சனி, 12 அக்டோபர், 2024

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து: சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதின.. தீப்பிடித்த பெட்டிகள்

 zeenews.india.com 0 Sripriya Sambathkumar  :  திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் ஒன்றும் மைசூரு தர்பாங்கா பயணிகள் விரைவு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் குழப்பமும் பதட்டமும் நிலவுகின்றது.
 ரயில்கள் மோதிய வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிகின்றன. தீயணைப்புத் துறையினரும் உள்ளூர் மக்களும் தீயை அணைக்க மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மைசூரில் இருந்து சென்னை வழியாக பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய வேகத்தில் இரண்டு ரயில் பெட்டிகள் தரம் புரண்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, ரயிலில் திடீரென தீப்பற்றியதாகவும். இதன் காரணமாக பயணிகள் ரயிலில் இருந்து அலறி அடித்தபடி வெளியேறியதாகவும் நேரில் பார்த்த மக்கள் தெரிவித்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் உடனடியாக அங்கு சென்று உதவிகளை செய்து வருகின்றனர். மேலும், அங்கு விரைந்துள்ள தீயணைப்புத்துறை அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வரும் நிலையில், சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் விபத்து நடந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடம் நகர் பகுதியில் இருந்து தள்ளி இருப்பதால் இருள் சூழ்ந்துள்ள நிலையில், பயணிகளை காப்பாற்ற மீட்பு படையினர் முழு முனைப்புடன் முயற்சித்து வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதி ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ளது. ஆகையால், அங்கிருந்தும் காவல்துறையினரும், பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்புத் துறையினரும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக