hindutamil.in -டி.ஜி.ரகுபதி : கோவை: 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கோவையில் செல்வப்பெருந்தகை உறுதிபட தெரிவித்தார்.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மே 2) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமீபத்தில் வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது கருத்துக் கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. மக்கள் முடிவு செய்து விட்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டனி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம் என்பதால் அதைவிட குறைந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளதால் கருத்து திணிப்பு என்று சொல்லி வருகிறோம். தவெக குறித்து தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் பேசுவோம்.
திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான பணி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்துள்ளதன் பயனாக அந்த பணி வீண் போகாது.
யார்? ஆள வேண்டும். யார்? ஆளக்கூடாது என்று மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தல் முடியும் போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் ஏற்றி விடுவார்கள். நான் காங்கிரஸ் தலைவராக இல்லாதபோது கூட்டனியில் 25 தொகுதிகள் முதலில் வாங்கினார்கள். ஆனால், தற்போது 28 தொகுதிகள் மற்றும் ஒரு எம்.பி சீட் கூடுதலாக வாங்கி உள்ளோம். இது அழிவு பாதையா? நான் கட்சியில் தலைமை பொறுப்புக்கு வருவதற்கு முன்பு 100 சதவீதம் ஸ்ட்ரைக் ரேட் நாடாளுமன்றத்தில் இல்லை. இப்போது புதுச்சேரி உட்பட 10-க்கு 10 என 100 சதவீதம் மக்களவையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் தமிழக காங்கிரஸ் தலைமை குறித்து ஜோதிமணி எம்.பி. தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, ‘‘ஒரு சிலர் மனக்குமுரலோடு, நேர்மை இல்லாமல் போற போக்கில் பேசுவதற்கு நான் பதில் சொல்வதில்லை. ராகுல் காந்தி பிரச்சாரக் கூட்டத்தில் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசினேன். எனக்கு காதில் சரியாக விழவில்லை. மேலும், நான் அரசு பள்ளியில் படித்தவன். இந்த அளவுக்கு பேசியதற்காக அதனை பாராட்ட வேண்டும். நான் என்ன கான்வென்டில் படித்தேனா? சிபிஎஸ்இ பள்ளியில் படித்தேனா?. அரசுப் பள்ளியில் படித்த என்னை விமர்சனம் செய்வது என்றால் அவர்கள் மன நோயாளி என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக