சனி, 12 அக்டோபர், 2024

ரத்தன் டாடாவுக்கு பாரம்பரிய தமிழ் மருத்துவம் செய்த கோவை வைத்தியர் லட்சுமணன்

ரத்தன் டாடா

bbc.com:- சேவியர் செல்வக்குமார் :  “ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வீதமாக, பல மணி நேரம் அவருக்கு அவரது வீட்டிலேயே சிகிச்சை கொடுத்தேன். அந்த நேரங்களில் எத்தனையோ விஷயங்களை எங்களிடம் அவர் பேசினார்.”
இந்த வார்த்தைகளைச் சொல்வது கோவை மருதமலையைச் சேர்ந்த வர்ம வைத்தியர் கோ.மு.லட்சுமணன். அவர் தன்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறியது, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவை.
கோவை மருதமலை அடிவாரத்தில் வர்ம முறையிலான தமிழ்ப் பாரம்பரிய வைத்திய சாலை ஒன்றை நடத்தி வருகிறார் லட்சுமணன். கடந்த 2019-ஆம் ஆண்டில், மும்பையில் ரத்தன் டாடாவின் வீட்டில் வைத்தே பல நாட்கள் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார் இவர்.

ரத்தன் டாடாவின் மறைவுக்கு, தன் மனைவி மனோன்மணியுடன் மும்பைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டுத் திரும்பி வந்திருக்கிறார்.

ரத்தன் டாடாவுக்குச் சிகிச்சை அளித்தது பற்றி பிபிசி தமிழிடம் பேசினார் லட்சுமணன்.

சந்திப்பு எப்படி நிகழ்ந்தது?
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், டாடா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.கே.கிருஷ்ணகுமார் தன்னை ஃபோனில் தொடர்பு கொண்டதாகச் சொல்கிறார் லட்சுமணன். “அவர் கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்தவர். அவர் மும்பையில் ஒரு வி.வி.ஐ.பி-க்கு நீங்கள் நேரில் வந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்று கேட்டார். யாருக்கு என்று அப்போது அவர் சொல்லவில்லை,” என்கிறார்.

தொடர்ந்து, “அதற்கு நான், ‘பாரம்பரியமாக இங்கு எங்களைத் தேடி வருபவர்களுக்கு மட்டும்தான் நாங்கள் சிகிச்சை தருகிறோம். வெளியில் சென்று சிகிச்சை தருவதில்லை என்று கூறி மறுத்து விட்டேன். அதற்குப் பின் பல மாதங்களாக அவர் எங்களைத் தொடர்பு கொள்ளவேயில்லை,” என்று டாடா குழுமத்திலிருந்து முதலில் வந்த அழைப்பைப் பற்றி லட்சுமணன் கூறுகிறார்.

அதற்குப் பின், மீண்டும் டாடா குழுமத்திலிருந்து தொடர்பு கொண்டது பற்றிப் பேசிய அவர், “2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிருஷ்ணகுமார் மீண்டும் என்னை அழைத்தார். நாங்கள் சிகிச்சை அளிக்குமாறு கேட்டது, ரத்தன் டாடாவுக்குத்தான். அவர் முதுகுவலியாலும், முழங்கால் வலியாலும் பெரிதும் அவதிப்படுகிறார். உங்களைப் பற்றி எனது தமிழ் நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்டேன். ஒரு மாதமாக உங்களின் வைத்திய நிலையம் பற்றி எங்களுடைய குழுவினர் களத்தில் நேரில் விசாரித்தனர். அவர்கள் சொன்னதை வைத்தே நான் உங்களிடம் மீண்டும் பேசுகிறேன்’ என்றார்,” என்கிறார் லட்சுமணன்.

“இதுபற்றி என் மனைவி மனோன்மணியிடம் பேசினேன். அவர், ‘நிச்சயமாக நீங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.’ என்றார். அதன்பின், நானும் என் மனைவியும் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பைக்குச் சென்றோம்,” என்று சிகிச்சைக்குச் சென்றது பற்றி லட்சுமணன் கூறுகிறார்.
ரத்தன் டாடா
ரத்தன் டாடா
படக்குறிப்பு, கோவை மருதமலை அடிவாரத்தில் வர்ம முறையிலான தமிழ்ப் பாரம்பரிய வைத்திய சாலை ஒன்றை நடத்தி வருகிறார் லட்சுமணன்

பாரம்பரியத் தமிழ் வைத்திய முறை
ரத்தன் டாடாவுக்கு சிகிச்சை அளித்தது குறித்துப் பேசிய லட்சுமணன், மும்பையில் அவருடைய வீட்டுக்கு அருகிலுள்ள கெஸ்ட் ஹவுஸிலேயே தங்களைத் தங்க வைத்ததாகச் சொன்னார்.

“அங்கிருந்தபடி, அவருடைய வீட்டிற்கே சென்று தினமும் 2 மணி நேரம் சிகிச்சை அளித்தேன். வழக்கமாக இங்கு வரும் நோயாளிகளுக்கு அதிகபட்சமாக ஐந்து நிமிடங்கள்தான் வர்ம முறையில் சிகிச்சை தருவோம். அவருக்கு உழிச்சல் முறையில் தலைமுதல் பாதம் வரை ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதற்கு வர்ம முறையில் சிகிச்சை அளித்தேன்,” என்கிறார் லட்சுமணன்.

தான் அளித்த சிகிச்சையில் திருப்தியடைந்த ரத்தன் டாடா பாரம்பரியத் தமிழ் வைத்திய முறையைப் பற்றி சிலாகித்துப் பேசினார், என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த லட்சுமணன், அப்போது ரத்தன் டாடாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் காண்பித்தார்.

இந்தச் சிகிச்சைக்கு அடுத்த மாதமே ரத்தன் டாடாவுக்குக் காலில் சற்று வீக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, கிருஷ்ணகுமார் மீண்டும் தன்னை அழைத்ததாகக் கூறுகிறார்.

“அப்போதும் அங்கு சென்று 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை கொடுத்தோம். அவருக்குச் சிகிச்சை அளித்த 20-லிருந்து 25 மணி நேரங்களில், எத்தனையோ விஷயங்களை எங்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார். பெரும்பாலும் குடும்பத்தைப் பற்றியே அதிகமாக விசாரிப்பார். ஒரு நாள், இந்த வைத்தியக் கலையை உலகம் முழுக்க எப்படி கொண்டு செல்லப் போகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘அது என் கையில் இல்லை; உங்களிடம்தான் இருக்கிறது.’ என்று சொன்னேன். உடனே தன் கட்டை விரலை உயர்த்தி ‘தம்ஸ்அப்’ காண்பித்தார்,” என்கிறார்.

“ஒரு நாள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, மீண்டும் அவரது குடும்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர், ‘விதியின் விளையாட்டு’ என்றார். அவ்வளவு பெரிய மனிதர், இவ்வளவு எளிமையாக என்னிடம் பேசியதை எப்போது நினைத்தாலும் பிரமிப்பாயிருக்கும்,” என்று ரத்தன் டாடாவின் எளிமையைப் பற்றி பிபிசி தமிழிடம் தெரிவித்தார் லட்சுமணன்.

படக்குறிப்பு, சிகிச்சைக்காக இவர்கள் மும்பை சென்றிருந்தபோது, டாடா நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகரையும் கிருஷ்ணகுமார் அறிமுகப்படுத்தியுள்ளார்

‘ரத்தன் டாடாவின் எளிமை வியக்கத்தக்கது’
ரத்தன் டாடா
ரத்தன் டாடாவுக்குச் சிகிச்சை அளிக்கச் சென்ற போது லட்சுமணனுடன் சென்ற அவரின் மனைவி மனோன்மணி, வர்மம், எண்ணெய், ஒத்தடம் போன்ற முறையில் சிகிச்சை கொடுத்தது பற்றி ரத்தன் டாடா ரொம்பவே ஆச்சரியப்பட்டார், என்கிறார்.

“அவருக்குச் சிகிச்சை அளித்ததற்கு எந்தப் பணமும் வேண்டாம் என்று நாங்கள் சொன்னதால், மிகவும் ஆச்சரியப்பட்டு, ‘மனோன்மணி, நீங்கள் என் மகளைப் போன்றவர். கோவைக்கு நான் வரும்போது, கட்டாயமாக உங்கள் வீட்டுக்கு வருவேன்’ என்றார். அதன்பின், கோவைக்கு அவர் வருவதாக தாஜ் ஓட்டலில் இருந்து தகவல் தெரிவித்தார்கள். ஆனால் அந்தப் பயணம் ரத்தாகிவிட்டது,” என்கிறார்.

“அவரது எளிமை வியக்கத்தக்கது. அவர் எங்கள் மீது காட்டிய அன்பை மறக்கவே முடியாது. அதனால்தான் அவரது மறைவுச் செய்தி கேட்டதும், உடனடியாக இருவரும் புறப்பட்டுச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்,” என்று ரத்தன் டாடாவுடனான சந்திப்பு அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் மனோன்மணி.

லட்சுமணனை மும்பைக்குச் சிகிச்சைக்கு அழைத்த ஆர்.கே.கிருஷ்ணகுமார், கடந்த 2022-ஆம் ஆண்டில் இயற்கை எய்திவிட்டார். அதற்கு முன்பாக, இந்தச் சிகிச்சைக்காக இவர்கள் மும்பை சென்றிருந்தபோது, டாடா நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகரையும் கிருஷ்ணகுமார் அறிமுகப்படுத்தியுள்ளார். அவரும் இவர்களுடன் பேசியுள்ளார். அந்தப் புகைப்படத்தையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார் லட்சுமணன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக