திங்கள், 16 டிசம்பர், 2013

ஸ்பெயினில் 500 கோடி ரூபாயில் லக்ஷ்மி மிட்டல் மகளின் ஆடம்பர திருமணம்! இதுவல்லவோ தேசப்பற்று


இந்தியத் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலின் மகள் திருமணம் இந்திய மதிப்பில் சுமார் 500கோடி ரூபாய் செலவில் ஸ்பெயினில் நடத்தப்பட்டது. இதன் மூலம் உலகளவில் நடத்தப்பட்ட ஆடம்பர திருமணங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது இத்திருமணம்.

எஃகு இரும்புத் தொழிலில் முன்னணி வகித்து வரும் இந்தியரான லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். உலகப் பணக்காரர்களில் முண்ணனியில் இருக்கும் இவரது மகள் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு 46 மில்லியன் யூரோ செலவில் நடந்தது. உலகமே வியந்து பார்த்த அத்திருமணத்தைத் தொடர்ந்து, தற்போது அவரது சகோதரர் பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ருஷ்டி மிட்டல் திருமணத்தை அதைவிட படு விமர்சையாக நடத்தி முடித்துள்ளார்.


பிரமோத் மிட்டலின் மகளான 26 வயது ஸ்ருஷ்டி மிட்டல் திருமணம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இத்திருமணத்திற்கு இந்திய மதிப்பில் 500 கோடி செலவழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்சிலோனா நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் விழாக்கோலம் பூண்டு மூன்று நாள் திருமண கோலாகலங்கள் அரங்கேறின. திருமண விருந்து நிகழ்ச்சியை மிச்சலின் நட்சத்திர சமையல் கலைஞர் செர்கி அரோலா பொறுப்பேற்றார்.

இந்தியாவிலிருந்தும், தாய்லாந்திலிருந்தும் 200 சமையல்காரர்கள் இந்த விழாவிற்காக ஸ்பெயினுக்கு வரவழைக்கப்பட்டனர். ஆறு அடுக்கு கொண்ட 60 கிலோ எடையுடைய திருமண கேக் இந்தத் தம்பதியரால் வெட்டப்பட்டது. திருமண நிகழ்ச்சிகளில் ஒளி அலங்காரங்கள் பிரமிப்பூட்டும் விதமாக இருந்தன.
திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் வானத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டனவாம். இந்தத் திருமணத்திற்கான மொத்த செலவுகள் 60 மில்லியன் யூரோக்களைத் தாண்டியுள்ளதாக ஸ்பெயின் நாட்டுப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
இதன் இந்திய மதிப்பு சுமார் 512 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. ஸ்பெயின் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள தகவல்கள் உறுதி செய்யப் பட்டால், ஃபோர்ப்ஸ் கணக்கீட்டின்படி உலகளவில் நடைபெற்ற ஆடம்பரத் திருமணங்களில் இது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

இதற்கு முன்னர், கடந்த 1981ம் ஆண்டு நடைபெற்ற அபுதாபியின் ஆட்சியாளரான முகமது பின் சயித் அல்நஹ்யான்-இளவரசி சலாமா திருமணமே 76.25 மில்லியன் யூரோ செலவிடப்பட்டு முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.
அதே ஆண்டு நடைபெற்ற வேல்ஸ் இளவரசர் திருமணத்திற்கு 53 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக