ஞாயிறு, 15 டிசம்பர், 2024

தமிழ்நாட்டில் 5,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Kalaignar Seithigal - Prem Kumar :  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.12.2024) தாம்பரம் சென்னைக் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 45,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள எம்.சி.சி - எம்.ஆர்.ஃஎப் புத்தாக்க (இன்னோவேசன்) பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.  
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “இந்த வளாகம் என்னால் மறக்கமுடியாத ஒரு வளாகமாகும். இந்த வளாகம் என் மனதிற்கு மிக நெருக்கமானதாகும். நான் அமெரிக்கா செல்வதற்காக 1996 இல் இந்த வளாகத்தில்தான்  எனது TOEFL நுழைவுத் தேர்வுகளை எழுதினேன். எனவே இந்த வளாகத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கின்றேன்.

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் MCC-MRF புத்தாக்கப் பூங்காவைத் திறந்து வைப்பதற்காக உங்கள் முன் நிற்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன். இந்தியாவின் தலைசிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாக திகழ்கின்ற இந்த பெருமை வாய்ந்த மெட்ராஸ் கிறித்தவ கல்லூரிக்கு வந்து உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன்.
“தமிழ்நாட்டில் 5,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டின் பெருமைமிக்க தூண்களில் ஒன்றாக திகழும் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி, நீண்ட காலமாக மக்களுக்கு, குறிப்பாக விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி சேவையை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்தக் கல்லூரி இன்னும் 12 ஆண்டுகளில் தன்னுடைய 200-ஆவது ஆண்டு விழாவை காண இருக்கின்றது. அதற்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  200 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் படிக்க இயலும் என்றிருந்த நிலையை மாற்றி, எல்லோரும் படிக்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கியது நம்முடைய மெட்ராஸ் கிறித்தவ கல்லூரி என்பதை இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன். எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மெட்ராஸ் கிறித்துவ கல்லூரியின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகும்.

   2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதற்காக, திராவிட மாடல் அரசு ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, வழிகாட்டுதல் தமிழ்நாடு, ஃபேம் தமிழ்நாடு போன்ற பல புதிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சிகள் மாநிலத்தின் புதுமை, தொழில்முனைவு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன.
“தமிழ்நாட்டில் 5,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

   இந்த குறிப்பிடத்தக்க புத்தாக்க பூங்காவை நிறுவியதன் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குறிக்கோளுக்கு பங்களிக்க MCC மற்றும் MRF இங்கு கைகோர்த்துள்ளன என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன். 45,000 சதுர அடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிலேயே முதல் புத்தாக்க மையம் இதுவாகத்தான் இருக்கும் என்பதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

   ஐஐடி போன்ற பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமே பாரம்பரியமாக இதுபோன்ற கண்டுபிடிப்பு மையங்களை நாம் பார்த்திருப்பதால், இந்த பூங்கா ஒரு மகத்தான முன்னேற்றமாகும்.   இது உண்மையிலேயே ஒரு புரட்சிகரமான சாதனையாகும். இக்காட்சியை நனவாக்க அயராது உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 இந்த பூங்காவிற்குள் கம்ப்யூடேஷனல் இன்ஃபர்மேடிக்ஸ் லேப், சைக்கோமெட்ரிக் லேப், டேட்டா அனலிட்டிக்ஸ் லேப், பிசினஸ் அனலிட்டிக்ஸ் லேப் மற்றும் ரைட்டர்ஸ் லேப் உள்ளிட்ட ஆய்வகங்கள் மற்றும் வசதிகள் உள்ளதை கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்நிறுவனத்தின் மாணவர்கள் பல்வேறு தளங்களில் தங்களின் திறன்களையும், சிறப்பையும் மேம்படுத்த இணையற்ற வாய்ப்புகளை இந்த பூங்கா வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த புத்தாக்க பூங்கா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது.
“தமிழ்நாட்டில் 5,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

  வருகின்ற ஆண்டுகளில் தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும் என நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்பார்க்கின்றார். இங்கு அமைக்கப்பட்டுள்ள புத்தாக்க பூங்கா விரைவில் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன். இது நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமின்றி இந்தியாவின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும்.

இந்த அதிநவீன வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இக்கல்லூரி  மாணவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அதை முழுமையாகப் பயன்படுத்தினால், வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வழங்குபவர்களாக உயர்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.


  இந்த புத்தாக்க பூங்கா மாணவர்களின் திறன்கள், நுண்ணறிவுகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தி, மாணவர்களின் எதிர்காலத்திற்கு மட்டுமல்லாது நமது மாநிலம் மற்றும் நமது நாட்டின் எதிர்காலத்திற்கும் வழி வகுக்கும். இந்த பெருமைமிகுந்த திட்டத்திற்கு ரூ.30 கோடி வழங்கி பங்காற்றிய எம்.ஆர்.எப் நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 இந்தப் புத்தாக்கப் பூங்காவை உருவாக்கி முன்னோடியாக விளங்கும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாக்க பூங்கா நமது மாணவர்கள் மற்றும் நமது மாநிலத்தின் எதிர்காலத்தில் தாக்கத்தை உருவாக்கும்  என ஆவலுடன் எதிர்பார்கின்றேன் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக