சனி, 28 டிசம்பர், 2024

தமிழர்களின் நூறாண்டு செம்மொழி கனவை நிறைவேற்றியவர் மன்மோகன் சிங் : டெல்லியில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் உருக்கம்!

 minnambalam.com - christopher  :  மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 27) நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அவசர சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு 9.50 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், மன்மோகன் சிங் உடலுக்கு மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் சென்ற திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மன்மோகன் சிங் மனைவி கவுரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில், “மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கு ஒரு பேரிழப்பு. தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் வர அவர் காரணமாக இருந்தார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மதுரவாயல் திட்டமாக இருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தி தருவதாக இருந்தாலும், அதே போல் நூறு நாள் வேலைத் திட்டம் என்ற புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர் மன்மோகன் சிங்.

எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களின் நூறாண்டு கனவாக இருந்த தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை சோனியா காந்தி துணையுடன் நிறைவேற்றி தந்தார்.

மேலும் மெட்ரோ ரயில் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றை தமிழ்நாட்டுக்கு வர காரணமாக இருந்தார் மன்மோகன் சிங்.

கலைஞரோடு நெருங்கி பழகக்கூடியவராக நட்புறவுடன் இருந்தவர். அவரது இழப்பு வேதனைக்குரிய ஒன்று. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினரும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என ஸ்டாலின் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக