சனி, 28 செப்டம்பர், 2024

பள்ளிக்கூட நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துங்கள்! இலங்கை புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியா அதிரடி

File video :  

 ஹிரு நியூஸ்  : பள்ளிக்கூட நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துங்கள்! இலங்கை புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியா அதிரடி
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையில் வினாக்கள் கசிவு தொடர்பான சர்ச்சைகள் குறித்து மதிப்பீடு செய்ய பேராசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிக்குமாறும் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் திலக ஜயசுந்தரவிடம் நேற்று (26) பணிப்புரை விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள கேள்விகளுடன் அந்த மதிப்பெண்களைச் சேர்ப்பதா அல்லது வேறு ஏதாவது நடவடிக்கை எடுப்பதா என்பதை நிபுணர் குழுவின் பரிந்துரைகளின்படி முடிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்று கேள்விகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள வினாக்களுடன் அந்த மதிப்பெண்களைச் சேர்க்கத் துறை முன்பு முடிவு செய்தது.

இதன்படி, சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இடைக்கால அறிக்கை கிடைத்த பின்னர் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் வரை தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக