சனி, 12 அக்டோபர், 2024

நுவரெலியா 12 மாணவிகளை மிக கொடூரமாக தாக்கிய ஆசிரியை

tamilmirror.lk -  ஆ.ரமேஸ் :  நுவரெலியாவில் பிரபல மகளிர்  பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் 12 மாணவிகள் தலைமை ஆசிரியை ஒருவரால்  மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டதற்கு நீதி வழங்குமாறு பெற்றோர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையம் மற்றும் கல்வி திணைக்களத்தில் முறையிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான 12 மாணவிகளில் ஒரு மாணவி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
குறித்த மாணவிகளுக்கு  பாடசாலை நிறைவடைந்த பின் மாலை நேர மேலதிக வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இந்த வகுப்புகளில் பங்குபற்றியிருந்த மாணவிகள் பகல் உணவு உண்டபின் கைகளை கழுவ சென்று வகுப்பறைக்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டதால் அவர்களை ஆசிரியை தாக்கி தண்டித்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் தாக்குதலுக்கு உள்ளான மாணவிகளில் ஒரு மாணவிக்கு முதுகு மற்றும் கால்களில் தாக்குதல் பலமாகியுள்ள நிலையில் அம் மாணவி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது பிள்ளைக்கு நேர்ந்த கதியினால் ஆத்திரம் கொண்ட பெற்றோர் பிள்ளைக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர், (11) காலை, நுவரெலியா  கல்வி அலுவலக அதிகாரிகளுக்கும் முறையிட்டுள்ளனர்.

பின்னர், இந்த சம்பவத்தை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி நீதி வழங்கப்பட வேண்டும் என பெற்றோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் நீதியான விசாரணையை முன்னெடுத்து தீர்வை பெற்றுதருவதாகவும் இனிமேலும் இவ்வாறான செயல் இடம்பெற இடமளிக்கப்போதில்லை என்றும் தெரிவித்தனர். R

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக