சனி, 28 டிசம்பர், 2024

கீழ்வெண்மணி! .. உண்மையில் நடந்தது என்ன? தயவு தாட்சண்யம் இல்லாத ஒரு போஸ்ட் மார்ட்டம்

சுமதி விஜயகுமார்  :  25 டிசம்பர் தமிழகத்தின் கரும்பக்கங்களில் ஒன்றை குறிக்கும் நாள். அந்த நாள் வரும் போதெல்லாம் 44 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான அஞ்சலியை செலுத்திவிட்டு மறக்காமல் பெரியாரையும் அண்ணாவையும் குறை கூறாமல் கடப்பதேயில்லை.
கீழ்வெண்மணி பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்கு சொல்ல வேண்டுமேயானால். தஞ்சை மாவட்டத்தில் 1960களில் தலைவிரித்து ஆடிய பண்ணையார்கள் ராஜ்யத்தில் அரைப்படி நெல் அதிகம் கேட்டதன் விளைவாக, ஒரு குடிசையில் தஞ்சம் புகுந்த 44 பேரை தீயிட்டு எரித்து கொன்ற சம்பவம். அதில் கொல்லப்பட்டவர்கள் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள். இப்படி ஒரு கொடூர நிகழ்வை எவர் ஒருவரும் நியாயப்படுத்தி பேசிவிடவே முடியாது.
பண்ணையாரிடம் வேலைபார்த்த விவசாயிகள் பட்ட துயர் சொல்லி மாளாது.
விவசாயிகளிடம் விழுப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை போராட்டத்திற்கு தயார் செய்ததில் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அவர்களின் பங்களிப்பை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவே முடியாது. திராவிட அரசியல்/ சித்தாந்தந்தை எதிர்ப்பவர்கள் ஒவ்வொரு முறை கீழ்வெண்மணி பற்றி பேசும் பொழுதும், பெரியாருக்கு ஜாதி பாசம் அதனால் தான் கீழ்வெண்மணி பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றசாட்டு வைப்பார்கள். ஏனென்றால் அந்த படுகொலைக்கு தலைமை தங்கியது கோபால கிருஷ்ணா 'நாயுடு'. அதை போன்ற அவதூறுகளை எல்லாம் நேர்மையான கம்யூனிஸ்ட்களே உடைத்திருக்கிறார்கள்.


தற்பொழுது தோழர் தியாகு கீழ்வெண்மணி குறித்த பேட்டியில் அதற்கு விடை அளித்துள்ளார். ஆனாலும் பெரியாரும் அண்ணாவும் சரியான முறையில் அந்த கொடூர நிகழ்வை கையாளவில்லை என்று வருந்தினார். அவர் அப்படி வருந்தியத்தில் பெரும் பிழை இருப்பதாக தெரியவில்லை. கம்யூனிஸ்ட்கள் அதை எண்ணி வருந்தவில்லை என்றால் தான் தவறு. ஆனால் உண்மையில் திராவிட கழகமோ பெரியாரோ அண்ணாவோ அந்த படுகொலையை ஒட்டி எதுவுமே செய்யவில்லையா?
இந்தியாவில் கம்யூனிஸ்ட்களுக்கும் திராவிட மற்றும் அம்பேத்கரிய இயக்கங்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் முதலில் வர்க்க வேறுபாட்டை ஒழிக்க நினைக்கிறார்கள். அதனால் தான் EWS கூட அவர்களுக்கு நியாயமானதாக படுகிறது. பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்களுக்கு ஜாதி ஒழிப்பே முதன்மையானது. ஜாதி ஒழிந்த பின்னர் வர்க்க வேறுபாட்டை ஒழிப்பை முன்னெடுக்கலாம் என்பதே பெரியாரின் கருத்து.
கம்யூனிஸ்ட்கள் கீழ்வெண்மணி பகுதிகளில் சங்கம் வைத்திருந்த காலகட்டங்களில் திராவிட விவசாயத் தொழிற் சங்கத்தை திராவிட இயக்க தோழர்கள் நடத்தி வந்தார்கள். இரண்டு சங்கங்களுமே ஒடுக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் பக்கம் நின்று செயல்பட்டாலும் இரண்டின் செயல் பாடுகளிலும் வேறுபாடுகள் இருந்தது. அதில் ஒன்று போராட்ட முறை. பெரியாரிய இயக்கங்கள் பொதுவாகவே வன்முறையிலோ ஆயுத தாக்குதலிலோ ஈடுபடுவதில்லை. எப்போதும் கத்தி வைத்துக்கொள்ளுங்கள், மண்ணெண்ணெய் வைத்து கொள்ளுங்கள் என்று பெரியார் சொல்லி இருந்தாலும், அவர் என்றைக்குமே கலவரத்தில் தன் தொண்டர்களை ஈடுபடுத்தியதேயில்லை.
அனைத்துமே சட்ட வழியிலான போராட்டங்கள். 1952ல் திராவிட விவசாயத் தொழிற் சங்கம் நிகழ்த்திய போராட்டங்களாலும் பெரியராலும் 'தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் 1952' ராஜாஜி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. வேலைக்கு வரும் எந்த ஒரு விவசாயியையும் அன்றைக்கு வேலைக்கு வேண்டாம் என்று சொல்ல கூடிய நிலை இருந்து வந்தது. இந்த சட்டத்தின் மூலம் 6 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் பண்ணையாளை வேலையை விட்டு நீக்கினால் 6 மாத சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம்.
1954ல் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டிற்கு அம்பேத்கர் உடல்நிலை காரணமாக கலந்து கொள்ள முடியாத பொழுது அவரின் சார்பாக கலந்து கொண்டு பேசிய ராஜ் போஜ் 'ஆதிதிராவிட மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்காதீர்கள். உங்களுக்கு திராவிட விவசாயத் தொழிற் சங்கம் தான் ஏற்றது' என்று பேசி இருக்கிறார். இங்கே அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இந்திய கம்யூனிஸ்ட்கள் மேல் இருக்கும் கோபத்தை நினைவு கூறலாம். தோழர் தியாகு அந்த பேட்டியில் குறிப்பிட்டதை போல இருவருமே எந்த போராட்டங்களிலும் கலவரத்தில் ஈடுபட்டதேயில்லை.
கீழ்வெண்மணி படுகொலையை தொடர்ந்து பெரியார் எதுவுமே செய்யவில்லை என்ற குற்றசாட்டு உள்ளது. அந்த படுகொலையின் போது பெரியாருக்கு வயது 89 வயது. உடல்நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்வை அறிந்ததும் பெரியார் மருத்துவமனையிலேயே கட்டுரையை எழுத, அடுத்த நாள் அது விடுதலையில் பிரசுரிக்க படும் என்று முதல் நாளிலேயே விடுதலையில் துணுக்கு செய்தி வெளியிடப்பட்டதாக திருமாவேலன் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
'விவசாய தொழிலார்களுக்கிடையே மோதல்' என்று தலைப்பில் விடுதலையில் செய்தி வெளியாகி இருப்பதை தோழர் தியாகு சுட்டிக்காட்டி, 'இது மோதலா? பண்ணையார் தன்னிடம் வேலை பார்க்கும் பண்ணையாளை கொன்றிருக்கிறான். அதற்கு எதிர்வினையாற்றுவது எப்படி மோதலாகும்?' என்று கேட்டிருந்தார். பெரியார் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். அதில் ஒன்றில் கம்யூனிஸ்ட்களை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். 'கம்யூனிஸ்ட்கள்' என்ற பெயரால் எந்த கட்சிக்கும் அனுமதி வழங்க கூடாது.
இவ்வளவு காட்டமாக அறிக்கை விடும் அளவிற்கு பெரியாருக்கு கம்யூனிஸ்ட்கள் மேல் என்ன கோவம் இருந்திருக்கும் என்றால், மீண்டும் சட்ட போராட்டத்தை விடுத்து ஆயுத போராட்டத்தை கையில் எடுத்ததில் பெரியாருக்கு உடன்பாடு இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். அதனாலேயே அதை 'மோதல்' என்று குறிப்பிடுகிறார். பெரியார் ஒரு போராட்டத்தை அறிவிக்கும் பொழுதும் தன் தொண்டர்களுக்கு சொல்வது 'காவல்துறை தாக்கினால், அடியை வாங்கிக்கொள்ளுங்கள் . திருப்பி தாக்காதீர்கள்' என்பது தான். ஆயுதம் ஏந்தாமல் விடுதலை கிடைத்து விடுமா என்றால், அது அந்த போராட்டத்தை பொறுத்தது. ஆயுதம் ஏந்திய போராளிகள் தான் பல விளிம்பு நிலை மக்களுக்கு காவலாக இருக்கிறார்கள். ஆனால் பெரியாருக்கு அதில் எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை. கலவரம் வெடித்தால் பாதிக்கப்பட போவது விளிம்பு நிலை மக்களாக தான் இருக்க முடியும் என்பதை தான் கீழ்வெண்மணி சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
பெரியார் கூலி உயர்விற்கான போராட்டங்களை முன்னெடுத்ததேயில்லை. தொழிலார்கள் பங்குதாரர்கள் ஆவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றவர். அது சாத்தியமா என்று தோழர் தியாகு கேட்கிறார். 'ஏற்ற தாழ்வை கற்பிப்பது மதமும் கடவுளும் தான் என்றால் அந்த கடவுள் நம்பிக்கையையே அழித்து ஒழிப்பது என் வேலை' என்று சொல்லி செயலிலும் ஈடுபட்டவர் பெரியார். கடவுள் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக அழித்து விட்டாரா? ஒரு விஷயம் சாத்தியமா இல்லையா என்பது இல்லை கேள்வி. தவறான ஒரு விஷயத்தை அழித்து ஒழிக்க எடுக்கும் முயற்சியே முக்கியம்.
தோழர் தியாகுவும் மற்ற கம்யூனிஸ்ட் தோழர்களும், தங்கள் மார்க்ஸிய வழியில் இருந்து திராவிட சிந்தனை மூலம் பெரியாரின் செயல்களை எடைபோட்டால் இந்த விமர்சனங்களை அவர் மேல் இனியும் வைக்க மாட்டார்கள்.
அடுத்ததாக அண்ணா.
கீழ்வெண்மணி சம்பவம் நிகழ்ந்த 35 நாட்களில் அண்ணா இறக்கிறார். அண்ணாவின் மரணம் திடீர் மரணம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. பல மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்தார்.
இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததும் ஒரு முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும்? உடனடி விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்வது.
விவரம் தெரிந்ததும், மரணத்தின் விளிம்பில் இருக்கும் அண்ணா தன் அமைச்சரவையில் இருந்து இரண்டு முக்கிய மந்திரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறார். கலைஞரும் (பொதுப்பணித்துறை அமைச்சர்) மற்றும் மாதவன் (சட்டத்துறை அமைச்சர்) ஆய்வு செய்துவிட்டு அண்ணாவை சந்திக்கிறார்கள். அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அண்ணா இரவு 1.30 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்துகிறார். அடுத்த நாள் கணபதியாபிள்ளை கமிஷன் அமைக்கிறார்.
குற்றவாளிகள் கைது செய்யபடுகிறார்கள். இந்த வழக்கை நீதி விசாரணையாக பதிவு செய்ய வேண்டுமா அல்லது கொலைவழக்காக பதிவு செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்த பொழுது, அண்ணா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த தோழர் பி.இராமமூர்த்தியின் ஆலோசனை படி கொலை வழக்காக பதிவு செய்ய உத்தரவிடுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வெண்மணி படுகொலையை கண்டித்து ஒரு பெரும் போராட்டத்தை அறிவித்தது. அதனை அடுத்து சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்க படுகிறது. தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவிக்க, அண்ணா தலையிட்டு போராட்டத்திற்கு அனுமதி வழங்கினார். 30 டிசம்பர் 1968 போராட்டம் நடைபெற்றது.
அதன் பிறகு கூலி உயர்வு தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த என். சங்கரய்யயாவும், ஏ. பாலசுப்ரமணியமும் அண்ணாவை சந்திக்க, பேச்சுவார்த்தையின் மூலம் பண்ணையாட்களுக்கு அரைப்படி நெல் கூலி உயர்வு நிர்ணயிக்கப்பட்டது.
இதில் அண்ணா தவற விட்டது என்ன?
10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற கோபால கிருஷ்ணா நாயுடு மேல் முறையீட்டில் விடுதலை பெற்று வந்த பொழுது , அண்ணா பெரியார் இருவரும் உயிருடன் இல்லை. விடுதலைக்கு பிறகு சில ஆண்டுகளில் தியாகிகள் நினைவிடத்தி்ன் அருகில் கோபால கிருஷ்ணன் வெட்டி சாய்க்கப்படுகிறார். அதன் தொடர்பாக கைதான 12 பேரில் 9 பேர் திராவிட கழகத்தை சார்ந்தவர்கள்.
ஒருவேளை பெரியார் அப்போது உயிருடன் இருந்திருந்தால், கொலை செய்த தன் தொண்டர்களை நிச்சயமாக கண்டித்திருப்பார். அவர் தான் பெரியார்.
கீழ்வெண்மணியில் கொல்லப்பட்டவர்களுக்கு எந்த வகையிலும் நியாயம் வழங்க படுவே முடியாது. அவர்கள் சந்தித்தது அவ்வளவு பெரிய வன்கொடுமை. உயிருடன் இருந்த காலத்திலேயே. இது முழுக்க முழுக்க ஒரு வர்க்க போராட்டம் தான். ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஏன் பள்ளர்களாக இருந்தார்கள்? வர்க்க போராட்டம் என்றால் மற்ற ஜாதி பண்ணையாட்கள் எல்லாம் என்ன ஆனார்கள்?
இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் எப்படி அரசியலை விட சமூக விடுதலையே முக்கியம் என்று பெரியாரும் அம்பேத்கரும் செயல்பட்டார்களோ, அரசியல் விடுதலை பின்பும், வர்க்க போராட்டத்தை விட ஜாதி ஒழிப்பு போராட்டத்தை தான் முதன்மை படுத்தினார்கள். இன்றைக்கும் வரைக்கும் அது தான் நிலை.
கம்யூனிஸ்ட் தோழர்கள் இனிமேலாவது பெரியார் அண்ணாவின் செயல்பாடுகளை திராவிட கண் கொண்டு பார்த்து அவர்களின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பலாம்.

 May be an image of 1 person and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக