதல். (4) இலங்கை வாழ் தமிழ் மக்கள் எல்லோருக்கும் குடியுரிமை வழங்குதல் இவையே நான்கு அடிப்படைக்கொள்கைகளுமாகும். 1951-ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் முதலாவது மகாநாடு திருகோணமலையில் நடைபெற்றபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதே அடிப்படையில் அமைந்ததை நாம் அங்கு சுட்டிக்காட்டி இவற்றை ஏற்ற ஓர் திட்டத்தை இலங்கை அரசுமுன் வைக்க வேண்டுமென்று வற்புறுத்தினோம்....


ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை திம்புவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, 16 ந்திகதி அதிகாலை வவுனியாவில், சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையானவர்களைப் படுகொலை செய்த செய்தி பி.பி.சி. வானொலி மூலம் எமக்குக் கிடைத்தது. அத்தனை தமிழ் பிரதிநிதிகளும் மகாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தோம். ஆறு அமைப்புகளின் பிரதி நிதிகளும் யையொப்பமிட்டு எமது மக்கள் படுகொலை செய்யப்படும் போது அந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளோடு நாம் பேச முடியாதென்று அறிவித்தோம். சமாதானத் தீர்வுக்கான இரண்டாவது முயற்சியான திம்பு மகாநாடு இத்துடன் முடிவுக்கு வந்தது.  ( தொடரும் )




ஒப்பந்த வரலாறு .. 1
 ஒப்பந்த வரலாறு 2  
 ஒப்பந்த வரலாறு 3
 ஒப்பந்த வரலாறு 4 

ஒப்பந்த வரலாறு 5

ஒப்பந்த வரலாறு 6
ஒப்பந்த வரலாறு 7


பத்மநாபா கொலை.. புலிகளை தண்டித்திருந்தால் ராஜீவ் காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்?

ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது;.. சுமந்திரன் எம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக