திங்கள், 16 டிசம்பர், 2013

இந்திய ராஜதந்திரி தேவயானி நியூயார்க்கில் கைது: நாளைக்கு டில்லியில் யார் கைது?


டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராஜதந்திரிகளின் மனைவிகள், டில்லி இன்டர்நேஷனல் பள்ளிகளில் ஆசிரியைகளாக பணிபுரிகிறார்களே… அவர்களில் யாரிடமாவது இந்திய work permit  கிடையாது.சீனியர் இந்திய ராஜதந்திரி 39 வயதான தேவயானி கொப்ராகேட் நியூயார்க் நகர வீதியில் வைத்து கைது செய்யப்பட்டு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம், இருவித சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்களில் ஒருவிதமாக கூறப்படுகிறது. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சிலர் மத்தியில் வேறு விதமாக கூறப்படுகிறது.

“இந்த கைது, எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, இது தொடர்பாக அமெரிக்க ராஜாங்க துறையுடன் தொடர்பில் உள்ளார்கள்.
அதே நேரத்தில், அமெரிக்க இந்தியர்களில் ஒரு பகுதியினர் நடத்தும் மீடியாக்கள் இந்த சம்பவம் தொடர்பாக வேறு விதமான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.
“இந்திய சீனியர் ராஜதந்திரி ஒருவர், விசா மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது, இந்தியர்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவயானியை இந்திய தூதரகப் பணியில் இருந்து உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்” என்று அமெரிக்காவில் வெளியாகும் சில இந்திய மீடியாக்களில் கூறப்படுகிறது.
தேவயானி கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவல் டில்லி சவுத் பிளாக்கில் உள்ள வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, இந்தியாவின் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங், “தேவயானியின் கைது சம்பவம் இந்தியாவால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது” என்று மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்திய ராஜதந்திரி கைது செய்யப்பட்ட காரணம், அரசியல் காரணமல்ல. அமெரிக்காவில், கிரிமினல் குற்றமாக கருதப்படும் விசா மோசடி, மற்றும் தவறான தகவல் தெரிவிப்பது ஆகியவை!
இந்த விவகாரத்திலுள்ள மற்றொரு விஷயம், தேவயானிக்கு எதிரான இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்படுவதற்கான உத்தரவிட்ட நியூயார்க் தெற்கு மாவட்ட அட்டர்னியும், ஒரு அமெரிக்க இந்தியரான பெண்தான். ப்ரீத் பராரா என்பது அவருடைய பெயர்.
அத்துடன், தேவயானி மீது புகார் கொடுத்தவரும் ஒரு இந்திய பெண்தான் (இவர் இந்தியப் பிரஜை). அவர் பெயர், சங்கீதா ரிச்சார்ட்.
தேவயானி கொப்ராகேட், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கு பொறுப்பான ராஜதந்திரி. வயது குறைவாக இருந்தாலும் (39 வயது), இந்திய வெளியுறவு சேவையில் இந்தப் பதவி, சீனியர் ராஜதந்திரி என்ற தரத்தில் உள்ளது.
இரு குழந்தைகளுக்கு தாயான இவர், நியூயார்க்கில் உள்ள தமது வீட்டில் வீட்டுப் பணிகளை கவனிக்க இந்தியாவில் இருந்து தருவித்த பணியாளர்தான், சங்கீதா. A-3 விசாவில் இந்திய பணியாளரை தருவிக்கும் விண்ணப்பத்தில், பணியாளருக்கு மாதச் சம்பளம் 4,500 டாலர் கொடுக்கப்படும் என் குறிக்கப்பட்டு, விசா பெறப்பட்டது.
அத்துடன், தேவயானிக்கும், சங்கீதாவுக்கும் இடையிலான முதல் ஒப்பந்தத்திலும் அந்த 4,500 டாலர் தொகையே குறிப்பிடப்பட்டது. (வீட்டுப் பணிக்கு அந்தளவு சம்பளம் யாரும் கொடுக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்)
விசா கிடைத்தபின், சங்கீதாவுக்கு மாதச் சம்பளம் 30,000 இந்திய ரூபா என பிக்ஸ் பண்ணிக் கொண்டார்கள் (அநேகமாக தொடக்க டீலே அதுவாகத்தான் இருக்கலாம். விசா எடுப்பதற்காக 4,500 டாலர், நிஜ ஊதியம் ரூபா 30,000 என்று பேசியிருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது)
இந்த மாற்றத்தில், 4,500 டாலர் மாத ஊதியம், 30,000 ரூபாவாக மாறியதில், அப்போதைய பண மதிப்பில் 573.07 டாலராக சுருங்கியது.
ஆரம்ப ஒப்பந்தத்தில், வாரம் 40 மணி நேர வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சங்கீதா, தேவயானி வீட்டில் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையும், அதன்பின் மாலை 6.30 மணியில் இருந்து, இரவு 8.30 மணி வரை பணிபுரிய வேண்டும். ஆனால், அதைவிட அதிக நேரம் பணிபுரிந்ததாகவும், அப்படி பார்த்தால் சங்கீதா பணி புரிந்ததற்கு மணிக்கு $3.31 ஊதியமே கிடைத்தது என்பதும், புகாரில் கூறப்பட்டது.
இந்த தொகை அமெரிக்க குறைந்தபட்ச ஊதிய தொகையைவிட குறைவானது.
நவம்பர் 2012-ம் ஆண்டில் இருந்து பணிபுரிந்த சங்கீதா, ஜூன் 2013-க்கு பிறகு வேலைக்கு வரவில்லை. விவகாரம் சட்டத்துறைக்கு சென்றதில், தேவயானியை கைது செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நியூயார்க்கில் தனது இரு குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக அவர் சென்றபோது, நியூயார்க் போலீஸால் கைது செய்யப்பட்டு, கைகளில் விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது, இரண்டரை லட்சம் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதில் மற்றொரு தமாஷ் என்னவென்றால், கடந்த வாரம் இந்திய வெளியுறவு செயலர் சிங் வாஷிங்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டபோது, அவருடன் அமெரிக்க டாப் அதிகாரிகளை சந்தித்த இந்திய டீமில், தேவயானியும் இருந்தார். இவர்கள், அமெரிக்க ராஜாங்க செயலர் ஜான் கெரி, துணை செயலர் வில்லியம் பர்ன்ஸ், மற்றும் ராஜாங்க அமைச்சு அதிகாரிகளை சந்தித்தனர்.
அந்த சந்திப்பு நடந்து ஒரு வாரத்துக்குள், தேவயானி நியூயார்க் வீதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் மற்றொரு விவகாரம் என்னவென்றால், இந்த கைது விஷயத்தை சென்சேஷன் இஷ்யூ ஆக்குவதற்காக சில மீடியாக்கள், தேவயானி கையில் ஒயின் கிளாஸூடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டன. மற்றைய மீடியாக்களும் அனுப்பி வைக்கப்பட்டன. எமக்கும் வந்து சேர்ந்தது. (நாங்கள் அந்த போட்டோக்களை வெளியிடுவதாக உத்தேசமில்லை)
அதில் ஒரு போட்டோ, இந்திய தூதரக பார்ட்டியில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்திய பெண் ராஜதந்திரி ஒயின் குடிப்பது ஒன்றும் பெரிய விவகாரம் கிடையாது. இந்த போட்டோக்களை வைத்து சாயம் பூசுவது, மோசமான சென்சேஷனல் ஜேர்னலிஸம்.
தேவயானி மீது பதிவாகிய வழக்கில் இரு குற்றப்பிரிவுகள் உள்ளன. ஒன்று, visa fraud. மற்றையது, making false statements. குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாவது குற்றத்துக்கு 10 ஆண்டுகள், இரண்டாவது குற்றத்துக்கு 5 ஆண்டுகள் அதிகபட்ச சிறைத்தண்டனை கொடுக்கப்படலாம்.
இந்திய வெளியுறவு அமைச்சு, இந்த விவகாரத்தில் அமெரிக்க முடிவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே நிலைப்பாட்டையே தொடருவார்கள் என டில்லி வெளியுறவு வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்களிலுள்ள ராஜதந்திரிகள் சிலருடன் இது பற்றி பேசினோம். பெயர் வெளியிடப்படுவதை விரும்பாத அவர்கள், தமது தரப்பு நியாயங்களை தெரிவித்தார்கள்.
“தேவயானி கொப்ராகேட் இந்திய தூதரகத்தில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் அடிப்படை மாத ஊதியமே, 4,000 டாலர்தான். இதில் அவர் எப்படி மாதம் 4,500 டாலர் தனது பணியாளருக்கு கொடுக்க முடியும்?” என்பது ஒரு கேள்வி (A-3 விசா எடுப்பதற்கு அதிக ஊதியம் காட்டுவது என்பது அமெரிக்காவில் ஊரறிந்த ரகசியம்)
அமெரிக்காவில் உள்ள இந்திய ராஜதந்திரிகள் கூறும் மற்றொரு விவகாரம் சுவாரசியமானது. “டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராஜதந்திரிகளின் மனைவிகள், டில்லி இன்டர்நேஷனல் பள்ளிகளில் ஆசிரியைகளாக பணிபுரிகிறார்களே… அவர்களில் யாரிடமாவது இந்திய work permit இருக்கிறதா?
யாரிடமும் கிடையாது.
ஒருவித புரிந்துணர்வு அடிப்படையில் நாம் அதை கண்டுகொள்வதில்லை. மத்திய வெளியுறவுத்துறை டில்லியின் கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கினால் என்னாகும் தெரியுமா?” என்பதே அந்த விவகாரம்.
டில்லியில் அமெரிக்க ராஜதந்திரி ஒருவரது மனைவி கைது என்று செய்தி வருமோ!
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக