ilakkiyainfo.com : வெளிநாட்டு வாழ் இந்திய குடிமக்கள் கார்ட் என்பது என்ன? அதனை எப்படி பெற்றுக்கொள்வது? அதற்கான ஆவணங்கள் என்ன? என்பது போன்ற விடயங்கள் கேள்வி பதில் வடிவில் தரப்படுகிறது.
இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் வெளிநாட்டு வாழ் இந்திய பிரஜைகள் அட்டையை பெற்றுக் கொள்வதற்கான புதிய நடைமுறைகள் தொடர்பில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் வெளிநாட்டு வாழ் இந்திய பிரஜைகள் அட்டை என்பது என்ன? அதனை எப்படி பெற்றுக்கொள்வது? அதற்கான ஆவணங்கள் என்ன? என்பது போன்ற விடயங்கள் கேள்வி பதில் வடிவில் தரப்படுகிறது.
கேள்வி : வெளிநாடுவாழ் இந்திய பிரஜைகள் அட்டை (OCI) என்றால் என்ன?
பதில் வெளிநாடுவாழ் இந்திய பிரஜைகள் என்பதே ஒ.சி.ஐ. என்பதன் அர்த்தமாகும். ஏனைய நாடுகளின் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நீண்டகால வதிவிட அந்தஸ்த்தின் ஒரு வடிவமே இது.
ஆனால் ஒ.சி.ஐ. ஒரு முழுமையான இந்திய குடியுரிமை அல்ல. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டு பிரஜாவுரிமையைக் கொண்டவர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழ்வதற்கும், பணியாற்றுவதற்கும் பயணிப்பதற்கும் அனுமதிக்கும் அதேவேளை வதிவிட முன்னுரிமைகளுடனான வாழ் நாள் விசா போன்ற ஒரு முறைமையே இதுவாகும்.
கேள்வி : வெளிநாடுவாழ் இந்திய பிரஜைகள் அட்டை மூலமான முக்கிய நன்மைகள் என்ன?
பதில் இந்தியாவுக்கு பயணிப்பதற்கான வாழ்நாள் விசாவாக இது கருதப்படுகிறது. இதன் மூலம் பல முறை பயணிக்க முடியும்.
இந்தியாவில் பதிவுகளுமின்றி நீண்டகாலத்துக்கு தங்குவதற்கான அனுமதி கிடைக்கும்.
கல்வி (பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுமதி மற்றும் கட்டணங்கள்)
நிதி முதலீடுகள் ( சில வரையறைகளுடன் )
இந்தியாவில் சொத்துகளுக்கு உரித்துடையவர்களாகுவதற்கான தகுதி ( விவசாய மற்றும் பெருந்தோட்ட நிலங்கள் தவிர்ந்த) ஆகிய நன்மைகள் காணப்படுகின்றன.
கேள்வி : வெளிநாடுவாழ் இந்திய பிரஜைகள் அட்டையை பெறுவதற்கான தகுதிகள் என்ன?
பதில் 1950 ஜனவரி 26 அன்றோ அதற்கு பின்னரோ இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல்,
அக்காலத்தில் இந்திய பிரஜாவுரிமையை பெறுவதற்கான தகுதியை கொண்டவராக இருந்திருந்தல்,
பிற்காலத்தில் இந்தியாவுக்கு சொந்தமான பிராந்தியத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் அல்லது அவ்வாறான தகுதிகளை உடைய ஒருவரின் பிள்ளை, பேரப்பிள்ளை அல்லது கொள்ளுப்பேரனாக இருத்தல்,
OCI அட்டை உடைய ஒருவரது பிள்ளையாக இருத்தல்,
இந்திய பிரஜை அல்லது OCI அட்டை உடைய ஒருவரின் வாழ்க்கை துணையாக இருப்பின் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது).
கேள்வி : இதனை பெற எவவாறு விண்ணப்பிப்பது?
பதில் https://ociservices.gov.in என்ற முகவரிக்கு பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும்.
கேள்வி : இதன் விதிவிலக்கு என்ன?
பதில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் பிரஜைகள் இதற்கான தகுதியை பெறமாட்டார்கள்
கேள்வி : இலங்கையில் உள்ள் இந்திய வம்சாவளி தமிழர்கள் சமர்ப்பிக்க வேண்டிய முந்தைய ஆவணங்கள் என்ன?
பதில் இந்திய பூர்வீகத்தை நிரூபிப்பதற்காக விண்ணப்பதாரிகள் கடவுச்சீட்டு, வதிவிடச் சான்று மற்றும் இந்திய பிரஜாவுரிமையை நிரூபிப்பதற்கான செல்லுபடியாகும் பிற ஆவணங்கள். இதற்கான துணை ஆவணங்கள் இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவேண்டும்.
பல்வேறு காரணங்களால் பெரும்பாலான இலங்கைவாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அவ்வாறான இந்திய ஆவணங்களை பெறுவதற்கு சிக்கல்களை எதிர்கொண்டனர்
கேள்வி : புதிய அறிவித்தலின் பின்னர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?
பதில் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு வெளிநாடுவாழ் இந்திய பிரஜைகள் அட்டையினை (OCI) வழங்குவதற்காக அவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் பொருட்டு பின்வரும் ஆவணங்கள் இனிமேல் பரிசீலிக்கப்படும்.
விண்ணப்பதாரியின் மூதாதையர்களோ அல்லது விண்ணப்பதாரியோ இந்திய வம்சாவளி தமிழர்கள் என்பதை அத்தாட்சிப்படுத்தி இலங்கை அரசாங்கத்தின் இந்திய வம்சாவளி பிரஜைகளை பதிவு செய்யும் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஒரு பதிவுச் சான்றிதழ்,
இந்தியா-இலங்கை கடவுச் சீட்டினை ஆதாரமாக கொண்டு வழங்கப்பட்ட ஒரு சான்றிதழ் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கண்டியில் உள்ள துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றில் பராமரிக்கப்படும் பதிவுகள் மூலமாக விண்ணப்பதாரியோ அல்லது அவரது மூதாதையரோ இந்திய வம்சாவழி தமிழர் என்பதை அத்தாட்சிப்படுத்தல்.
கேள்வி : புதிய அறிவிப்பின் OCI அட்டை பெறுவதற்கான தகுதிகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதா? அவை என்ன?
பதில் சிறுபராய திருமணங்கள் காரணமாக ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த பலரும் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் சிலரும் துணை ஆவணங்களை கொண்டிருந்தபோதும் ஓ.சி.ஐ. அட்டையினைப் பெறுவதற்கான தகுதியினை முன்னர் கொண்டிருக்கவில்லை. முன்னைய அட்டை வழிமுறைகளின் பிரகாரம் நான்காம் தலைமுறையினரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இலங்கையில் விண்ணப்பிப்பதற்கான தகுதியினைக் கொண்டிருந்தார்கள்.
கோபியோ போன்ற பல்வேறு இந்திய புலம்பெயர் அமைப்புகளது கோரிக்கைகளின் அடிப்படையில் OCI அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் ஆறாம் தலைமுறைவரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.
Post Views: 48
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக