ஞாயிறு, 15 டிசம்பர், 2024

இளங்கோவன் மறைவு... அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் ராகுல்

minnambalam.com - Selvam  :  இளங்கோவன் மறைவு… அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் ராகுல்
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று (டிசம்பர் 14) காலமானார்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நேர்மையான மற்றும் தைரியமான தலைவர் இளங்கோவன். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கு கொள்கைகளை நிலைநிறுத்த அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.

உறுதியான அர்ப்பணிப்புடன் தமிழக மக்களுக்கு சேவை செய்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அச்சமற்ற மற்றும் கொள்கை ரீதியான தலைவர் இளங்கோவன். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர்.  தமிழ்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு சேவை என்றென்றும் உத்வேகமளிக்கக்கூடிய நினைவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் நாளை தமிழகம் வர இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக